வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

தனுஷ்கோடி அழிந்து போன 51 ஆம் ஆண்டு துவக்கம்!

ழிப்பேரலைக்குள் மூழ்கி இன்றும் அதன் மிச்சசொச்சங்களுடன் நினைவு சின்னமாக திகழும் தமிழகத்தின் துறைமுக நகரங்களில் ஒன்றான தனுஷ்கோடி, அழிந்து போன 51 ஆம் ஆண்டு துவக்கத்தில் இன்று கால் பதிக்கிறது.இந்திய நாட்டின் தென்கோடி எல்லைப்பகுதி தனுஷ்கோடி. ராமனின் கையில் இருந்த வில்லினை போன்ற தோற்றம் கொண்ட நிலப்பகுதி இது என்பதால் இதற்கு தனுஷ்கோடி என்ற பெயர் வந்ததாக வரலாறு உண்டு. வரலாற்றில் இடம் பிடித்திருக்கும் தனுஷ்கோடி, இன்றுவரை மனிதர்கள் வசிக்க தகுதியற்ற பகுதியாகதான் அரசால் கூறப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் 1964 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கோரப்புயல் தான்.1964 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதி தெற்கு அந்தமான் பகுதியில் புயல் ஒன்று உருவானது. இந்த புயல் மெல்ல மெல்ல வழுவிழந்து இலங்கையை நோக்கி நகர்ந்தது. மணிக்கு 400 முதல் 550 கி.மீ வேகத்தில் வந்த இந்த புயல் டிசம்பர் 22 ஆம் தேதி இலங்கையின் தமிழர்கள் வாழும் பகுதிகளான வவுனியாவை தாக்கியது. அதன்பின், வங்க கடலில் உள்ள பாக்ஜலசந்தி கடலில் மையம் கொண்ட இந்த புயல்தான் 23 ஆம் தேதி அதிகாலை தனுஷ்கோடியை நோக்கி வந்தது. இந்த புயலின் வெளிப்பாடாக மணிக்கு 280 கி.மீ வேகத்தில் காற்று வீசியதுடன் கடும் மழையும் பெய்தது. இந்த புயல்தான் தங்கள் வாழ்க்கையை புரட்டிபோட உள்ளது என்பதை அறியாத மக்கள் வழக்கம் போல் தங்கள் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இதில், பாம்பன்-தனுஷ்கோடி இடையிலான பயணிகள் ரயிலும் ஒன்று.இந்தியா வழியாக இலங்கை செல்ல விரும்புபவர்களுக்கென அந்நாளில் போட் மெயில் சர்வீஸ் இருந்து வந்தது. ரயில் மற்றும் கப்பல் வழி பயணமான இதில், சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் ரயிலில் தனுஷ்கோடிக்கு முதலில் வரவேண்டும். அங்கிருந்து இலங்கை செல்ல தயாராக இருக்கும் இர்வின் கோஷன் என்ற கப்பலில் பயணித்து இலங்கையை அடையலாம். இது தவிர, தனுஷ்கோடிக்கு வர விரும்பும் யாத்திரைவாசிகள் மற்றும் உள்ளூர் பயணிகளுக்காக ‘வாட்டர் டாங்’ எனப்படும் பயணிகள் ரயிலும் நாள்தோறும் இயங்கி வந்தது.இந்த ரயில் 23 ஆம் தேதி நள்ளிரவு தனுஷ்கோடியை நோக்கி வந்து கொண்டிருந்தது. தனுஷ்கோடியை அடைய சில நூறு அடி தூரமே இருந்த நிலையில், பலத்த காற்றுடன் மழையும் கொட்ட துவங்கியது. இதனால், தனுஷ்கோடிக்கு ரயில் வருவதற்கான அனுமதி சிக்னல் கொடுக்கப்படவில்லை. கடும் இருட்டில் மழையும் கொட்டியதால் ரயில் டிரைவரால் அந்த சிக்னலை பார்க்க முடியவில்லை. இதனால் பயணிகள் ரயில் தனுஷ்கோடியை நோக்கி செல்ல, அந்நேரத்தில் எழுந்த ஆழிப்பேரலை ரயிலின் 6 பெட்டிகளை ஆழ்கடலுக்குள் இழுத்து சென்றது. நள்ளிரவு நேரம் என்பதால் ஜன்னல்கள், கதவு என அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் ரயிலில் பயணித்த 115 பேரும் பரிதாபமாக பலியாகினர். ஆழிப்பேரலையின் இந்த கோர தாண்டவம் பற்றிய செய்திகூட இரு நாட்களுக்கு பின்னரே அரசு நிர்வாகங்களுக்கு தெரிய வந்தது.இதன்பின்னரும் தொடர்ந்து வீசிய புயலில் சிக்கி தனுஷ்கோடி நகரமே உருக்குலைந்து போனது. இங்கிருந்த ரயில் நிலையம், அஞ்சலகம், கோயில்கள், தேவாலயம், நகரியம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் என ஒன்றுகூட புயலுக்கு தப்பவில்லை. ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட பிரமாண்ட கட்டடங்களே கடலால் துவம்சம் செய்யப்பட்ட நிலையில், ஏழை மீனவர்களின் வீடுகள் என்னவாகியிருக்கும் என நினைத்துகூட பார்க்க முடியவில்லை. அந்தளவிற்கு சுமார் 5 மீட்டர் உயரத்திற்கு கடல் நீராலும், மணல் திட்டுகளாலும் தனுஷ்கோடி நகரம் மூழ்கடிக்கப்பட்டது. இதில் 1,800க்கும் மேற்ப்பட்டவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.புயலின் கோரத்தை உணர்ந்த அரசு, தனுஷ்கோடி பகுதியை இனி மனிதர்கள் வாழ தகுதியற்ற பகுதியாக (Unfit for living) அறிவித்தது. தனுஷ்கோடியில் வசித்த மக்களுக்காக புதிய வாழ்விடங்கள் உருவாக்கப்பட்டு அங்கு குடியமர்த்தப்பட்டனர்.ஊரையே தனக்குள் உள்வாங்கி கொண்ட வங்க கடலால் வளைக்க முடியாமல் போனது தனுஷ்கோடியில் இருந்த துறைமுக பாலமாகும். அந்த அளவிற்கு அந்த பாலம் உலோக கலவைகளால வார்க்கப்பட்டிருந்தது. அங்கிருந்து இனி கப்பல் போக்குவரத்தினை இயக்க வாய்ப்பில்லாமல் போனது. இதனால், கப்பல் பயன்பாட்டிற்கு உதவிய துறைமுக பாலம் புயலுக்கு பின் அப்பகுதியில் தங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட மீனவர்களுக்கு உதவி வந்தது.ஆனால், உருக்கி ஊத்தப்பட்ட உலோகங்களால் உருவான இந்த பாலம் அதிகார அரசியல் வர்கத்தின் கண்களை உறுத்தியது. இதனால், கடந்த 90களின் துவக்கத்தில் இந்த பாலம் தனியாரிடம் ஏலம் விடப்பட்டது. ஏலம் எடுத்தவர்கள் பாலத்தினை துகள் துகளாக பெயர்த்தெடுத்து சென்றனர். இப்போது, அந்த பாலத்தை கட்ட வேண்டும் எனில் பலகோடி தேவைப்படும். ஆனால், பாலத்தை ஏலம் விட்டதின் மூலம் அரசுக்கு கிடைத்த வருவாயோ சொற்பமான தொகைதான். பாலத்தினை ஏலம் எடுத்தவர்களுக்கும் அதற்கு உதவிய மக்கள் பிரதிநிகள் சிலரும் அடைந்ததோ கொள்ளை லாபம். இந்த பாலத்தினை தொடர்ந்து பராமரித்து இருந்தால் சேதுசமுத்திர திட்டதிற்கும், வரும் காலங்களில் தனுஷ்கோடி பகுதிகளில் ஏற்பட உள்ள வளர்சிக்கு பெரிதும் உதவியிருக்கும். மேலும், இலங்கையில் ஆதிக்கம் செலுத்தி வரும் சீன நாட்டினால் நம் நாட்டிற்கு எழுந்துள்ள அச்சுறுத்தல்களை சமாளிக்க நமது கடற்படை கப்பல்களுக்கு இந்த பாலம் இன்றியமையாததாக இருந்திருக்கும்.கடல் வழி போக்குவரத்து வளர்ந்து வரும் இக்காலத்தில், இருபுறமும் கடல் சூழ்ந்த தனுஷ்கோடிக்கு தற்போது மீண்டும் சாலை அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன. தேசிய நெடுஞ்சாலை துறையினர் சுமார் 53 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணியை துவக்கியுள்ளனர்.கடல் கொண்ட தனுஷ்கோடி பகுதியில் குடிதண்ணீர், சாலை, மின்சாரம் என எந்த அடிப்படை வசதியும் இல்லாத நிலையிலும், தனுஷ்கோடி கடலை தங்களை தாலாட்டும் தாயின் மடியாக கருதும் மீனவர்கள் இன்னும் அந்த மணற்குன்றுகளுக்கு மத்தியில் வாழ்வதையே வரமாக கருதி வசித்து வருகின்றனர். அந்த மீனவர்களுக்கு மட்டுமல்லாது நாடு முழுவதிலும் இருந்து தனுஷ்கோடியை காணவரும் சுற்றுலா பயணிகளுக்கும் 51 ஆண்டுகளுக்கு பின் அமைய இருக்கும் சாலை புதிய பாதையினை ஏற்படுத்தும்!

காய்வது கருவாடு மட்டும் அல்ல... எங்கள் வாழ்க்கையும்தான்!

புதுக்கோட்டை மாவட்டம், பேராவூரணியிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ளது மனோரா கடற்கரைப் பகுதி. ஈ.சி.ஆர் சாலையில் பயணிக்கும்போது  கருவாடு வாசம் நம் மூக்கை துளைக்கும். வழிநெடுக கருவாடுடன் சேர்ந்து காய்ந்து கொண்டிருப்பார்கள் அந்த தொழிலை மேற்கொள்ளும் மீனவர்கள்.   

காயவைக்கப்பட்ட மீன்கள் காண்பதற்கு அழகாகவும், உண்பதற்கு சுவையாக இருந்தாலும் இந்த மீனவர்களின் வாழ்வில் அந்த இரண்டும் இல்லை. அன்றாடம் அவர்கள் படும் இன்னல்களையும், இடர்பாடுகளும் எழுதிட முடியாதது.

மீனவர்கள் சிலரிடம் பேசியபோது கடற்கரையில் காயும் மீன்களைவிட அவர்கள் வாழ்க்கை இன்னும் காய்ந்துபோயிருந்ததை உணரமுடிந்தது. 

“கிலோ மீன் 100 ரூபாய்னு ஒரு மூட்டை வாங்கி வந்து அதுக்கு உப்பு 3 மூட்டை போட்டு கழிவெல்லாம் ஒதுக்கி இதுகளை காயவைக்கிறதுக்குள்ள நாங்க படுறபாடு சொல்லிமாளாதுய்யா… உப்பு, மீனு, வண்டி வாடகைன்னு காசு கரைஞ்சிடும். இது ஒரு பக்கம்னா, மழைகாலம் வேற. சும்மாவே வெயில் காலத்துல ரெண்டு முறை காஞ்சாதான் கருவாடு நல்லாவும் இருக்கும் அதே நேரத்துல வியாபாரத்துக்கும் எடுத்துக்கிட்டு போகலாம். ஆனா இப்ப இந்த மழைல கருவாட காய வைக்க முடியாம திணறவேண்டியதாகிடும்.

வெயில் காலத்துல 3 மூட்டை உப்பு போடுற இடத்தில் மழைகாலத்துல 4 மூட்டையா தேவைப்படும். இல்லைன்னா புழு வச்சிரும். அப்புறம் வாங்குன மீனெல்லாம் உபயோகமில்லாம போய் பெருத்த நஷ்டமாகிடும். கால நிலை ஒருபக்கம்னா, அதிகாரம் படைச்ச ஆளுங்க இன்னொருபுறம் எங்களை ஆட்டிப்படைக்கிறாங்கய்யா” என்கிறார் கண்களில் உப்பு நீர் வழிய அஞ்சலை என்ற பெண்மணி. விவரம் தெரிந்ததிலிருந்து கருவாடு தொழிலை மேற்கொண்டு வருகிறார் இவர். 

“அதிகார பலத்தில் எங்களிடமிருந்து அடிமாட்டு விலைக்கு கருவாடை கொள்முதல் பண்ணிக்கிட்டு வெளிச்சந்தையில அதிக இலாபத்துல விக்கிறாங்க அவங்க. உசுரை கொடுத்து உழைச்சா லாபத்தை அவங்க சம்பாதிக்கிறாங்க. இங்க தயாரிக்கிற கருவாடை சின்ன சின்ன கடைகளுக்கு கொண்டு போய் வித்து கிடைக்கிற நூறு, ஐம்பதை வெச்சுதான் எங்க வாழ்க்கைய ஓட்டுறோம்" என்கிற அஞ்சலையின் கண்களில் சோகம் அப்புகிறது. 

அஞ்சலை கண்ணீருடன் இதைச்சொல்லி முடிப்பதற்குள், இன்னொரு மீனவர் “இங்க நாங்க குடும்பத்தோட இந்த தொழிலை செஞ்சிக்கிட்டு வர்றோம். முதலாளிங்க கொள்முதல் பண்ணியாந்து எங்க கிட்ட உப்பு மூட்டையெல்லாம் கொண்டு வந்து குடுப்பாங்க. 

அதை நாங்க சுத்தம் பண்ணி, பதமா வெயில்ல காயவெச்சு, கருவாட அவங்க கையில குடுப்போம். இதுக்கு எங்களுக்கு அவங்க தர்ற கூலி ஒரு நாளைக்கு 30 ரூவா. இந்த வருமானம் போதாதுன்னு என் பொண்டாட்டி, குழந்தை குட்டிங்கன்னு எல்லாரும் இந்த தொழிலை பாக்குறோம்“ என்கிறார் சோமு என்கிற மீனவர். 

இந்த பையனுக்கு 3 வயசுதான் ஆகுது. இருந்தாலும் இவனுக்கு இப்போதிலிருந்தே இத்தொழிலை சொல்லிக்குடுக்குறோம். வயித்த கழுவணும்ல….”என்கிறார் அந்த மீனவர், சன்னமான குரலில்.

நாம் உண்ணும் ஒவ்வொரு கருவாடும், எங்கோ ஓர் கடற்கரை மூலையில் ஓர் மீனவனின் உப்புக்கண்ணீ ரினால் காயவைக்கப்பட்டது என்கிற உண்மை நெஞ்சில் அறைகிறது. 

"கரைமேல் பிறக்க வைத்தான்... எங்களை கண்ணீரில் மிதக்க வைத்தான்..!" என்ற பழைய பாடல் எங்கோ சற்று தொலைவில் ஒலிக்க, “ இங்க காய்ஞ்சுக்கிட்டு இருக்குறது கடுவாடு மட்டும் இல்லய்யா...எங்க உசு ரும்தான்..!” என்ற மீனவர் ஒருவரின் குரலும் அதனோடு சேர்ந்து காதில்  விழுந்தது நம் மனதை இன்னும் பிசைந்துகொண்டிருக்கிறது.

அதிகாரமற்றவர்களின் இந்த குரல் இங்கு யார் காதில் விழப்போகிறது..?

கணிப்பொறியின் இயங்குதிறன் அதிகரிக்க...

ங்கள் கணிப்பொறி தன் வேகத்தைக் குறைத்து, பொறுமையைச் சோதிக்கிறதா... அதற்கான காரணம் அறியுங்கள் இங்கே! 

கணிப்பொறி வேகமாக செயல்பட மிக முக்கியப் பங்கு வகிப்பவை Processor மற்றும்  RAM. இதில், பழைய கட்டமைப்புக் கொண்ட கணினியின் Processor மற்றும்  RAM ஆகியவை குறைந்த அளவிலான இயங்குதிறன் கொண்டதாக இருக்கும். இதனால் அந்தக் கணினியில், நவீன பயன்பாடுகளின் இயக்கத்தை கட்டுப்படுத்துவதில் மிகுந்த சிரமம் ஏற்படும்.
இதுவே, புதிதாக வாங்கிய கணினியில் அதிக அளவிலான இயங்குதிறன் இருப்பதைப் பார்க்கலாம். எனவே, நமது பயன்பாடுகளுக்கு ஏற்ப Processor மற்றும் RAM ஆகியவற்றின் திறனை மாற்றிக்கொள்வது, கணினியின் இயங்குதிறன் அதிகரிக்க வழிவகுக்கும்.

அதிக வேகம் கொண்ட Processor மற்றும் RAM இருந்தும் கணினி குறைந்த இயங்குதிறனில் செயல்பட்டால்... கணினியின் நினைவகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பயன்பாடுகளை Defragment செய்யவேண்டியது அவசியம். இதனால் கணினியின் இயங்குதிறன் அதிகரிக்கும்.

Defragment என்பது, கணினியின் பல்வேறு இடங்களில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள தரவுகளையும், துண்டு துண்டாக ஆங்காங்கே இருக்கும் பல்வேறு ஃபைல்களையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையாக நினைவகத்தில் சேமித்து வைக்கும் செயல்.

எப்படி Defragment செய்வது?

கணினியில் ஸ்டார்ட் பட்டனை கிளிக் செய்து, சர்ச் ஆப்ஷனை தேர்வு செய்து, அதிலே Disk Defragmenter என டைப் செய்யலாம். அல்லது, Start -> All Programs ->Accessories -> System Tools -> Disk Defragmenter என்ற வழியில் தேர்வு செய்யலாம். பின் அங்கே தோன்றும் Disk Defragmenter  பெட்டியில் உள்ள Current status என்ற பிரிவின் கீழே உள்ள கணினியின் நினைவக பிரிவுகளான சி, டி, இ போன்றவற்றை தேர்வு செய்து, Defragment Disk என்ற பட்டனை கிளிக் செய்து, Defragment செய்யலாம்.

குறிப்பு: இந்த Defragment செயல்முறையை கணினியின் செயல்பாடுகளுக்கு ஏற்றாற்போல் வாரம் அல்லது மாதம் ஒருமுறை செய்து கொள்ளலாம். 

பெட்ரோல், டீசல் விலை குறைந்தும் பலனில்லை... காரணம் என்ன?

த்தியில் நரேந்திர மோடியின் தலைமையிலான பாஜக  அரசு பதவியேற்று 7 மாதங்களில் இதுவரை 9 முறை பெட்ரோல் விலையும் டீசல் விலை 5 முறையும் குறைக்கப்பட்டு இருக்கிறது. வரவேற்க தகுந்த விசயமே என்றாலும் இந்த விலைக் குறைப்பின் பின்னால் இருக்கும் அரசியல் சற்று கவலை அளிக்கக் கூடியதே.
விலைக் குறைப்பு அறிவிப்போடு இன்னொரு செய்தியும் கலந்து வருவதே கவலை தரும் ஒன்றாக எல்லோராலும் கவனிக்கப் படுகிறது.அது பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி உயர்வு.
நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வுக்கு பெட்ரோல் டீசல் விலை உயர்வே காரணம் என்று கூறப்படும் நிலையில், 9 முறை பெட்ரோலும் 5 முறை டீசலும் விலை குறைக்கப்பட்ட நிலையில் விலைவாசியும் போக்குவரத்து உள்ளிட்ட செலவினங்களும் வெகுவாகக் குறைந்து நடுத்தர ஏழை மக்களின் மத்தியில் மகிழ்ச்சியை அல்லவா ஏற்படுத்தி இருக்கவேண்டும்.
மாறாக அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்களும் காய்கறி, பழ வகைகளும், பேருந்து ரயில் உள்ளிட்ட போக்குவரத்து கட்டணங்களும் 7 மாதங்களுக்கு முன்பிருந்த  அதே விலையிலும் பலநேரங்களில் கூடுதல் விலையிலும் இருக்கின்றன. இதுதான் புரியாத புதிராகவும் விலகாத மர்மமாகவும் இருக்கிறது.
கடந்த மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு  பெட்ரோல் டீசல் விலையை உயர்த்திய போதெல்லாம் எதிர்ப்பு காட்டிய  பாஜகவின் தலைமையில் மத்தியில் ஆட்சியை அமைத்து 7 மாதங்கள் ஆகிய நிலையிலும் விலைவாசி உயர்வில் மாற்றம் இல்லை என்கிற யதார்த்தம் சுடத்தான் செய்கிறது.   

இந்தியாவில் பெரும்பகுதி டீசல் விநியோகம் என்பது இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், பாரத் பெட்ரோலியம், மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் என்கிற மூன்று மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும் கச்சா எண்ணையை சுத்திகரித்து பயன்பாட்டிற்கான பெட்ரோலாகவும், டீசலாகவும் மாற்றும் பணி என்பது 80 சதவீதம்  ரிலையன்ஸ் குழுமத்திடம் தான் உள்ளது.இவற்றின் மூலம் தான் டூவீலர் முதல் விமானம் வரை ஏழை எளிய நடுத்தர கோடீஸ்வர மக்களின் பயணம் நடக்கிறது. உணவுப் பொருட்கள் முதல் ஆடை அணிகலன்கள் மருந்துப் பொருட்கள் என்று அனைத்து அத்தியாவசிய பொருட்களின் பரவலாக்கமும் நடைபெறுகிறது.அதனால் பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் உடனடியாக மக்களை பாதிக்கிறது.
 

மன்மோகன் அரசு விலையையேற்றி மக்களை வதைத்தது என்றால் மோடி அரசு விலையைக் குறைத்து விலைவாசியின் விஷத்தின் கடுகடுப்பைக் குறைக்காமல் பார்த்துக் கொள்கிறதோ என்ற  எண்ணம் 7 மாதங்களிலே பாஜகவின் கூட்டணிக் கட்சிகளே குரல் எழுப்பும் அளவிற்கு சூழ்நிலை எற்பட்டுள்ளது கவனத்தில் கொள்ள வேண்டியதே.

தனியார் எண்னை நிறுவனங்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தும் உள்நாட்டில் இருந்து தோண்டி எடுத்தும் எரிபொருளை அரசிற்கு  கூடுதல் விலைக்கு விற்கின்றன.  இது போன்ற தனியார் எண்னை நிறுவனங்களின் வற்புறுத்தலின் பேரில் தான் மன்மோகன் சிங் அரசு, பெட்ரோல் விலையை எண்னை நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ள சட்டம் கொண்டு வந்தது. அதனால் தான் தற்போது பெட்ரொல் விலை அடிக்கடி உயர்ந்தது என்று காரணமும் அப்போது கூறப்பட்டது. 
 
ஆனால் தற்போது விலைக்குறைப்பு செய்யப்பட்ட போதிலும் விலைவாசியில் மாற்றம் இல்லாமல் இருக்க காரணம் லாப வெறியா அல்லது மத்திய அரசின் கலால் வரி உயர்வா என்று பட்டிமன்றம் நடத்தும் அளவிற்கு கேள்விகள் எழுகின்றன என்றால் அது மிகை இல்லை.

தற்போது குறைக்கப் பட்ட நிலையில், சென்னை மாநகரில்  வரிகளையும் சேர்த்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 2.56 குறைந்து ரூ.61.38 ஆகவும், டீசல் விலை ரூ.2.44 குறைந்து ரூ.51.34 ஆகவும் உள்ளது. இது மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கும் விஷயமாகும்.முன்பு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.74 க்கும் டீசல் ரூ.54 அல்லது அதற்கு மேலும் விற்பனை செய்யப் பட்டது.
கடந்த சில மாதங்களாகவே  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக சரிந்து வருவது குறிப்பிடத் தக்கது.  அதன் தொடர்ச்சியாக நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.42 குறைந்தது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.25 குறைந்தது. அந்தந்த மாநிலங்களின் உள்ளூர் வரிவிதிப்புக்கு ஏற்ப விலை மாறுபடும்.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.2.56 விலை குறைந்து  ரூ.63.94 ஆக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல் தற்போது ரூ.61.38 க்கு விற்கப்படுகிறது. இதேபோல் டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.44 குறைந்து ரூ.53.78 ஆக இருந்த டீசல் ரூ.51.34 க்கு விற்கப்படுகிறது. இந்த விலைகுறைப்பின் மூலம் கடந்த ஆகஸ்ட்  மாதம்  முதல் இதுவரை பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.14.69-ம் டீசல் விலை ரூ.10.71-ம் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி இப்போது வரை 9 ஆவது முறையாக பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது. டீசல் விலை 5 ஆவது முறையாகக்  குறைக்கப்பட்டிருக்கிறது. கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை தலா ரூ.2 குறைக்கப்பட்டது.
  
ஒருபுறம் பெட்ரோல், டீசல் விலைகள் குறைக்கப்படும் நேரத்தில், இன்னொருபுறம் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி தொடர்ந்து உயர்த்தப்படுவது கவனிக்கத் தக்கது. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி நேற்று முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த வரி உயர்வு மட்டும் தவிர்க்கப்பட்டிருந்தால், பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.5.00 வரை குறைந்திருக்கும். மத்திய அரசின்  கலால் வரி உயர்வு  காரணமாக கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியின் முழுமையான பயன்களை மக்களால் அனுபவிக்க முடியவில்லை என்பது கண்கூடான விஷயம்.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கிய பிறகு கடந்த 2 மாதங்களில் மட்டும் பெட்ரோல் மீதான கலால்வரி லிட்டருக்கு ரூ. 7.75  ம், டீசல் மீதான கலால் வரி ரூ.6.50 ம் உயர்த்தப்பட்டிருக்கின்றன. இதன்மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.78,000 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்பது அரசிற்குத் தான் மகிழ்ச்சியளிக்கும். மாறாக, மக்களுக்கு இதே அளவுக்கு கூடுதல் செலவு ஏற்படும் என்பதே உண்மை என்று எதிர்க் கட்சிகள் சுட்டிக் காட்டுகின்றன. 

மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறையை 4.1% என்ற அளவுக்குள் கட்டுப்படுத்த வேண்டியிருப்பதாகவும், அதை சமாளிப்பதற்கு கூடுதல் வருவாய் தேவைப்படுவதால் தான் கலால் வரி உயர்த்தப்பட்டிருப்பதாக மத்திய அரசு  விளக்கம் அளிக்கிறது. அரசின் வருவாயை அதிகரிக்க வேறு  வழிகளை ஆராயவேண்டும் என்பது சாமானியனின் எதிர்பார்ப்பு.
அனைத்துத் தரப்பு மக்களும் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் மீதான விலைகளை உயர்த்த வேண்டுமா? என்று மத்திய அரசு ஒருமுறை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தபோது அதற்கு இணையாக பெட்ரோல் மற்றும் டீசலுக்கு கூடுதல் விலை கொடுத்த மக்களுக்கு, கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில் அதன் பயன்களை அனுபவிக்கவும்  வாய்ப்பு தரப்படவேண்டும். இல்லையெனில் விண்ணை முட்டி கண்ணைக் கட்டும்  விலைவாசியைக் கட்டுப் படுத்த முடியவே முடியாது.
ஏழை நடுத்தர மக்களை வாட்டி வதைக்கும் விலைவாசிக் கொடுமைக்கு முடிவில்லாமலே போகும். விலை குறைப்பால் ஏற்பட்டுள்ள சாதக பாதகங்களை ஆராய்ந்து மத்திய அரசு செயல்பட வேண்டிய தருணம் இது. 

பித்தம் தணிக்கும் கொத்தமல்லி

உலகில் முதன் முதலாக உணரப்பட்ட மருத்துவப் பொருள் மூலிகைகளே. நாம் அன்றாடம் பயன்படுத்தும் கீரை, காய்கள், கனிகள் அனைத்துமே ஒவ்வொரு வகையில் மருத்துவப் பயன் கொண்டவையாகும்.
மக்கள் பிணி நீங்கி நீண்ட ஆரோக்கிய வாழ்வு வாழ்வதற்கும், இந்த மூலிகைகள் நமக்கு உதவு கின்றன. இதனையே நாம் கற்ப மூலிகைகள் என்று அழைக்கிறோம். மிளகு, சீரகம், பூண்டு, பெருங்காயம், கொத்தமல்லி போன்றவற்றை தினமும் மசாலாவாக அரைத்து குழம்பு செய்து உண்ணும் வழக்கம் தென்னிந்தியாவிற்கே உரிய சிறந்த பழக்கமாகும்.
கறிவேப்பிலை போல் கொத்தமல்லியும் நம் சமையலில் அதிகம் இடம்பெறும் ஒரு மூலிகைப் பொருள் ஆகும். இது வாசனைக்காக மட்டுமே சேர்க்கப்படுவது என நம்மில் பலர் நினைப்பதுண்டு. ஆனால் வாசனையோடு அதன் மருத்துவக் குணங்களும் சேர்க்கப் படுகிறது என்பதை அறிந்திருக்க மாட்டோம்.
நம் முன்னோர்கள் உணவின் மூலமே நோயற்ற வாழ்வு வாழ்ந்தார்கள் என்பதற்கு கொத்தமல்லி, கறிவேப்பிலை போன்றவை சாட்சிகள்.
கடையில் காய் வாங்கினால் ஏதோ கொசுறாக கொத்தமல்லித் தழையைக் கொடுப்பார்கள். அதை நாமும் வாங்கி பயன்படுத்துவோம். ஆனால் அதிலுள்ள மருத்துவப் பயனைஅறிந்ததில்லை.
பசுமையான, மணமுள்ள இலைகளையும் சிறிய வெண்ணிற மலர்களையும் உருண்டையான விதைகளையும் உடைய சிறு செடி கொத்தமல்லி. இதன் விதைகளுக்கு தனியா என்று பெயர். இது பலசரக்குக் கடைகளில் கிடைக்கும்.
நஞ்சை, புஞ்சை காடுகளிலும் இதனைப் பயிரிட்டு வளர்க்கின்றனர். இதன் விதை மிகவும் மருத்துவப் பயன் கொண்டது. இலை, பூ, காய், வேர் அனைத்தும் மருத்துவப் பயன் உடையவை. இது இந்தியா முழுவதும் பணப்பயிராகப் பயிரிடப் படுகிறது.
இது கார்ப்புச் சுவை கொண்டது. குளிர்ச்சித் தன்மையுடையது. சிறுநீர் பெருக்கல், உடல் வெப்பம் சமன்படுத்தல், வயிற்று வாயுவகற்றல், செரிமானம் மிகுத்தல் ஆகிய மருத்துவப் பயன்களைக் கொண்டது.
கொத்துமல்லிக் கீரையுண்ணில் கோரவ ரோசகம்போம்
பித்தமெல்லாம் வேருடனே பேருங்காண்- சத்துவமாம்
வெச்செனவே போகம் விளையுஞ் சுரந்தீருங்
கச்சுமுலை மாதே! நீ காண்
-அகத்தியர் குணவாகடம்
பொருள் –
சுவையின்மை, சுரம் நீங்கவும், உடலை வன்மையாக்கவும், விந்துவைப் பெருக்கவும் உதவும்.
கொத்தமல்லியின் பயன்கள்
· சுவையின்மை நீங்கும்.
· வாய்ப்புண், வயிற்றுப் புண் குணமாகும்.
· செரிமான சக்தியைத் தூண்டி, உண்ட உணவை நன்கு சீரணிக்கச் செய்யும்.
· வயிற்றுப் பொருமல், வாயுக் கோளாறுகளைப் போக்கும். மலச்சிக்கல் நீங்கும். இதில் உள்ள நார்ச்சத்து மலக்குடலில் உள்ள தேவையற்ற அசடுகளை வெளியேற்றும். மூலநோயாளிகளுக்கு இது சிறந்த மருந்தாகும்.
· புளித்த ஏப்பம், நெஞ்செரிச்சல் போன்றவை மாறும்.
· கண் நரம்புகளில் உள்ள வறட்சியைப் போக்கி கண்ணை பலமடையச் செய்யும் கண் சூடு குறையும்.
· சுவாசம் சம்பந்தப்பட்ட கோளாறுகளைப் போக்கும். மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல், தொண்டைக்கட்டு, வறட்டு இருமல் நீங்கும்.
· உடலுக்குத் தேவையான சக்திகளைச் சேமித்து வைத்து தேவைப்படும்போது கொடுக்கும் உறுப்புதான் கல்லீரல். இது வீக்கமோ, சுருக்கமோ அடைந்து பாதிக்கப்பட்டால், உடலானது பல நோய்களின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். இதனால் கல்லீரலைப் பலப்படுத்த கொத்தமல்லி சிறந்த நிவாரணியாகும்.
· நல்ல தூக்கத்தைக் கொடுக்கும். மன அமைதியைக் கொடுக்கும்.
· உடலுக்கு வலுவைக் கொடுக்கும். விந்துவைப் பெருக்கும் குணம் இதற்குண்டு.
· நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் மயக்கம், தலைச்சுற்றல் போன்றவற்றை நீக்கும். இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையைக் குறைக்கும். இரத்த அழுத்த நோயாளிகளும் இதனை உணவில் சேர்த்துக்கொண்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
· வாய் நாற்றத்தைப் போக்கும். பல்வலி, ஈறுவீக்கம் குறையும்.
சிறுநீர், வியர்வையைப் பெருக்கும்.
கொத்தமல்லி இலை – 1 கைப்பிடி
சின்ன வெங்காயம் – 5
மிளகு – 10
சீரகம் – 2 தேக்கரண்டி
பூண்டு – 5 பல்
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை – 1 கொத்து
உப்பு – தேவையான அளவு
எடுத்து நீர் விட்டு சூப் செய்து காலை, மாலை, டீ, காபிக்கு பதிலாக இதனை அருந்தி வந்தால் உடல் களைப்பு நீங்கி மேற்கண்ட பாதிப்புகள் குறையும்.
கொத்தமல்லி இலையுடன் கறிவேப்பிலை, புதினா, சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, தேங்காய் சேர்த்து துவையல் செய்து உண்டு வந்தால் உடல் சூடு தணிவதுடன், பித்த அதிகரிப்பினால் உண்டாகும் பித்தச்சூடும் தணியும்.
5 கிராம் கொத்தமல்லி விதையை இடித்து அரைலிட்டர் நீரில் விட்டு 100 மி.லியாகக் காய்ச்சி வடிகட்டி பால், சர்க்கரை கலந்து காலை, மாலை சாப்பிட இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், செரியாமையால் ஏற்படும் வயிற்றுப்போக்கு ஆகியவை நீங்கும்.
கொத்தமல்லி சூரணம்
கொத்தமல்லி – 300 கிராம்
சீரகம் – 50 கிராம்
அதிமதுரம் – 50 கிராம்
கிராம்பு – 50 கிராம்
கருஞ்சீரகம் – 50 கிராம்
சன்னலவங்கப்பட்டை 50 கிராம்
சதகுப்பை – 50 கிராம்
இவை அனைத்தையும் இளவறுப்பாய் வறுத்து பொடி செய்து சலித்து 600 கிராம் வெள்ளை கற்கண்டு பொடியுடன் கலந்து வைக்கவும். இந்த சூரணத்தை காலை, மாலை 1 தேக்கரண்டி சாப்பிட்டால் உடல் சூடு, செரியாமை, வாந்தி, விக்கல், நாவறட்சி, ஏப்பம், தாது இழப்பு, நெஞ்செரிப்பு போன்றவை குணமாகும்.
கொத்தமல்லி கீரைக்கும், விதைக்கும் கண்பார்வையைத் தூண்டும் குணம் உண்டு.
காய்ச்சலாலும், குடல் அலர்ஜியாலும் பித்தம் அதிகரித்து வயிற்றில் சளி ஏற்பட்டு அதனால் நாவில் சுவையின்மை ஏற்படும். இது பொதுவாக பித்த அதிகரிப்பினால் வருவது.
இதற்கு, கொத்தமல்லி இலை, சீரகம், சேர்த்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து கஷாயம் செய்து அருந்தினால் சுவையின்மை நீங்கி, பித்த கிறு கிறுப்பு நீங்கும்.

மாதுளம் பழம்

 தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும்.தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது.     ஆண் தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது.மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும்.

அதிக தாகத்தைப் போக்கும்.மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும்.

மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகிவிடும்.

மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உணடு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலிலிருந்து குணம் பெறலாம்.

வறட்டு இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்.பித்த சம்மந்தமான அனைத்து உடல்நல குறை பாட்டிற்கும் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வரலாம்.mathulai

மாதுளம்பூவின் பயன்கள்

மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.
மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும்.
மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப் படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும்.
மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும்.
மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும்.மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்.

பச்சை வாழைப்பழம்

சாதாரணமாக கடையில் கிடைக்கும் பச்சை வாழைப்பழத்தில் இவ்வளவு பயன்களா…? என்று வாயைப் பிழந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. பச்சைப் பழங்கள் வயிற்றுப் பாதையில் உள்ள குடல் புண்களை ஆற்றும் தன்மையுடையது என்பதை படித்துப் பயன் கொள்ளுங்கள்…. * வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல்புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு. * வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும். * உணவு சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீ ஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கலாம். * வாய்ப் புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. முடிந்தவரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும். * ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதளபேதி குணமாகும். இதற்கு சிகிச்சை மேற்கொள்ளும்போது தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை ஏராளமாகச் சேர்த்துக் கொள்வது நல்லது. * இரவில் படுக்கப் போகும்முன் வெந்நீரில் சிறிது தேன் கலந்து அந்த நீரில் வாயைக் கொப்பளித்து வந்தால் பற்களுக்குத் தொந்தரவு கொடுக்கும் பாக்டீரியாக்கள் செத்துப் போகும். பற்களின் எனாமல் சிதையாமல் பாதுகாக்கப்படும். * மஞ்சளை ஒரு கல்லில் உறைத்து ஒரு சலவைச் சோப்புத் துண்டை அதில் குழப்பினால் சிகப்பாகப் பசைபோல் வரும். இதை வேனல் கட்டியின் மேல் பூச, வேனல் கட்டி உடைந்து சீழ் வெளியேறி விடும். * வெள்ளைப் பூசணிக்காய் சாறில் ஒரு கரண்டித் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மூளைச்சோர்வு நீங்கும். சுறுசுறுப்பாக செயல்படலாம்.

பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்

பூசணிக்காய்க்கு வெண்பூசணி, கல்யாணப்பூசணி என்ற பெயரும் உள்ளது. பல்வேறு மருத்துவ குணங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.   காய்கறி வகைகளில் ஒன்றான இதைச் சமைத்துச் சாப்பிட்டால் நரம்பைப் பற்றிய நோய்கள், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்புண் மேகவெட்டை, பிரமேக நோய் ஆகியவை உள்ளவர்களுக்கு நோயின் தீவிரம் குறையும்.   உடல் சூட்டைத் தணிக்கும், சிறுநீர் வியாதிகளை நீங்கும். சதா காலமும் உடல் வலி இருப்பவர்கள் பூசணிக்காயை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டால் உடல்வலி தீரும்.   புத்தி சுவாதீனம் இல்லாதவர்களுக்கு சிகிச்சையளிக்கும் போது தினசரி பூசணிக்காய் சேர்த்து சமைத்த உணவைக் கொடுக்க புத்தி சுவாதீனம் படிப்படியாக மாறி நல்ல நிலைமைக்குத் திரும்பும்.   மருத்துவத்தில் பூசணிக்காயின் நீர்விதை பயன்படுத்தப்படுகின்றது. நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைசுற்றல் நீக்கப் பயன்படுகிறது   ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் மற்றும் சிறுநீரக நோய்கள் போன்றவற்றை குணப்படுத்த வெண்பூசணி பயன்படுத்தப்படுகிறது.   வெண்பூசணிக்காயின் சாறு 30 மில்லியளவு எடுத்து ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துச் சாப்பிட்டால் இதய பலவீனம் நீங்கும், இரத்தசுத்தியாகும்.   பூசணிக்காய் சாற்றைத் தயாரித்து தினசரி 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் தொடர்ந்த இருமல், நெஞ்சுச்சளி குணமாகும். நீரிழிவு நோய் கட்டுப்படும். அதிகத் தாகத்தைக் குறைக்கும். உடம்பின் எந்தப் பாகத்திலாவது இரத்தக்கசிவு ஏற்பட்டால் இரத்தக்கசிவை நிறுத்திவிடும்.
பூசணிக்காய் சாறு 30 மில்லியளவு சர்க்கரை சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் வலிப்பு நோயின் தீவிரம் குறைந்துவிடும்.
பூசணிக்காய் சாறு 120 மில்லியளவு தயாரித்து ஒரு தேக்கரண்டி தேனும், தேவையான அளவு சர்க்கரையும் கலந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகத்தில் ஏற்படும் நோய்கள் நிவர்த்தியாகும். சிறுநீரில் ஏற்படும் இரத்தம், சீழ் கலந்த சிறுநீர் வெளியேறுதல் நின்றுவிடும்.   பூசணிக்காயின் கதுப்புப் பகுதியை மட்டும்(தோல், பஞ்சுப் பகுதி நீக்கி) சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வேகவைக்கவேண்டும். வெந்தபின் இதை எடுத்து சாற்றைப் பிழிந்து நீரைச் சேகரித்து 60 மில்லியளவு தயாரித்து இதில் சிறிது கற்கண்டு சேர்த்து தினம் 2, 3 வேளை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பாதிப்பால் ஏற்பட்டு வரும் மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.   பூசணிக்காயின் விதைகளைச் சேகரித்து நன்கு காய வைத்துப் பொடியாகச் செய்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டியளவு பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தேக புஷ்டி உண்டாகும்.

நாவல் பழம்

நாவல் பழத்தின் மருத்துவ குணம். நாவல் பழத்தின் துவர்ப்புச் சுவை ஒரு சிறப்பு அம்சமாகும். நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால் இரத்தத்தின் கடினத் தன்மை மாறி இலகுவாகும். மேலும் இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதிப் பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளியேற்றும்.
நாவல் பழத்தின் மருத்துவ குணம்சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும். மலச்சிக்கலைப் போக்கும். மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மூல நோயின் தாக்கம் குறையும்.
நன்கு பழுத்த நாவற்பழத்தை, உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவை குணமாகும்.
அஜீரணக் கோளாறுகளைப் போக்கி, குடல் தசைகளை வலுவடையச் செய்யும்.
தூக்கமின்றி அவதிப்படுபவர்கள், நாவல் பழத்தை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால், தூக்கமின்மை நீங்கும்.
மெலிந்த உடல் உள்ளவர்கள் தினமும் நாவல் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் தேறும்.
நாவல்பழம் வியர்வையைப் பெருக்கும். சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கும். பித்தத்தைக் குறைக்கும், உடல் சூட்டைத் தணிக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
நாவல் பட்டையை இடித்து நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால் நீரிழிவு நோயினால் உண்டான பாதிப்புகள் நீங்கும். பெண்களுக்கு உண்டாகும் கருப்பைப் பாதிப்புகளைப் போக்கும்., எனவே, நாவல் பழம் கிடைக்கும் காலங்களில் அதனை வாங்கி உண்டு அதன் பயன்களைப் பெறுவோம்.

வாழை மரத்தின் குணங்கள்.

அன்றாட உபயோகம் மட்டுமல்ல, மருத்துவப் பயனும் நிறைந்த தாவரம் வாழை. பல்வேறு உடல்நல பாதிப்புகள், குறைவுகளுக்கு வாழை உதவுகிறது.
தீக்காயம், வெந்நீர் காயம், சூடான எண்ணைய்பட்ட காயம் போன்ற இடத்தில் குருத்து வாழை இலையைச் சுற்றிக் கட்டுப் போடலாம். வாழை இலை அல்லது பூவைக் கசக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினாலும் பலன் இருக்கும்.
காயங்கள், தோல் புண்கள் உள்ள இடத்தில் தேங்காய் எண்ணையை மஸ்லின் துணியில் நனைத்து, புண்கள் மேல் போட்டு அவற்றின் மீது மெல்லிய வாழை இலையை கட்டு மாதிரி போட வேண்டும்.
சின்னம்மை, படுக்கைப் புண், உடலில் தீக்காயம் பட்ட இடங்களில் பெரிய வாழை இலை முழுவதும் தேன் தடவி, அதில் பாதிக்கப்பட்டவரை சில மணி நேரம் படுக்க வைக்க வேண்டும். இதைத் தொடர்ந்து செய்தால் குணமாகும்.
குடற்புழுக்கள், நீரிழிவு, அமிலச் சுரப்பு, தொழுநோய், ரத்த சோகை போன்ற நோய்கள் உள்ளவர்கள் வாழை வேரை தீயில் கொளுத்தி, அந்தச் சாம்பலை கால் தேக்கரண்டி அளவுக்கு எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிட்டுவர, இவை சரியாகும்.
பாலுடன் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அஜீரணம் சரியாகும். தொடர்ந்து 2- 3 வேளை சாப்பிட்டு வந்தால் மூலநோய் தீரும்.
அரை கப் தயிரில் வாழைப்பழத்தைப் பிசைந்து ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தம்ளர் இளநீர் சேர்த்துத் தினமும் இரண்டு வேளை வீதம் சாப்பிட்டு வந்தால் சரியாகும்.
தேனில் வாழைப் பழத்தைப் பிசைந்து தினம் இரு வேளை வீதம் சாப்பிடுவது பலன் கொடுக்கும்.
கரு மிளகு கால் தேக்கரண்டி எடுத்துப் பொடி செய்து, அதில் பழுத்த நேந்திரம் பழத்தைக் கலந்து இரண்டு, மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்.
நெல்லிச்சாறு அரைக் கரண்டியுடன் பழுத்த வாழைப் பழத்தைக் கலந்து 2, 3 வேளை சாப்பிட்டு வந்தால் இந்தக் குறைபாடு நீங்கும்.

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வயிற்றுக் கோளாறுகளை நீக்கும் வெந்தயம்  நாம் சமையலுக்கு உபயோகப்படுத்தும் வெந்தயத்தில் அதிக மருத்துவ குணங்கள் இருக்கின்றன. அவைகள் எவையென நாம் பார்ப்போம், இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து, 200 மி.லி. அளவு தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும். காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள்.
பின்பு வெந்தயத் தண்ணீரை குடியுங்கள். தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம். வாரம் ஒருமுறை இதுபோன்ற வெந்தயத் தண்ணீர் குடித்து வர, உடல் சூடு, மலச்சிக்கல் என எந்த நோயும் உங்களை அண்டவே அண்டாது.
இது தவிர, உடலை வனப்புடன் வைப்பதில் வெந்தயத்தின் பங்கு அலாதியானது. ஒரு தேக்கரண்டியளவு வெந்தயத்தை எடுத்து வாணலியில் போட்டு வறுத்து ஆற வைத்த பின்பு மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளுங்கள். வெந்தயப் பொடியை ஆறிய பின் பாட்டிலில் போட்டு தேவைப்படும் போது தண்ணீரிலோ அல்லது மோரிலோ கலந்து பயன்படுத்தலாம்.
வெந்தயத்துடன், சிறிதளவு பெருங்காயத்தையும் போட்டு வறுத்து பொடி செய்த பின் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டு பருகி வர வயிற்றுக் கோளாறுகள், அஜீரணம் போன்றவை ஏற்படாது. மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்தபொடியை தண்ணீர் அல்லது மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும்.
வெறும் வயிற்றில் இதனைக் குடிக்க வேண்டும். வெந்தயத்தை நன்றாக வறுத்து பொடிசெய்து காபிபொடியுடன் கலந்து காபி போட்டு குடித்தால், சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
உடல் குளிர்ச்சிக்கு
நாம் அன்றாட உணவில் பயன்படுத்தும் பொருட்களில் வெந்தயம் முக்கிய பங்கு வகுக்கிறது. இது உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை சிராக வைத்துக்கொள்ள உதவுகின்றது.
நம் உடலுக்கு தேவையான அனைத்து விதமான பயன்களும் வெந்தயத்தில் உள்ளது. வெந்தய விதைகளில் புரதம், சர்க்கரை, வைட்டமின், உலோகச்சத்து, அமினோ அமிலங்கள் ஆகியவை அடங்கியிருக்கின்றன. வெந்தய இலைகளிலும், தண்டுகளிலும் கால்சியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளது.
உடலுக்கு குளிர்ச்சி அளிப்பதுடன் உடலை சமநிலையில் வைக்கவும் வெந்தயம் பயன்படுகிறது. இரவில் வெந்தயத்தை ஊற வைத்து காலையில் எழுந்து அந்த தண்ணீரை பருகி வந்தால் உடல் குளிர்ச்சியாகவும், மலக்சிக்கலை போக்கவும் நல்ல மருந்தாகவும் பயன்படுகிறது. கோடைக்காலத்தில் மோரில் வெந்தயத்தை ஊற வைத்து  குடித்து வர  நீரிழிவு, வயிற்றுப்புண், வாய் துர்நாற்றம் உட்பட பல நோய்கள் குணமாகும்.
வெந்தியத்தை அரைத்துத் தீப்பட்ட இடங்களில் தடவ எரிச்சல் குறைவதோடு சீக்கிரம் ஆறும் தன்மைக் கொண்டது. வயிற்றுப்போக்கை குணமடைய செய்வதோடு, தாய்பால் பெருக்கும் தன்மையும் இதற்கு உண்டு. சர்க்கரை வியாதி குறைக்கும் மருத்துவ குணமும் இதில் உள்ளது.
வெந்தய கீரையை பகலில் சமைத்து சாப்பிட்டு வர வாய்வு தொல்லையிலிருந்து விடுபடலாம். வயிற்று உப்பிசம் இருந்தாலும் குறையும். வெந்தயக்கீரையைக் கூட்டு வைத்துப் பகலில் சாப்பிட்டால் வாய்வு கலைந்து விடும். மூன்றே நாட்களில் வாயு முழுவதையும் கலைத்து விடும். வயிற்று உப்பிசம் இருந்தாலும் தணிந்து விடும். வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு, சுண்டக்காய்ச்சி, இருவேளையும் அரை டம்ளர் வீதம் குடித்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.
பெண்களுக்கு முடி கொட்டும் பிரச்சனையில் இருந்து விடுபட வெந்தயம் உதவுகிறது. இரவு உறங்க செல்லும் முன் வெந்தயத்தை ஊற வைத்துவிட்டு காலையில் அதை விழுதாக அரைத்து அரை மணி நேரம் தலையில் தடவி குளித்து பாருங்களேன், முடி உதிர்வது குறைவதோடு, அடர்த்தியாக வளரவும் செய்கிறது. பொடுகு பிரச்சனை, அரிப்பு, குறைவதோடு முடி பளபளப்பாகவும் வைக்கிறது. வெந்தய விழுதை பருக்கள் மீது தடவ பருக்கள் மறையும்.
வெந்தயத்தை பயன்படுத்தி தான் பாருங்களேன் அதன் பயன்களும், மருத்துவ குணங்களும் என்னவென்று உங்களுக்கே தெரியும்.

மிளகு சாப்பிடுங்கள்..!

நம்முடைய மூதாதையர்கள் சாப்பிட்ட அனைத்து உணவுப் பொருட்களுமே ஒரு வகையில் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் மருந்தாக இருந்தது. ஆனால் இன்றைக்கு பாஸ்ட்புட் கலாச்சாரத்தில் நாம் அதிலிருந்து விலகி… பெரும்பாலான உணவுகள் நம்முடைய ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் உள்ளன என்பதே கசப்பான உண்மை. இன்றைக்கும் ஆயுர்வேதத்தில் மருந்தாக பயன்படும் பெரும்பாலானவை உணவுப்பொருட்கள் தான்.
ஆதலால், நாம் சரியான உணவுப்பொருட்களை, சரியான விதத்தில் சமைத்து சாப்பிட்டால் நாம் மருத்துவரை அணுக வேண்டிய அவசியமில்லை. முதலில் கீரை வகைகளை பார்க்கலாம்.
கீரைகளை நீரில் நன்றாக கழுவிவிட்டு சமைக்கவேண்டும். பழங்காலத்தில் இரவில் கீரையை சாப்பிடக்கூடாது என்பார்கள். அதற்கு காரணம் இருந்தது. அதாவது கீரைகளில் சிறுசிறு பூச்சிகள் அதிகம். இரவு என்றால் நமக்கு தெரியாது என்பதால் அப்படி சொன்னார்கள். கீரைகள் அனைத்துமே ரத்த விருத்தியை உண்டாக்கும்.
தூதுவளை கீரையை சாப்பிட்டால் இருமல், சளி மாறும். அகத்திக்கீரையை சாப்பிட்டால் கடுப்பு மாறும். கொத்தமல்லிக்கீரையை சாப்பிட்டால் சுக்ல விருத்தி உண்டாகும். கரி சலாங்கண்ணிக் கீரையை சாப்பிட்டால் கண்களுக்கு பலம் கிடைக்கும். சிறுகீரை சாப்பிட்டால் கண்புகைச்சல் குறையும். புதினா சாப்பிட்டால் பசியை தூண்டும். கீழா நெல்லியை சாப்பிட்டால் மஞ்சள் காமாலை நோய் மறையும்.
இதேபோல் பால் மற்றும் பால் பொருட்களும் நமது உடலுக்கு பலவிதத்தில் பலன் தருகின்றன. பசும்பால் தாதுக்கள் மற்றும் ஆண்மையை அதிகரிக்கும். எருமைப்பால் புத்தியை மந்தம் அடையச்செய்யும். ஆட்டின் பால் சாப்பிட்டால் ரத்தப்போக்கு நோய்கள் குறையும். மோர் சாப்பிட்டால் மூலநோய் குணமாகும். வெண்ணை ஆண்மையை பெருக்கும். நெய் சாப்பிட்டால் புத்தி, ஞாபக சக்தி, ஆயுள் ஆகியவை அதிகரிக்கும். கரும்புச்சாறு ஆண்மையை உண்டாக்கும். தேன் கண்களுக்கு நல்லது. நல்லெண்ணை குளிர்த் தன்மை உடையது.
நீர் மனிதனுக்கு இன்றியமையாதது. கொதிக்க வைத்து ஆறிய நீர் மிகவும் நல்லது. குழந்தைகள், வாதநோயாளிகள், பத்தியமுள்ளவர்களுக்கு புழுங்கல் அரிசி நல்லது. அவல் பலத்தை அதிகரிக்கும். கோதுமை ஆண்மையை பெருக்கும். வெந்தயம் கசப்பு சுவை உடையது. சீதக்காய்ச் சலுக்கு சிறந்தது. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். எள் எலும்புகளுக்கு பலம் தரும். கூந்தலுக்கு வலுவை தரும். இதை சாப்பிட்ட பின் குளிர்ந்த நீரை அருந்த வேண்டும்.
உளுந்து உணவுப் பொருட்களில் சிறந்தது. ஆண்மையை பெருக்கும். பெண்களுக்கு இடுப்புக்கு வலிமை கொடுக்கும். மாதவிலக்கை சீராக்கும். இதை சாப்பிட்டால் உடல் பருக்கும். அதேபோல் சவ்வரிசியும் சுக்லத்தை அதிகரிக்கும்.
பயறு வகைகள் உடலுக்கு நல்லது. தானியங்களில் பயறு சிறந்தது. பாசிப்பயறு நோயாளிகளுக்கு நல்லது. வேர்க்கடலையை வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் உடல் வளரும், ஆண்மை உண்டாகும். பாதாம் பருப்பு உடலுக்கு புஷ்டியை தந்து, ஆண்மையைப் பெருக்கும். பெருஞ்சீரகம் பசியைத் தூண்டி, வயிற்று நோயை அகற்றும். பெருங்காயம் தேக வாயுவை குறைத்து, வயிற்று நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்தாகவும் அமைகிறது. மஞ்சள் ரத்ததை சுத்திகரிக்கும். புண்களை ஆற்றும். மிளகு இருமல், சளியை குறைக்கும். தினமும் இரண்டு மிளகை சாப்பிட்டால் இருதயநோய் வராது.
சேனைக்கிழங்கை சமைத்து சாப்பிட்டால் ரத்தமில்லா மூலம் குணமாகும். இஞ்சி வயிற்றை சுத்தம் செய்யும். கத்திரிப் பிஞ்சு வயிற்று வலிக்கு நல்லது. கோவைக்காயை சமைத்து சாப்பிட்டால் வாய்ப்புண் மறையும். அதேபோல் மணத்தக்காளி கீரையை சமைத்து சாப்பிட்டால் வயிற்றுப் புண் குணமாகும். தேங்காய் குளிர்ச்சித்தன்மை உடையது. தோல் நோய்களைக் குணமாக்கும் சக்தி உண்டு. வெள்ளரிப்பிஞ்சு உடலுக்கு மிகவும் நல்லது. வாழையின் அனைத்துப் பகுதிகளும் நமக்கு பயன்படுகின்றன. வாழைப்பூ ரத்த மூலத்திற்கு சிறந்தது. வாழைப்பிஞ்சு சர்க்கரை நோய்க்கு நல்லது. அனைத்து வகை காய்கறிகளும் நமது உடலுக்கு மிகவும் நல்லது.

வியாழன், 26 பிப்ரவரி, 2015

கசக்கிறது கரும்பின் விலை: அதிருப்தியில் விவசாயிகள்!

2014-2015-ம் ஆண்டுகளுக்கான அரவைப் பருவத்தில் மத்திய அரசு ஒரு டன் கரும்புக்கு அறிவித்த நியாயமான மற்றும் ஆதாய விலையான(எஃப்.ஆர்.பி)  2,200 ரூபாயுடன், வாகன வாடகை உட்பட 450 ரூபாய் உயர்த்தி 2,650 ரூபாய் என அறிவித்துள்ளது தமிழக அரசு. இந்த விலை அறிவிப்பால் கரும்பு விவசாயிகளிடையே புகைச்சல் எழுந்துள்ளது. இந்த அறிவிப்பு 'பழைய மொந்தையில் ஊற்றிய புதிய கள்ளு’ என்கின்றனர் அவர்கள்.இதுபற்றி நம்மிடம் பேசிய தென்னிந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் செயல்தலைவர் கே.வி. ராஜ்குமார், ’’தமிழக அரசின் விலை அறிவிப்பு என்பது, ’கணக்காகத்தான் இருக்கிறது. கடந்த ஆண்டு மத்திய அரசு எஃப்.ஆர்.பி விலையாக அறிவித்த 2,100 ரூபாயுடன், மாநில அரசு 5,50 ரூபாய்உயர்த்தி அறிவித்தது. ஆனால், தமிழக அரசு அறிவித்த விலையில் தனியார் சர்க்கரை ஆலைகள் ஒரு டன் கரும்புக்கு 300 ரூபாய் வீதம் 400 முதல் 500 கோடி ரூபாய் பாக்கி வைத்திருக்கிறது. இந்த நிலையில் மாநில அரசின் விலை அறிவிப்பு என்பது வெறும் கண்துடைப்பு மட்டுமே. விவசாயிகள் கொடுக்கும் கரும்பு கழிவுகளில் இருந்து கிடைக்கின்ற மது வை விற்று அரசாங்கத்தை நடத்தும் அரசியல்வாதிகளுக்கு, அதற்கு ஆதா ரமாக விளங்கும் கரும்பு விவசாயிகள் மீது துளியும் அக்கறையே இல்லை. ஆலை முதலாளிகளுடன் சுமூகமாக இருந்துக்கொண்டு விலை அறிவிப்பு செய்வதையே வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். விலைவாசி எந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறது என்பதை உயர்த்தப்பட்ட சாராய விலையை வைத்தே தெரிந்துக்கொள்ளலாம். ஒருவேளை கரு ம்புக்கான வெட்டுக்கூலி, வாகன வாடகையை ஆலையோ அல்லது அரசாங்கமோ ஏற்றுக்கொண்டால் இந்த விலை உயர்வை நாங்கள் ஏற்றுக்கிறோம்” என்றார்.
திருவண்ணாமலை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சிவக்குமார்,’’ இன் றைக்கு இருக்கும் உரம் விலை, ஆட்கள் கூலி, இதர செலவுகள் போன்றவற்றை கணக்கிட்டுப் பார்த்தால் ஒரு டன் கரும்புக்கு 4 ஆயிரம் ரூபாய் கொடுத்தால்தான் போதுமானதாக இருக்கும். ஆனால், தமிழக அரசு 2012-2013-ம் ஆண்டுகளில் மத்திய அரசு அறிவித்த எஃப்.ஆர்.பி 1900 ரூபாயுடன், மாநில அரசு எஸ்.ஏ.பி விலையாக 650 ரூபாய் உயர்த்தி 2,550 ரூபாயாக அறிவித்தது. கடந்த ஆண்டு (2013-2014) மத்திய அரசு அறி வித்த 2,100 ரூபாயுடன், மாநில அரசு எஸ்.ஏ.பி விலையாக 550 ரூபாய் அறிவிப்பு செய்ததன் மூலம் 100 ரூபாயை குறைத்து 2,650 ரூபாய் அறிவித்தது. இந்த ஆண்டு (2014-2015) மத்திய அரசு அறித்த எஃப்.ஆர்.பி 2,200 ரூபாயுடன், மாநில அரசு எஸ்.ஏ.பியாக 450 ரூபாய் அறிவிப்பு செய்ததன் மூலம் கடந்த ஆண்டு அறிவித்த எஸ்.ஏ.பி விலையில் மேலும் 100 ரூபாய் குறைத்து கடந்த ஆண்டு வழங்கிய தொகையான 2,650 ரூபாயையே இந்த ஆண்டும் வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டிருப்பது, ’கழுதை தேய்ந்து கட்டெ ரும்பான கதையாகவே’ இருக்கிறது. மத்திய அரசு விலையை உயர்த்தி னால் மாநில அரசு விலையை குறைக்கிறது. இந்த விநோதத்தை எங்கு கொண்டு செல்வது. இந்த விலை அறிவிப்பு என்பது விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தையே கொடுத்திருக்கிறது”என்றார் காட்டமாக. கரும்பு இனிக்கிறது, ஆனால் அதைப் பயிரிடும் விவசாயிகளுக்கு வாழ்க் கையை கசந்துபோகச் செய்கிறது அரசு.                 

காகிதக் குப்பைகளை காசாக்குவோம்!

காகிதப் பொட்டலங்களில் பஜ்ஜி, போண்டா என்று பலவித பலகாரங்களையும் பேப்பரில் வைத்து நாம் சாப்பிட்டு தூக்கியெறிந்து விடுகிறோம். பிளாஸ்டிக் குப்பைகளை பற்றி பேசும் அளவுக்கு நாம், காகிதக் குப்பைகளை பற்றி பேசுவதில்லை. அப்படி நம்மால் தூக்கியெறியப்படும் குப்பைகளுக்கும் மதிப்பு உண்டு என்கிறார் காகிதக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் குளோபல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பரத் புஜ்ரா. காகித குப்பைகளின் தேவை  மற்றும் அதன் மேலாண்மை குறித்து கடந்த  6ம் தேதி சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், "கம்ப்யூட்டர், இன்டர்நெட், டி.வி. என்று வந்துவிட்டாலும் காகிதப் பயன்பாட்டில் பெரியளவில் மாற்றம் நிகழ்ந்துவிடவில்லை.இந்தியாவில் ஒரு நபர் சராசரியாக 10 கிலோ காகிதத்தை பத்திரிகை, புத்தகங்கள், நோட்புக் என்று ஏதோவொரு வகையில் பயன்படுத்தி வருகிறார். இதுவே சீனாவில் 20 கிலோவும், அமெரிக்காவில் 100 கிலோ காகிதத்தையும் ஒருநாளில் பயன்படுத்தி வருகின்றனர்.இப்படி பயன்படுத்தும் காகிதங்களை நாம் முறையாக சேமிக்கிறோமா என்றால் இல்லை.நாம் பயன்படுத்தும் காகிதங்களில் 80 சதவிகிதம் மண்ணுக்கு சென்று விடுகிறது. மீதி 20 சதவிகிதம் மட்டுமே மறுசுழற்சிக்கு வருகிறது. இதனால் காகித பயன்பாட்டுக்காக அதிகளவில் மரங்கள் வெட்டப்படுகின்றன. ஆனால் நாம் பயன்படுத்தும் காகிதங்களையே முறையாக சேமித்து பயன்படுத்தினால் பெருமளவில் மரங்கள் வெட்டப்படுவதை தவிர்க்க முடியும். தற்போது ஆண்டுக்கு 40 லட்சம் டன் காகிதக் கழிவுகளை, வெளிநாடுகளிலிருந்து அதிகபட்ச விலையில் இறக்குமதி செய்கிறோம். உள்நாட்டில் குறைந்த விலையில் காகிதக் கழிவுகள் கிடைத்தாலும், அவற்றின் அளவு குறைவாகவே இருக்கிறது. அதனால் இறக்குமதிக்கு ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளை நம்பி இருக்கிறோம். காரணம் அங்கு காகிதங்களைப் பயன்படுத்தும் இடங்களிலே முறையாகச் சேகரித்து, தரம்பிரித்து விடுகிறார்கள். பிறகு அதை மறுசுழற்சி செய்யும் ஆலைகளுக்கு அனுப்புகிறார்கள்.இந்தியாவில் அரசிடமும், மக்களிடமும் போதுமான விழிப்பு உணர்வு இல்லாததால் காகிதக் கழிவுகள் வீணாக மண்ணில் மட்கி புதைந்து போய் கொண்டிருக்கின்றன. மத்திய, மாநில அரசுகளின் கொள்கை அளவில் மாற்றம் வந்து, பொதுமக்களும் ஒத்துழைத்தால் மட்டுமே இதையெல்லாம் முறைப்படுத்த முடியும். மக்களும் தாங்கள் தூக்கியெறியும் ஒவ்வொரு காகிதக் குப்பைக்கும் ஒரு மதிப்பும், விலையும் உண்டு என்பதை உணர வேண்டும். காகிதங்களை குப்பைதானே என்று நினைக்காதீர்கள். அதை முறையாக சேமித்து பழகுங்கள்" என்றார். அந்நிறுவனத்தின் இயக்குனர் உமேஷ் புஜ்ரா பேசும்போது, "இந்தியாவில் கிடைக்கும் காகிதக் கழிவுகளை அமைப்பு சாரா தொழிலாளர் கள்தான் சேகரித்து தருகிறார்கள். இதில் தெருவில் குப்பை சேகரிப்பவர்களோடு, சிறுவர்களும் ஈடுபடுகிறார்கள். தெருவோரங்களில் கடைகள் வைத்திருப்பவர்கள் பழைய நியூஸ் பேப்பர், புத்தகங்கள், பேப்பர் கட்டுகளை வாங்கி சேகரித்து அனுப்புகிறார்கள். இவர் கள்தான் காகிதக் குப்பை சேகரித்து தந்து கொண்டிருக்கிறார்கள். இதை மாற்றி வீடுகளில் காகிதக் கழிவுகளை சேகரிப்பதை அரசு முறைப்ப டுத்த வேண்டும். தற்போது தமிழ்நாட்டில் 1 கிலோ காகிதக் கழிவின் விலை சராசரியாக 10 ரூபாய் என்ற விலையில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.  எங்களைப் போன்ற நிறுவ னங்கள் அதை வாங்கி காகிதக் கூழாக்கி அரசு காகிதத்தாள் நிறுவனத்துக்கு அனுப்பி வருகிறோம்.உலகளவில் காகித பயன்பாட்டில் 20 சதவிகிதம் மட்டுமே இந்திய காகிதக் கழிவு ஆலைகளின் மூலம் கிடைக்கிறது. இதை இன்னும் அதிகரித்தால்  சுற்றுச்சூழலை பாதுகாக்கலாம். மின்சாரம், மனித உழைப்பு என பலவற்றையும் மிச்சப்படுத்தலாம்" என்றார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் போலி மருத்துவர்கள்

போலி மருத்துவர்கள்; உயிர்களைக் காக்க ஓர் உஷார் ரிப்போர்ட்
ராஜபாளையம் பகுதிகளில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 18 பேர் பலியாகி உள்ளனர். இதற்கு காரணம் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் முதலில் போலி மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றிருப்பதுதான். விசாரணையில் தெரியவந்த இந்த உண்மையை அடுத்து தமிழகம் முழுக்க காவல்துறை நடத்திய ரெய்டில் 150 க்கும் மேற்பட்ட போலி மருத்துவர்கள் கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்தமாக 18 உயிரிழப்புகள் ஏற்பட்டபின் அரசுக்கும், அதிகாரிகளுக்கும் இப்போதுதான் ஞானக்கண் திறந்துள்ளது. தமிழகம் முழுவதும் கைது படலம் அதிகரித்துள்ளது.தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் 1915ஆம் ஆண்டு முதல் இதுவரை 1,09,252 பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களில் இறந்தவர்கள்,  வெளிநாடுகளில் பணி செய்பவர்கள் நீங்கலாக தமிழகத்தில் சுமார் 80 ஆயிரம் மருத்துவர்கள் பணியாற்றுகின்றனர். இந்த எண்ணிக்கையை விட மருத்துவம் பயிலாமல் மருத்துவத் தொழில் பார்க்கும் போலி மருத்துவர்கள் அதிகம்  என்பது அதிர்ச்சிக்குரிய விஷயம்.  குறிப்பாக தமிழகத்தில் 30 ஆயிரம் போலி மருத்துவர்கள் இருப்பதாக தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
உங்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர் உண்மையானவரா? 
தமிழகத்திலேயே பெரம்பலூர் மாவட்டத்தில் போலி மருத்துவர்கள் அதிகளவில் இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து கலெக்டர் தரேஸ் அகமது உத்தரவின்பேரில் சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் சிவக்குமார்,  காவல்துறை கண்காணிப்பாளர் சோனல் சந்திரா மேற்பார்வையில் போலி  மருத்துவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு, பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் அதிரடி ஆய்வு நடத்தினர். இதில், ஒரே நாளில் 4 பெண்கள் உள்ளிட்ட  24 போலி  மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுவாச்சூரில் அண்ணாமலை, மேலப்புலியூரில் கோவிந்தராஜு, குரும்பலூரில் செல்வக்குமார், கார்த்திக், கை.களத்தூரில் வீரகனூரைச் சேர்ந்த ராஜு, காந்தி நகரைச் சேர்ந்த சேகர், குன்னம் அருகே உள்ள பேரளியில் துறையூர்  பச்சைபெருமாள்பட்டியை சேர்ந்த செந்தில்குமார், என பிடிபட்ட இவர்கள் அனைவரும் குறைந்த பட்சம் 10 வது படிப்பும் அதிகபட்சமாக டிபார்ம், வரை மட்டுமே படித்தவர்கள்.  மருத்துவர்கள் என பெயர்ப் பலகையோடு கிளினிக் அமைத்து அலோபதி சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்தது.கைது செய்யப்பட்டவர்கள் பெரம்பலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 
போலி டாக்டர்களை எளிதில் கண்டுபிடிக்கலாம், மருத்துவம் படித்து  மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்த மருத்துவர்கள், நோயாளி களுக்கு எழுதிக் கொடுக்கும் மருந்து சீட்டு மற்றும் லெட்டர் பேடில் தங்களுடைய பெயர், படிப்பு மற்றும் தமிழ்நாடு மருத்துவ கவுன்சி லின் பதிவு எண் இவற்றை குறிப்பிட வேண்டும் என்றும் முறையாக மருத்துவம் படிக்காமல் வைத்தியம் பார்ப்பது கடுமையான குற்றம் என மருத்துவர்களுக்கான சட்டம் அறிவுறுத்துகிறது. அதனால் தங்களுக்கு தரப்படும் மருந்து சீட்டில் இந்த தகவல்கள் இல்லையென் றால் நோயாளி உஷாராகி விடவேண்டும். தங்களைக் காத்துக்கொள்வதோடு அவர்கள் பற்றிய தகவல்களை அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தெரிவிக்க வேண்டும். ஆனால் இந்த நடை முறையை மதிக்காமல் தமிழகம் முழுவதும் மருத்துவம் படிக்காமல் அலோபதி சிகிச் சை அளித்து வருகின்றனர்.  போலி டாக்டர் செய்யும் தவறுகளால் டாக்டர்கள் மீது பொதுமக்கள் வைத் துள்ள நம்பிக்கை இழக்கச் செய்கிறது. நீங்கள்  சிகிச்சைக்கு போகும்போது, அந்த டாக்டர் உண்மையான டாக் டரா இல்லை போலியான டாக்டரா என  சந்தேகம் எழுந்தால் காவல்நிலையத்தில் தகவல் அளியுங்கள். அங்கு உங்களுக்கு அதிருப்தி இருந்தால் தாமதிக்காமல் தமிழ்நாடு மருத்து வக் கவுன்சில், எண்.914, பூந்த மல்லி நெடுஞ்சாலை, அரும்பாக்கம் என்கிற முகவரிக்கு எழுத்து மூலம் புகாரும்,  044-26265678  என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இல்லயெனில் அந்தந்த மாவட்ட மருத்துவதுறை முதன்மை அலுவலருக் கும் புகார் கொடுக்கலாம் என்கிறார்கள்  மருத்துவர்கள்.   

போலிகளால் உங்கள் உடம்பு மட்டுமல்ல உயிரும் போகக்கூடும்  ஜாக்கிரதை..................

வெளிநாட்டுக் கப்பல்களுக்கு உரிமை.... கொதிக்கும் இந்திய மீனவர்கள்....

ந்திய கடல் பகுதிகளில் வெளிநாட்டுக்  கப்பல்களுக்கு  மீன் பிடி உரிமம் வழங்க தொடங்கியுள்ளது மோடி தலைமையிலான  மத்திய அரசு.
இந்தத்  திட்டம் இந்திய மீனவர்களின் உரிமையைப் பறித்து வாழ்வாதாரத்தைப்  பறிக்கும் செயல்  என்பதால்  கொந்தளிக்கும் கோபத்தோடு  மத்திய அரசுக்கு எதிராக போராட தொடங்கியிருக்கிறார்கள் தமிழக மீனவர்கள்.                                                                                              
மோடி தலைமையில் மத்திய அரசு அமைந்ததிலிருந்து  அடித் தட்டு மக்களின் வாழ்வாதார, பாரம்பரிய  தொழில்களை அழிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாகப் புகார் எழுந்துள்ளது. பன்னாட்டு நிறுவனங்களுக்கும், முதலாளிகளுக்கும் ஆதரவாகவே செயல்பட்டு வருவதாகப்   புலம்புகிறார்கள் மீனவ மக்கள். இது குறித்து மீனவ சங்க நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். " இந்திய கடல்களில் மீன் வளம் ரொம்ப குறைஞ்சு போச்சு. ஏற்கெனவே "மீன் பாடு" இல்லாமல் எங்கள் பாடு ரொம்ப மோசமா இருக்கு. மீன் பிடிக்க போற எங்களை எல்லை தாண்டியதா சொல்லி இலங்கை அரசு சுட்டும், கைது செய்தும், விசைப்  படகை பிடித்தும் துன்புறுத்துகிறது. இயற்கை சீற்றங்களாலும் பல பாதிப்புக்கு உள்ளாகிறோம். கடல் மேல் பிறந்ததால் கண்ணீரிலும் தண்ணீரிலும் எங்கள் வாழ்க்கை கரையுது.
 இந்த நேரத்துல தலையில இடி விழுற மாதிரி வெளிநாட்டு கப்பல்களுக்கு மீன் பிடிக்க உரிமம் வழங்கி வருகிறது மத்திய அரசு. மொத்தம் 816 கப்பல்களுக்கு உரிமம் வழங்கி ஆழ்கடல்களில் இருந்து கரை பகுதி வரை  {கடல் தொலைவில் 12 நாட்டிகல் மைல் தவிர்த்து}  மீன் பிடிப்பதற்கான  ஏற்பாடுகளைச் செய்துவருகிறது. இதனால் இந்திய மீன் வளத்தை எல்லாம் அவங்க மொத்தமா அள்ளிக் கிட்டுப்  போயிருவாங்க. இந்தத்  திட்டத்தால் நாங்க தரையில விழுந்த மீனா துடிச்சுகிட்டு இருக்கோம். அரசு என்பது மக்களைப்  பாதுகாக்கணும் ஆன இந்த அரசு மீனவர்களை எக்கேடாவது கெட்டுப்  போகட்டும் என நினைத்துதான் இந்தத்  திட்டத்தை செயல்படுத்தி வருகிறது" என்கிறார்கள் கண்ணீரோடு  மீனவர்கள். மேலும் மீனவர்கள், " மீன்பிடி தொழில் ஏற்றுமதி மூலம் 32,000 கோடி அந்நிய செலவானி வருமானம் வருகிறது. இதை கண்டுகொள்ளாமல் மீனவர்களின் வயித்தில் அடிக்கிறது மத்திய அரசு. கடல் வழியாதான் தீவிரவாதிகள் ஊடுறுவுறாங்க என்று மத்திய உளவுத் துறை சொல்லி வருகிறது. வெளிநாட்டு கப்பல்களுக்கு உரிமம் வழங்குவதால் நாட்டின் பாதுகாப்பு கேள்விகுறியாகும் வகையில் தீவிரவாதிகள் உள்ளே நுழைவதற்கான  வாய்ப்பை இவர்களே ஏற்படுத்தி தருகிறார்கள்.  அந்நிய நாட்டுக்  கப்பல்களுக்கு உரிமம் வழங்கும் மத்திய அரசு நம்முடைய இந்திய மீனவர்களுக்கும் "வெளிநாட்டுக்  கடல்களில் மீன் பிடிக்கும் உரிமையை வாங்கிதர முடியுமா" என்று பகீர் கேள்வியையும் எழுப்புகிறார்கள். அப்படி வாங்கினால் தமிழக மீனவர்களை இலங்கை அரசாங்கம் கைது செய்யாது. இதை செய்யாத மத்திய அரசு உரிமம் வழங்கும் வேலையை மட்டும் விரைவாகச்  செய்துவருகிறது. இதை உடனே ரத்து செய்யாவிட்டால் இந்திய மீனவர்கள் அனைவரும் ஒன்று கூடி தொடர் போராட்டத்தை நடத்துவோம் என்று கடலை போல பொங்குகின்றனர்.வாழ்வாதாரம் முற்றிலும்  பறிக்கப்படும் அபாயத்தில் உள்ள தமிழக மீனவர்களைக் காக்கும் வகையில் மத்திய அரசின் நடவடிக்கைகள் அமையவேண்டும் என்பதே மீனவர்களின் எதிர்பார்ப்பு. 

விவசாயம் மட்டுமே போதும்: மாற்றுத்திறனாளியின் நம்பிக்கை!

வ்வொருவரும் விவசாயத்தை நோக்கி வருவதற்கு ஒவ்வொரு கதை இருக்கும். ஆனால், இந்த விவசாயியின் கதை உங்கள் உள்ளத்தை உருக்கும் ஓர் உணர்ச்சி அனுபவமாக இருக்கும். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் இருந்து களக்காடு செல்லும் சாலையில் உள்ளது கலுங்கடி கிராமம். இந்த கிராமத்திலுள்ள முருகன் என்பவர் தன்னுடைய இரு கால்களையும் இழந்தும் விவசாயம் செய்து வருகிறார். அவருடைய நம்பிக்கை கதையை அவரே சொல்கிறார்.‘‘என் பேரு முருகன். அப்பா வேதமாணிக்கம், அம்மா செல்வமணி, தம்பி சின்னத்துரை மூளை வளர்ச்சி குறைந்த மாற்றுத்திறனாளி. இவங்களோட சொர்ணகிளின்னு ஒரு தங்கச்சி. நான் அஞ்சாப்பு வரைதான் படிச்சேன். அதுக்கு மேல படிக்க வைக்க வசதி இல்ல. அப்பாக் கூட சேர்ந்து எங்களுக்கு சொந்தமான தோட்டத்துலயே நெல், வாழை, வெள்ளரி, தக்காளியெல்லாம் போட்டு விவசாயம் செய்துட்டு இருந்தோம். வாழ்க்கையும் சுமாரா போய்க்கிட்டுருந்தது.ஒரு கட்டத்துல குடும்ப செலவுக்கு வாங்குன கடனை கொடுக்க முடியாம, தோட்டம் அடமானத்துக்குப் போயிடுச்சு. கடனும் அதிகமா ஆயிட்டதால வெளியூருக்கு எங்கயாவது வேலைக்குப் போகலான்னு யோசிச்சேன். தெரிஞ்ச நண்பர் மூலமா 2005ல் மும்பைக்கு போனேன்.தாராவி பகுதியில் தங்கிகிட்டு கிடைச்ச வேலைகளையெல்லாம் செஞ்சிட்டு இருந்தேன். அப்பதான் கலர் மீன்களை கண்ணாடி தொட்டியில் போட்டு வீடு, அலுவலகங்களில் வளர்ப்பதில் மும்பை மக்களுக்கு அதிக ஆர்வம் இருந்ததைப் பாத்தேன். கண்ணாடித் தொட்டிகளில் வளக்குற மீன்களுக்கு இரையாக ஒருவித புழுவைப் போடுவார்கள். இந்தப் புழுக்களைப் பிடிச்சு விக்குறதுல போட்டி அதிகமா இருக்கும்.இதுக்காக மும்பையில் இருந்து சுமார் 160 கி.மீ தூரத்தில் இருக்கும் புனேவுக்கு செல்வோம். அங்குள்ள ஆறுகளில் இந்த புழுக்கள் அதிகமாகக் கிடைக்கும். இரவு 1 மணிக்கு மும்பையில் இருந்து ரயில் ஏறுனா விடிய காலை 6 மணிக்கு புனே போயிருவோம். விடியற்காலையிலயும், வெயில் இல்லாத நேரத்துல மட்டும்தான் இந்த புழுக்களைப் அதிகமா பிடிக்க முடியும். ஒரு நாளைக்கு சராசரியா 4 கிலோ புழுக்கள பிடிப்பேன். சராசரியா 700 ரூபாவை ஒருநாள்ல சம்பாதிச்சிடுவேன். கிடைச்ச பணத்த குருவி சேக்குற மாதிரி கொஞ்ச கொஞ்சமா சேத்து 2006ல எங்க குலசாமியான தோட்டத்தை அடமானத்துல இருந்து மீட்டேன்.'தோட்டத்தைத்தான் மீட்டுட்ட, கல்யாணம் முடிச்சிடலா'ன்னு வீட்டுல சொன்னாங்க. ரெண்டு வருஷம் போட்டும், இன்னும் சம்பாதிச்சு கூடுதலா தோட்டம் தொரவு வாங்கிடுறேன்னு சொல்லிட்டு மும்பைக்குப் கிளம்பிட்டேன். வழக்கம் போல புழுக்களப் பிடிச்சுட்டு வந்து, வித்திட்டு இருந்தேன்.ஒருநாள் நல்ல காய்ச்சல், கை, கால் உடம்பு வலி ரயில்ல அசந்து தூங்கிட்டேன். அதிகாலை 3 மணி இருக்கும். புனே ரயில் நிலைய பிளாட்பாரத்துல ரயில் நின்னது. கூட வந்தவங்க எல்லாரும், இறங்கிட்டாங்க. அசந்து தூங்கிக்கிட்டுருந்த என்னை எழுப்ப கொஞ்சம் தாமதமாயிடுச்சு. ரயிலும் நகரத் தொடங்கிடுச்சு. கண் முழிச்சி அவசர, அவசரமா ரயில் பெட்டியோட கதவுப்பக்கம் வந்து பிளாட்பாரத்துல எகிறி குதிச்சேன். பிளாட்பாரத்தை விரிவுபடுத்த ஜல்லி கற்கள் போட்டிருந்தது எனக்குத் தெரியல. அவசரத்துல ஜல்லி மேல குதிச்சதும் கால் சறுக்கி பிளாட்பாரத்துக்கும், ரெயிலுக்கும் இடையிலே விழுந்துட்டேன். கண்ணை மூடி முழிக்கிறதுக்குள்ள ரெண்டு கால்களும் கரும்புச்சக்கை மாதிரி நசுங்கி போயிடுச்சி.
விபத்தில் சிதைஞ்சு போன கால்களை அகற்றுவதைத் தவிர வேறு வழியில்லைனு டாக்டர் சொன்னதும், இனிமேல் விவசாயக் கனவு என்னவாகும்னுதான் யோசிச்சேன். சம்பாதிச்ச பணமும் ஆபரேஷனுக்கு சரியாப்போச்சு. எனக்கு மருந்து, மாத்திரை கொடுத்து கவனிக்கக்கூட யாரும் இல்லை. தூத்துக்குடியைச் சேர்ந்த மும்பையில் வசிக்கும் ராஜூ என்ற தமிழர், நான் இருந்த ஆஸ்பத்திரிக்கு இன்னொரு நோயாளியைப் பாக்க வந்தார். நான் தமிழ் பேசுறதைப் பாத்துட்டு, விபத்து நடந்ததைப் பத்தி கேட்டார். அவர் உதவியால 4 மாசம் ஆஸ்பத்திரியில் இருந்தேன். ஆஸ்பத்திரிக்கான எழுபதாயிரத்தோடு தினமும் சாப்பாடு கொடுத்து கவனிச்சுக்கிட்டாரு..அவர் பெரிய கோடீஸ்வரர் இல்ல.. சாதாரண சாப்பாட்டுக்கடை நடத்தி வருபவர்தான். 4 மாசம் சிகிச்சை முடிஞ்சதும் 2 செயற்கை கால்களும் வாங்கி கொடுத்தார். கால்ல இருந்த காயங்களும் நல்லா ஆறிடுச்சு. டாக்டர்கள் வீட்டுக்குப் போகலாம்ன்னு சொன்னாங்க. இனியும் ராஜூவுக்கு செலவு வைக்கக்கூடாதுன்னு கலுங்கடி கிராமத்துக்கே வந்துட்டேன்.கிராமத்துக்கு வந்ததும் எல்லாரும் என்னை பரிதாபமா பாத்தாங்க. என்னால் எந்த வேலையும் செய்ய முடியாதுன்னு நினைச்சாங்க. அவங்க பாவப்படுவதும், எனக்கு உதவுவதும் பிடிக்கல.. செயற்கைக் கால்களை மாட்டிக்கினு வீட்டுக்குள்ளேளே சுவரைப் பிடிச்சு நடந்து பாத்தேன். பத்து, இருபது தடவ கீழே விழுந்தேன். கையில ஒரு தடியை வெச்சு கீழே ஊனி நடந்து பாத்தேன். கொஞ்சம் கொஞ்சமா நடந்தேன். ராப்பகலா தூங்காம புழு பிடிச்சு அடமானத்துல இருந்து மீட்ட தோட்டத்தைப் போய் பாத்தேன். அப்புறம் விவசாய வேலைகள கொஞ்ச கொஞ்சமா செய்ய ஆரம்பிச்சுட்டேன். முன் இருந்த வேகம் வரல..நேரம் அதிகமானாலும் மெதுவா வேலைகள செஞ்சிட்டு வர்றேன். வீட்டை விட்டாத் தோட்டம், தோட்டத்தை விட்டா வீடுன்னு இந்த எட்டு வருஷத்துல எங்கேயும் போகல..விவசாய வேலைகள் மட்டுமே என் காயத்துக்கு மருந்தா இருந்துட்டு வந்துச்சு. இப்போ பழையபடி நெல், தக்காளி, வெண்டை, வெள்ளரி, புடலைன்னு பயிர் செஞ்சிட்டு இருக்கேன். காய்கறிகளை சந்தைக்கு எடுத்து போறதுக்கு மட்டும் மத்தவங்களோட உதவி தேவைப்படுது. மத்த வேலைகள முடிஞ்சளவு நானே பாத்துக்குறேன். யாருகிட்டயும், எந்த உதவியையும் கால் இருக்கும் போதும் சரி, இப்போ இல்லாம இருக்கும்போதும் சரி எதிர்பாக்குறது இல்ல" என்று கட்டை விரலை உயர்த்தி சொல்லும் முருகனின் கண்களில் ஒளிர்ந்த தன்னம்பிக்கையை பார்க்க முடிந்தது.

காத்து வாங்கும் விவசாய நிலம்!

காலம் வேகமாக போய்க் கொண்டிருக்கிறது. அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் பிஸியாகத்தான் இருக்கிறார்கள். சும்மா... இருப்பதுகூட ஒருவகை பிஸியாகிவிட்டது. தங்கள் மனைவி, குழந்தைகளுடன் செலவிடும் நேரம்கூட அரிதாகத்தான் இருக்கிறது. இதில் அண்ணன், தம்பிகள் உறவு என்பதே பெரிய கேள்வியாகத்தான் இருந்து வருகிறது. ஏதாவது வீட்டில் நடக்கும் நல்லது, கெட்டதுகளில் மட்டுமே சொந்தக்காரர்களையும், அண்ணன் தம்பிகளையும் பார்க்கிறோம். நம் குழந்தைகளுக்கும் இவர் சித்தப்பா, பெரியப்பா என்று கை காட்டுகிறோம். ஒரு 30, 40 ஆண்டுகளுக்கு முன்னர் குடும்ப வாழ்க்கையில் அண்ணன், தம்பிகள் உறவு பலம் வாய்ந்த ஒன்றாக இருந்தது. அதேபோல், இன்றைக்கு விவசாயமும் அழிந்து வருகிறது. நிலங்கள் எல்லாம் வீட்டு மனைகள் ஆகிவிட்டது. பச்சை பசேல் பயிர்கள் செழித்து வளர்ந்திருந்த கிராமங்கள் எல்லாம் கரம்பைக் காடாக காட்சியளிக்கிறது. 'கிராமத்துக்கு போவதற்கே பிடிக்கவில்லை. நகரங்களில் மக்கள் எப்படி வாழ்கிறார்களோ அப்படியேதான் கிராமங்களும் மாறிவிட்டது' என்கிறார்கள்.காலமாற்றத்துக்கும், நாம் பெற்று வரும் வளர்ச்சிக்கும் கொடுக்கும் விலைதான் இந்த அண்ணன் தம்பிகள் உறவுகளின் சிதைவோ என்று தோன்றுகிறது. ஒரு காலத்தில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 5 பேருக்கு குறையாத அண்ணன், தம்பி, தங்கச்சி, அக்கா என்று இருப்பார்கள். பெத்த அப்பன்களுக்குகூட பிள்ளைகள் பெயர் தெரியாது. சின்னதம்பி, பெரியதம்பி, சின்னவனே, பெரியவனே, பெரிபாப்பா, சின்னபாப்பா, பெரியக்கா, சின்னக்கா, சின்னதாயின்னுதான் கூப்பிடுவாங்க. பிறகு அதுவே பேராக நிலைச்சிடும். நடுவுல பொறந்தவங்களுக்கு குலதெய்வம், இஷ்ட தெய்வ பெயர்கள வெக்கிற பழக்கமும் உண்டு.
வீட்டில் இருப்பவர்களுக்கு இந்தந்த வேலைகள செய்யணும்னு உத்தரவெல்லாம் கிடையாது. இருக்கிற வேலைகள்ல யாருக்கு என்ன வேலை ஒத்துவருதோ, அவங்க அந்த வேலைகள செஞ்சிட்டு இருப்பாங்க. ஏத்தம் எறைக்கிறது ஒருத்தர்; வயலுக்கு தண்ணி பாய்ச்சுவது ஒருத்தர்; கால்நடைகளை மேய்க்கிறதுக்கு ஒருத்தர்; வீட்டு பெரிதானத்தை (செலவு, வரவு கணக்கு) பாத்துக்கிறதுக்கு ஒருத்தர்; நியாயம், பஞ்சாயத்துக்கு ஒருத்தர்னு இருப்பாங்க. யார் எவ்வளவு சிறப்பாக செயல்பட்டாலும் பெருமை குடும்பத்துக்குத்தான் போய்ச் சேரும். இந்த கூட்டுறவு இருந்ததாலதான் பலம், பலவீனம் எல்லாம் அணுசரிச்சி குடும்பம் நல்லப்படியா போய்ட்டு இருந்தது. வீட்டுக்குள்ள 5 பேர், 10 பேர்னு இருந்ததாலதான் பல ஏக்கர்ல விவசாயமும் நடந்துச்சு.ஒரு குடும்பத்தில் பாகம் போறதுக்குகூட 40 வயசுக்கு மேலதான் இருக்கும். அதுவும் சிலபேர் பேரன், பேத்திகள் எடுத்தபிறகு பாகம் போனவங்களும் உண்டு. அண்ணன், தம்பிகள் நிறைய பேரு இருக்கிற குடும்பங்களோடு, மத்த குடும்பங்கள் சண்டை புடிக்கிறதுக்கு யோசிப்பாங்க. அந்தளவுக்கு அண்ணன், தம்பிகள் குடும்பத்துக்கு மட்டுமில்ல, ஊருக்கே பலம். 90களில் நிறைய பேர் படிக்க ஆரம்பித்து வேலைக்கு போனாங்க. அப்போ படிக்காத, படிப்பு வராத அண்ணன் தம்பிகள் நிலத்தை பாத்துக்கிட்டாங்க. அதனால் விவசாயம் ஓரளவுக்கு நிலைச்சி நின்றது. தொடர்ந்து குழந்தைகள் பெற்றுகொள்வது குறைந்து வரவும், படிப்பவர்கள் எல்லாம் விவசாயத்துக்கு பக்கம் திரும்பாததாலும் படிப்படியா குடும்பங்கள் விவசாயம் செய்வது குறைந்துவிட்டது. படிப்போடு வெவ்வேறு இடங்களுக்கு வேலைகளுக்கு செல்ல, இன்றைக்கு அண்ணன் ஒரு இடத்தில் இருக்கிறார். தம்பி ஒரு இடத்தில் இருக்கிறார். நிலம் மட்டும் கிராமத்தில் காத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. அதற்கு பெற்றோர்கள் காவல் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.இந்தியாவில் மட்டும் இந்த நிலையில்லை. சீனாவிலும் இந்த நிலை இருந்து வருகிறது. நாட்டின் வளர்ச்சி, மக்கள்தொகை பெருக்கம் என்று மேற்கு நாடுகளின் பயமுறுத்தல்களை அரசுகள் மக்களிடம் பரப்பி குழந்தைகள் பெற்றுகொள்வதை ஓரளவு கட்டுப்படுத்தி விட்டது. கலாச்சார ரீதியாக இந்திய மக்களுக்கு பெரிய இழப்புதான்.அப்பன், தாத்தன், பூட்டன் நிலங்களை பங்கு பிரிச்சி அண்ணன், தம்பிகள் எடுத்துகொண்டார்கள். இப்போது அந்த நிலங்கள் வேறு யாரும் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது. சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டோ, கம்பி வேலி போடப்பட்டோ இருக்கிறது. இன்னார் குடும்பத்து நிலம்... எப்பேர்ப்பட்ட விவசாயம் நடந்த பூமி தெரியுமா? என்று பேச்சுக்கள் கிராமங்களில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.நகரத்தில் குடியேறி வாழ்ந்து பழகிவிட்ட மக்கள், பிள்ளைகளின் படிப்புக்காகவும், இன்னப்பிற தேவைக்களுக்காகவும் நகரங்களே கதி என்று இருக்கிறார்கள். நகரத்தில் தங்களை வளப்படுத்திக் கொள்ள கிராமத்தில் இருக்கும் நிலங்களை விற்று வருபவர்கள் ஒரு பக்கம். எப்படியாவது போய் கிராமத்தில் விவசாயம் செய்யணும்னு இருப்பவர்கள் மறுபக்கம். அப்பா, அம்மா இருக்கிற வரை இருக்கட்டும் அப்புறம் விற்றுகொள்ளலாம் என்று இருப்பவர்கள் இன்னொரு பக்கம்.ஆனால், யாரும் அங்கே விவசாயம் செய்து வரும் அண்ணன், தம்பிகளுக்கோ சொந்தக்காரர்களுக்கோ கொடுப்பதற்கு மனமில்லாமல் இருக்கிறார்கள் என்பதுதான் வருத்தமளிக்கிறது.நகரத்தில் இருப்பவர்கள் அனைவரும் கிராமத்துக்கு செல்வார்களா? என்பது அவரவர்களின் மனத்தையும், வாழ்க்கைச் சூழலையும் பொறுத்தது. ஆனால் அங்கே இருக்கும் உங்கள் நிலங்களை சும்மா போட்டு வைக்காதீர்கள். விவசாயம் செய்பவர்களுக்கு கொடுங்கள். உங்கள் அண்ணன், தம்பிகளோ, சொந்தக்காரர்களோ பயன்படுத்திக் கொள்ளட்டும். அபகரித்துக் கொள்வார்கள் என்ற பயம் இருந்தால் நம்பிக்கையுள்ளவர்களுக்கும், ஒப்பந்தங்களை போட்டாவது உங்கள் நிலத்தை பயன்பெற செய்யுங்கள். உங்கள் நிலத்தில் விவசாயம் நடக்கும் வரை, உங்கள் பெயர் கிராமத்தில் நிலைத்திருக்கும். ஏன் என்றால் கிராமத்தின் அடையாளம் விவசாயம். அது இன்றும் மாறிவிடவில்லை.கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த பீர்ஜோபள்ளியில் 8 ஏக்கரில் அண்ணன் தம்பிகளாக சேர்ந்து விவசாயம் செய்து வரும் தம்பி முனிராஜிடம் பேசினோம்."அக்கா தங்கச்சிகள் உட்பட நாங்க 6 பேர். அவங்களுக்கு எல்லாம் கல்யாணம் ஆயிடுச்சு. இப்போ நாங்க ரெண்டு பேர். அண்ணனுக்கு 4 பிள்ளைகள். எனக்கு ரெண்டு குழந்தைகள். அப்பா தவறிட்டாங்க. மொத்தமா இப்ப வீட்ல 11 பேர் இருக்கோம். இதுல ரெண்டு குழந்தைகள தவிர்த்து 4 பிள்ளைகள் உட்பட ஒன்பது பேர் இந்த நிலங்களுக்கு உழைச்சிட்டு வர்றோம். இன்னைக்கு வரைக்கும் ஒன்னா சேந்துதான் தக்காளி, வெங்காயம், முட்டைகோஸ்னு விவசாயம் செஞ்சிட்டு வர்றோம். அண்ணன் கொடுக்கல் வாங்கல்ன்னு இருப்பாரு. நான் தோட்ட வேலைகள பாத்துக்குவேன். தனிப்பட்ட முறையில ஆட்கள வெச்சி செய்யறதுன்னா வர்ற லாபம் முழுக்க வேலையாட்களுக்குத்தான் போகும். ஒன்னா இருக்கிறதாலதான் விவசாயத்துல சம்பாதிக்க முடியுது. இவ்ளோ நிலங்கள்லயும் விவசாயம் செய்ய முடியுது. ஒருத்தருக்கு முடியலைன்னாலும், ஒருத்தரு மாத்தி பாத்துக்குறோம். இருந்தாலும் விவசாய வேலைகள்ல எந்த குறையும் வந்ததில்ல" என்றார்.

அந்த வீரமும், ஆக்ரோஷமும் இனி கனவுதானா?

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றுப் பாரம்பரியமான தமிழரின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்குத் தடை நீடிப்பதால், தமிழரின் மரபு விளையாட்டுக்கு முழுக்குப் போடப்பட்டுள்ளது.இதனால் பல ஆண்டுகள் பாதுகாத்து வளர்க்கப்பட்ட காளைகள் அடிமாடாக அனுப்பப்படுவதாக வரும் தகவல்கள் அதிர வைக்கின்றன.
சங்க இலக்கியங்களில் முல்லை நில கலாச்சாரமாக ஏறு தழுவுதல் எனப்படும் ஜல்லிக் கட்டு நடந்தது.இதற்கு பல்வேறு சான்றுகள் உள்ளன. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக உணர்வோடும், பண்பாட்டோடும் ஒன்றிக்கலந்த ஜல்லிக்கட்டு வெறும் விளையாட்டு மட்டுமா என்ன? முல்லை நில மக்கள் கொண்டாடிய வீரம். விவசாய மக்களின் உயிர்ப்பான பண்பாடு. தமிழர்களின் மாறிவிட்ட வாழ்க்கை  முறை ஜல்லிக் கட்டிலும் மாற்றங்களை கொண்டுவந்தது.அதில் பல காளைகளை வதைக்கும் வகைகள். வீரம் காட்டவேண்டிய விளையாட்டில் வெறி வந்து சேர்ந்தது. இந்த வெறியை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.ஆனாலும் சிற்சில திருத்தங்களோடு அண்மைக்காலமாக கடந்த ஆண்டு வரை தமிழகத்தில் நடத்தப் பட்டது.ஆனால் கடந்து விட்ட இந்த ஆண்டு பொங்கல் விழா தமிழகத்தில்  ஜல்லிக்கட்டு இல்லாத கருப்பு  தினமாக கடந்து விட்டது.அதனால் இது தொடர்புடைய நடவடிக்கைகள் அற்றுப் போய், இறுதியில் திமில்கள் நிமிர்த்தி  வலம் வந்த  கம்பீரக் காளைகள் கசாப்பு கடைக்கு அனுப்பப்படும் நிலைக்கு  வந்துள்ளது.மதுரை  மாவட்டத்தில்  உள்ள அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் போன்ற பகுதிகளிலும், மதுரையை ஒட்டிய  திருச்சி,சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலும்  பொங்கல் விழாவையொட்டி ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படும். இதற்கென நடக்கும் ஏற்பாடுகளால் பொங்கல் விழா களை கட்டும். இதற்காக வீரர்களும், காளைகளும் போட்டி நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பே தங்களை தயார்படுத்தி கொள்வார்கள். காளை வளர்ப்பவர்கள் அதற்கென தனிக்கவனம் செலுத்தி ஆயிரக்கணக்கில் செலவு செய்து பராமரிப்பார்கள்.இந்நிலையில் தான்,  வீர விளையாட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதனால் ஜல்லிக்கட்டு வீரர்களும், காளை வளர்ப்போரும் மட்டும் அல்ல, ஒட்டுமொத்த தமிழர்களே அதிர்ச்சி அடைந்தனர். தடையை நீக்கி மீண்டும் விளையாட்டை தொடர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல கட்ட போராட்டங்கள் நடத்தி வீடுகளில் கறுப்புக் கொடியும் ஏற்றினர்.ஆனாலும் தடை நீக்கப்படாததால் இந்த ஆண்டு  ஜல்லிக்கட்டு  நடத்த முடியவில்லை. இதனால் பொதுமக்களுக்கும், இவ்விளையாட்டை ஆர்வமுடன் காண வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது. காளை வளர்ப்பவர்களுக்கும் போட்டி நடத்தும் அமைப்பாளர்களுக்கும் இந்த தடை பெரும் இடியாக இருந்தது. இந்த விசயத்தில், மாநில அரசும் மத்திய அரசும் ஒன்றையொன்று குறைகள்தான் சொல்லிக் கொண்டனவே தவிர உருப்படியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை. தற்போது ஜல்லிக்கட்டுக்காக பராமரித்து வந்த காளைகளை  சரிவர பராமரிக்க முடியாமல் மாடு வளர்ப்போர் நொந்து போய்,  அவற்றை  மதுரை அருகே உள்ள வாடிப்பட்டி வார சந்தைக்கு கொண்டு சென்று விற்கும் அவலநிலை ஏற்பட்டு உள்ளது.இந்த சந்தைக்கு கேரள மாநில வியாபாரிகள் இறைச்சிக்காக மாடுகள் வாங்க வருவது வழக்கம். ஜல்லிக்கட்டு காளைகளும் இங்கு விற்கப்பட்டு வருவதால் இறைச்சிக்காக அந்த மாடுகளையும் வியாபாரிகள் வாங்கி செல்கிறார்கள்.இதற்கு முன்பு ஒரு ஜல்லிக்கட்டு காளை ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை விற்கப்பட்டு வந்த நிலையில்   ரூ.10 ஆயிரம், ரூ.15 ஆயிரம் என குறைந்த விலைக்கு அடிமாடுகளைப் போல விற்கப்படும் பரிதாப நிலை ஏற்பட்டு இருக்கிறது.இது குறித்து காளைகள்  வளர்ப்பவர்கள், " செல்ல பிள்ளையைப்  போல வளர்த்து வந்த எங்கள் காளைகளை அடிமாட்டு விலைக்கு விற்க வேண்டிய நிலை தடையால் ஏற்பட்டு இருக்கிறது. எனவே தமிழர்களின் வீர விளையாட்டையும், இறைச்சிக்காக விற்கப்படும் காளைகளைக்  காப்பாற்றவும் தடையை நீக்கி மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்த உத்தர விட வேண்டும்" என்கின்றனர் கண்ணீரோடு.

உங்கள் பிரியாணியில் சிக்கனா...பூனைக்கறியா?

சைவ உணவுகளை விரும்பிச் சாப்பிடுவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை செய்தி. சென்னையில் புற்றீசல் போல சாலையோர கடைகள் செயல்படுகின்றன. இங்கு சுகாதாரம் என்பதை எழுதி வைத்து பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாம். பெயரளவுக்கு கூட சுகாதாரத்தை இத்தகைய கடைகள் கடைப்பிடிப்பதில்லை.அதோடு இங்கு சமைக்கப்படும் உணவுப் பொருட்களின் தரமும் படுமோசம். உணவு பொருட்களின்விலை குறைவு என்பதால் இந்தக் கடைகளில் கூட்டம் அலைமோதுகின்றன. ருசிக்கு சாப்பிடாமல் ஏதாவது பசிக்கு சாப்பிட வேண்டும் என்று நினைப்பர்களின் கூட்டம் இங்கு அதிகம். சாப்பிட்டு விட்டு பிறகு அவர்களுக்கு ஏற்படும் உபாதைகள் பல. சமீபத்தில் இத்தகைய சாலையோர தள்ளு வண்டிக்கடைகளில் சிக்கன் என்ற பெயரில் பூனைக்கறி பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. இதற்காக வீடுகளில் வளர்க்கப்படும் பூனைகளைப் பிடிக்க ஒரு கும்பல் சென்னையில் செயல்படுகிறது. இந்த கும்பல் பூனைகளைப் பிடித்து அதன் கறிகளை குறைந்த விலைக்கு சாலையோர தள்ளுவண்டி கடைகளுக்கு விநியோகம் செய்து விடுகிறது. இந்த கறிகளுடன் மசாலா சேர்த்து அதை சிக்கன் என்று சில கடைக்காரர்களும் விற்றுவிடுகின்றனர்.குறைந்த விலைக்கு சிக்கன் 65  கிடைக்கிறது என்று மக்களுக்கும் அதை விரும்பி சாப்பிடுகின்றனர். இதை சாப்பிடுபவர்களுக்கு எந்த வித்தியாசமும் தெரிவதில்லை. இதனால் சென்னை சாலையோர தள்ளுவண்டிக் கடைகளில் சிக்கன் என்ற பூனைக்கறி விற்பனை படுஜோராக விற்பனை நடந்து வருகிறது. இதை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளும், மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளும் கண்டுக்கொள்வதில்லை.பூனைக்களுக்கு ஏற்பட்ட இந்த திடீர் மவுசு காரணமாக இப்போது சென்னையில் பல வீடுகளில் வளர்க்கப்படும் பூனைகள் மாயாகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பூனைகள் மாயமாகிய சில நாட்கள் மட்டும் அவற்றை தேடும் உரிமையாளர்கள் அதன்பிறகு அதை மறந்து விடுகின்றனர். இது பூனைகளை திருடும் கும்பலுக்கு வசதியாக உள்ளது.கடந்த மூன்று மாதங்களில் செங்குன்றத்தில் 20 பூனைகளும், பல்லாவரத்தில் 13, ஐ.சி.எப். அயனாவரத்தில் 6, ஆவடியில் 1  என மொத்தம் சென்னையில் 40 பூனைகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக  'பீப்பிள் பார் கேட்டில் இன் இந்தியா' என்ற அமைப்பினர் தெரிவிக்கின்றனர். கோட்டூர்புரம் பகுதியில் பூனை வெட்டப்பட்ட பிறகு அதன் தோலை இந்த அமைப்பினர் கண்டுப்பிடித்துள்ளனர். இதுபோன்று சென்னையில் பல இடங்களில் பூனைகள் திருடப்படுவது குறித்த விவரங்கள் வெளியில் தெரிவதில்லை என்று அந்த அமைப்பினர் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து 'பீப்பிள் பார் கேட்டில் இன் இந்தியா' என்ற அமைப்பின் உறுப்பினர் அஸ்வத் கூறுகையில், "கால்நடைகளை துன்புறுத்துவது பாவம். அவற்றை நேசிக்க வேண்டும். குறிப்பாக வீடுகளில் வளர்க்கப்படும் பூனை, நாய், பசு ஆகியவற்றின் மீது பரிவு, பாசம் நமக்கு கட்டாயம் தேவை. பூனைகளை கறிக்காக வெட்டிக் கொலை செய்வது குற்றம். இதுகுறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக பூனைகளை கொன்றவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்து வழக்கும் பதிவு செய்து இருக்கிறோம். கடந்த 30.12.2014ல் ஐ.சி.எப். காவல்நிலையத்தில் வைத்தியலிங்கம் என்பவர் மீது 6 பூனைகளை இறைச்சிக்காக கொண்டு சென்றாக புகார் கொடுக்கப்பட்டு பூனைகள் மீட்கப்பட்டுள்ளன" என்றார். 'புட் ஸ்டாண்டர்ஸ் சேப்டி அத்தாரிட்டி' வழிகாட்டுதலில் ஆடு, மாடு, கோழி, பன்றி, மீன் ஆகியவற்றை சாப்பிடலாம். முயல், புறா, பூனை போன்றவற்றை சாப்பிட்டால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதையொல்லாம் அசைவ உணவுப்பிரியர்கள் கண்டுக்கொள்வதில்லை. கண்டதை சாப்பிட்டு உடல் நலத்தையும், ஆயுள் நாட்களையும் குறைத்து வருவது வேதனைக்குரியது. சென்னையில் விற்கப்படும் பிரியாணியிலும் இப்போது தில்லுமுல்லு நடப்பதாக பெயர் வெளியிட விரும்பாத சுகாதார அதிகாரி ஒருவர் கூறினார். சென்னை பெரியமேடு பகுதியில் சில கடைகளில் விற்கப்படும் பிரியாணி அனைத்தும் சாப்பிட தகுதியற்றவைகள். ஏனெனில் இங்கு சப்ளை செய்யப்படும் கறிகள் அனைத்தும் வடமாநிலங்களிலிருந்து சென்னைக்கு ரயில், பஸ் ஆகியவை மூலம் கொண்டு வரப்படுகின்றன. இதற்காக பல நாட்களுக்கு முன்பே கறிகளை வெட்டி எந்தவித பதப்படுத்தல் இல்லாமல் அப்படியே அனுப்பி வைக்கின்றனர். இதனால் அந்தக்கறிகளைக் சாப்பிடும் போது பல்வேறு பாதிப்புகள் நிச்சயம் ஏற்படும். ஒரு சில நட்சத்திர ஓட்டல்களில் சிக்கன் 65 தயாரித்து நாட்கள் கடந்தாலும் அது மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. இவற்றை சாப்பிடும் போது கட்டாயம் பாதிப்பு ஏற்படும். இதனால் நீண்ட நாட்களாக ஓட்டல்களில் சாப்பிடுபவர்கள் வாங்கும் சம்பளத்தில் பாதியாவது மருத்துவர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.சில டாஸ்மாக் பார்களில் விற்கப்படும் அசைவ உணவுகளின் தரம் படுமோசம். குடிபோதையில் இருப்பவர்கள் அதையெல்லாம் கண்டுக்கொள்வதில்லை. சைடு டிஸ் கிடைத்தால் போதும் என்ற மனநிலையில் இருக்கின்றனர். முன்பெல்லாம் காடை என்று காகத்தின் கறி சில ஓட்டல்களில் பயன்படுத்தப்பட்டது. இப்போது சிக்கன் என்ற பெயரில் பூனைக்கறி விற்பனை சென்னையில் மட்டுமல்ல தமிழகத்தில் பட்டைய கிளப்புகிறது.எனவே அசைவ உணவுகளை வெளி இடங்களில் சாப்பிடுபவர்கள் இதையெல்லாம் உணர வேண்டும். அதற்காக அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. தரமான அசைவ உணவுகள் கிடைக்கும் இடங்களை தேர்வு செய்வது புத்திச்சாலித்தனம். உணவே மருந்து என்ற காலம் மாறி அது விஷம் என்ற நிலைமை ஆகிவிட்டது.

இயற்கையை அழிக்கும் ரசாயன தொழிற்சாலைகள்!

வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை சிட்கோ தோல் கழிவு பொது சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள ஒரு கழிவுநீர் தொட்டி உடைந்த  விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர். இதேபோல் கடந்த ஆண்டு  ஈரோடு மாவட்டம், பெருந்துறை தொழிற்பேட்டையில், சாய ஆலை கழிவுநீரை தூய்மைப்படுத்தும் ஆலையில் உள்ள தொட்டியில் உள்ள குழாயில் பழுது ஏற்பட்டதை சரிசெய்ய முயன்ற ஏழு தொழிலாளர்கள்  கழிவுநீர் குழாய் மூலம் வெளியேறிய நச்சுக்காற்றால் இறந்துள்ளனர்.இதுபோன்ற விபத்துகள் ஏற்கனவே தமிழகத்தில் பலமுறை நடந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மட்டும் கடந்த சில ஆண்டுகளில் சாய ஆலை மற்றும் தோல் தொழிற்சாலைகளில் மட்டும் 100 பேர் வரை இறந்துள்ளனர். ஒருவர் இருவர் என சாவு இருந்தால் வெளியே தெரியாமலேயே மறைந்து விடுவதும், இடர்தொகை என்ற பெயரில் ஏதோ சிறிது தொகை கொடுத்து செய்தியே தெரியாமல் மறைத்து வருகின்றனர் அந்நிறுவனங்களின் உரிமையாளர்கள்.இறப்புக்கு உள்ளான பலரும் வடமாநிலங்களை சார்ந்தவர்களாகவும், மற்றும் வெளி மாவட்டத்தை சார்ந்தவர்களாகவும் இருப்பதாலும், இவர்களுக்கான தொழிலாளர் அமைப்புகளும் வலுவாக இல்லாமல் இருப்பதால் இப்படுகொலை யாரும் கேட்பாரின்றி இன்றுவரை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் தமிழகமெங்கும் தோல் ஆலை, சாய ஆலை உட்பட பல்வேறு மிகப்பெரிய தொழில் நிறுவனங்களில் மட்டும் விஷவாயு தாக்கி 800 பேர் கொல்லப்பட்டு உள்ளதாக ஒரு பட்டியல் தெரிவிக்கிறது. ஏன் இந்த திடீர் மரணங்கள்? இதற்கு தொழிற்புரட்சிதான் காரணமா? இதனை தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும் போன்ற கேள்விக்கான பதில்களை நமக்கு அளிக்கிறார் சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்காக போராடிவரும் முகிலன்."1990களுக்கு முன்பு தோலைப் பதப்படுத்த ஆவாரம்பட்டை,  கடுக்காய் கொட்டை, பெருநெல்லி கொட்டை, சுண்ணாம்புக்கல் ஆகியவற்றை முதன்மையாக வைத்தே பயன்படுத்தினார்கள். தோலைப் பதப்படுத்திய பிறகு வரக்கூடிய கழிவுகள்,  வேளாண்மைக்கு பயன்படுத்தப்படும் எருவாக பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் இன்று ராணிப் பேட்டையில் தமிழக அரசால் மூடப்பட்ட தொழிற்சாலைகளில் மட்டும் சுமார் 1.30 லட்சம் டன் குரோமியக் கழிவு உள்ளது. மாவட்டத்தில் உள்ள பொதுக் கழிவு சுத்திகரிப்பு நிலையங்களில் பல ஆயிரம் டன் எடையுள்ள கழிவுகள் உள்ளன. இவற்றை அப்புறப்படுத்துவது எப்படி என்று தெரியாமல் மத்திய, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திணறி வருகின்றனர் என்பதுதான் எதார்த்தமான உண்மை.வேலூர் மாவட்டத்தில் தோல் கழிவால் ஏற்படும் பாதிப்பைத் தவிர்க்க சுற்றுச்சூழல் மறு சீரமைப் புப் பணி தொடங்க வேண்டும் என கடந்த 2003-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை மாவட்ட நிர்வாகம் இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை.1990ஆம் ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட இந்திய ஒன்றிய அரசின் புதிய பொருளியல் கொள்கை என்ற பெயரால் போடப்பட்ட GATT (காட்) ஒப்பந்தப்படி கட்டற்ற முறையில் பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளைக்காக நாடு திறந்து விடப்பட்டது. இதன் விளைவாக சாய மற்றும் தோல் தொழிற்சாலைகளில் உள்நாட்டு தேவைக்கான உற்பத்தி என்பது மாற்றப்பட்டு ஏற்றுமதிக்கான உற்பத்தி என்பது முதன்மையாக மாற்றப்பட்டது. விரைவான உற்பத்திக்காக தோல் தொழிற்சாலைகளிலும், சாயத்தொழிலிலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய வேதியியல் பயன்படுத்தத் தொடங்கினர். இதன் விளைவாக இன்று எண்ணற்ற பாதிப்புகளை நாம் சந்தித்து வருகிறோம்.அதேபோல, மிகப்பெரிய வளர்ச்சி, வேலைவாய்ப்பு எனக் கூறி சென்னிமலை, பெருந்துறை ஒன்றியத்தில் உழவர்களிடம் இருந்து  நிலம் பிடுங்கி எடுக்கப்பட்டு, தொழிற்பேட்டை அமைக்கப்பட்டது. ஆனால் பெருந்துறை தொழிற்பேட்டை வளாகத்தில் அமைக்கப்பட்ட தொழிற்சாலைகளோ உலகில் முன்னேறிய நாடுகள் என அழைக்கப்படும் நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள சிகப்பு வகை ஆலைகளான தோல் தொழிற்சாலை, சாய ஆலை, இரும்பு தொழிற்சாலை, கல்நார் (ஆஸ்பெக்டாஸ்) தொழிற்சாலை, வேதியியல் தொழிற்சாலை போன்ற மிகவும் நாசகரமான தொழிற்சாலைகளே அமைக்கப்பட்டும், மிக அபாயகரமான நச்சுக்கழிவு மேலாண்மை தொழிற்சாலை அமைக்கவும் முயற்சி செய்கிறது. பெருந்துறை தொழிற்பேட்டை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தோல், சாய தொழிற்சாலைகள் மூலம் பல ஊர்களின் நீராதாரம் நச்சுத்தன்மை கொண்டதாக மாறி விட்டது. தமிழ்நாட்டில் வேலூர், ஈரோடு, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில்தான் தோல் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இதில் வேலூர் மாவட்டம்தான் அதிக எண்ணிக்கையிலான தொழிற்சாலைகளைக் கொண்டதும், மிகப் பெரிய அளவிலான தோல் ஏற்றுமதியைக் கொண்டதுமாகும்.தோல் தொழிற்சாலை, சாய ஆலை,  மூலம் நாட்டிற்கு அன்னிய செலாவனி அளவற்று கிடைக்கின்றது. தொழில் வளர்ச்சி சிறப்பாக  உள்ளது என்றெல்லாம் சொல்லப்படுகின்றது. ஆனால், மக்களின் வளங்களை அழித்து யாருக்கு இந்த பொருளாதாரத்தைப் பயன்படுத்தப்போகிறார்கள். தமிழகத்தில் ஆண்ட, ஆளும் எந்த கட்சிக்கும் சுற்றுச்சூழல் சிக்கல் பற்றி எந்தக் கொள்கையும் கிடையாது. சிக்கல் வந்தால் மக்கள் போராடினால் ஓடிவந்து உடன் நின்று கொள்வது என்பது மட்டுமே அரசியல் கட்சிகளின் நடைமுறையாக உள்ளது. உண்மையில் இவர்களில் பெரும்பான்மையோர் இயற்கையை அழிக்கும் தொழிற்சாலைகளுக்கு ஆதரவாக உள்ளனர் என்பதே உண்மை. வளர்ச்சி பெற்ற நாடுகள், அவர்களது மண், அவர்கள் நாட்டின் நீராதாரம், அவர்கள் நாட்டின் மக்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக உள்ளன. இதற்கு நமது நாட்டை பயன்படுத்திக் கொள்கின்றன. மலிவான மனித உழைப்பு, தொழிற்சாலைகளில் தொழிலாளர்களிடம் வேலை வாங்குவது, தொழிலாளிக்கும், மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் என்ன பாதிப்பு ஏற்பட்டாலும் கண்டுகொள்ளாமல் இருக்கலாம் என்பது போன்றவற்றிற்காகவே இங்கே தொழில் தொடங்குகின்றனர். தோல் ஆலைகள், சாய ஆலைகள் ஆகியவற்றின் கழிவுநீரை தூய்மை செய்ய எவ்வகை தொழில்நுட்பமும் இல்லாத இந்த அரசுதான், 48,000 ஆண்டுகள் வைத்துப் பாதுகாக்க வேண்டிய அணுக்கழிவை உற்பத்தி செய்யும் அணுஉலையை வைத்துப் பாதுகாக்கும் என சொல்லி வருகிறது. இப்படி பிரச்னை வரும் நேரத்தில் அனைவரும் வேக, வேகமாக பேசுவதும், பின்பு அது பற்றி மறந்து போவது என்பதே கடந்த கால  வரலாறாக உள்ளது. இதற்கு எல்லாம் அரசின் போர்கால நடவடிக்கைகள் தான் வழி செய்யும். இனியும் அமைதியாக இருப்பதால் எந்த பயனும் இல்லை. இந்த தோல் சுத்திகரிப்பு நிலையங்களை, அபாயகரமான சிகப்பு வகை ஆலைகளை  அதிகாரிகள் மாதம் ஒருமுறை ஆய்வு செய்ய வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரிய விதி தெளிவாக கூறி உள்ளது. மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெற்று பொறுப்பின்றி செயல்படும் அதிகாரிகள் மற்றும் அதிகாரத்தில் உள்ளவர்களை மக்கள் செயல்பாட்டாளர்கள் கண்காணிக்கும், நடவடிக்கை எடுக்கும்  வகையில் புதிய முறைகள் உருவாக்கப்பட வேண்டும். மக்கள், சமூகத்தின் மீது அக்கரையற்று செயல்படும் நேர்மையற்ற அதிகாரிகள் மீது வெறும் கண் துடைப்பு நடவடிக்கை என இல்லாமல் உன்மையான நடவடிக்கை வேண்டும். இயற்கை வழியில், மண்ணுக்கும், மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தோல் ஆலை, சாய ஆலைகளில் தொழில்நுட்பங்கள் பயன்படுத்த வேண்டும். அப்போது தான் இப்படி பாதுகாப்பற்ற முறையில் அழிந்து வரும் பல மனித உயிர்களையும், விலைமதிப்பற்ற இயற்கை வளங்களையும் நாம் பாதுகாக்க முடியும்’ என்று தெரிவித்தார்.