செவ்வாய், 28 ஏப்ரல், 2015

மக்களின் மந்திரி கக்கன்!

தன்னை எரித்து பிறருக்கு வெளிச்சம் தரும் மெழுகுவர்த்தி போல, தன் உடல், பொருள், உயிர் அனைத்தையும் மக்களின் விடுதலைக்காகவும், முன்னேற்றத்திற்காகவம் தியாகம் செய்தவர் கக்கன்.

இன்றைய அரசியல் உலகில் அமைச்சர்களும், அரசியல்வாதிகளும் கார், பங்களா, பணம் என கோடிகளில் புரளுகிறார்கள். ஆனால், ஒன்பது ஆண்டுகள் தமிழகத்தின் அமைச்சராகவும், ஐந்து ஆண்டுகள் பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்த கக்கன், குடியிருப்பதற்கு சொந்த வீடுகூட இல்லாமல் இறுதிவரை வாடகை வீட்டிலேயே வாழ்ந்தார்.
தமது வாழ்நாள் முழுவதும் கதராடை அணிந்து எளிமையாகத் திகழ்ந்தார். மக்களோடு மக்களாக, பேருந்தில் பயணம் செய்தார். தமக்காகவும், தமது குடும்பத்திற்காகவும் அரசுப் பணத்தை கொள்ளையடிக்காமல், கையூட்டுப் பெறாமல், ஊழல் செய்யாமல், சொத்துச் சேர்க்காமல் வாழ்ந்த ‘அதிசய மனிதர்’ கக்கன்!. தமது இறுதி நாட்களில் நோய்வாய்பட்டு வாடிய போதும் அரசு மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர் என்று பெருமை கொள்ளாமல் சிகிச்சை பெற்றார்.
மதுரை மாவட்டம், மேலூருக்கு அருகில் உள்ள தும்பைப்பட்டி எனும் சிற்றூரில் பூசாரி கக்கன் என்பவருக்கும்-பெரும்பி அம்மாளுக்கும் மகனாக 18.06.1909-ஆம் நாள் பிறந்தார் கக்கன்.
இவரது தந்தை கிராம ஊழியராக (தோட்டியாக) பணியாற்றியவர். கக்கன் தமது தொடக்கப் பள்ளிக் கல்வியை மேலூரிலும், உயர்நிலைப் பள்ளிக் கல்வியை திருமங்கலத்திலிருந்த காகாதிராய நாடார் உயர்நிலைப் பள்ளியிலும் முடித்தார். பள்ளி இறுதி வகுப்பு தேர்ச்சி பெற்றவுடன் பசுமலை அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து ஆசிரியர் பயிற்சியையும் முடித்தார்.
ஆசிரியர் பயிற்சி முடிந்ததும், கக்கன் ஆதி திராவிட மக்கள் வாழும் சேரிப்பகுதிகளில் இரவுப் பாடசாலைகள் ஏற்படுத்தி மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து, பள்ளிகளில் சேர்த்து தேர்வுகளில் தேர்ச்சி பெறச் செய்தார்.
கக்கனுடைய மக்கள் தொண்டைப் பற்றி கேள்வியுற்ற, ‘மதுரை காந்தி’ என மக்களால் அழைக்கப்பட்ட ஆ. வைத்தியநாத ஐயர், இவரை அழைத்துப் பாராட்டினார். வைத்தியநாத ஐயருடன் இணைந்து கக்கன் சமூகப் பணிகளிலும், நாட்டு விடுதலைப் போராட்டத்திலும் ஈடுபட்டார். கக்கனுடைய சேவையைப் பாராட்டியதுடன், அவரை மகாத்மா காந்தியடிகளிடம் அறிமுகப்படுத்தினார் வைத்தியநாத ஐயர். கக்கனுடைய அரசியல் நடவடிக்கைகள் காந்தியாரை வியப்படையச் செய்தது.
வைத்தியநாத ஐயர், கக்கன் முதலியவர்களின் தீவிர முயற்சியால் ‘அரிசன சேவா சங்கம்’ மதுரை மாவட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்டு வந்தது. அதிக எண்ணிக்கையில் அரிசனப் பள்ளிகளையும், விடுதிகளையும் நடத்தி அரிசன மாணவர்களின் கல்விக்காகப் பாடுபட்டது. மேலூரில் மாணவியருக்கும், மாணவர்களுக்கும் தனித்தனியாக விடுதிகளை ஏற்படுத்தி, அவை இரண்டிற்குமே காப்பாளராகப் பொறுப்பேற்றுச் செயல்பட்டார் கக்கன். இவ்விடுதிகளுக்கு ‘காந்தி விடுதி’ எனப் பெயரிட்டு மகிழ்ந்தார்.
கக்கன், சிவகங்கையைச் சேர்ந்த சொர்ணம்பார்வதி என்பவரை 1938-ஆம் ஆடு மணம் புரிந்துகொண்டார்.
மகாத்மா காந்தியடிகளுக்கும், அண்ணல் அம்பேத்காருக்கும் 1932-ஆம் ஆண்டு ஏற்பட்ட பூனா ஒப்பந்தப்படி, பத்து ஆண்டுகளில் தீண்டப்படாதவர்களுக்கு, இந்து மதத்தில், சாதி இந்துக்களுக்கு உள்ள அனைத்து சிவில் உரிமைகளும் வழங்கப்பட வேண்டும். பொது நடைபாதைகளில் நடந்துசெல்லும் உரிமை, பொது நீர்நிலைகளைப் பயன்படுத்தும் உரிமை, பொதுக் கிணறுகளில் நீரெடுக்கும் உரிமை, பொதவான இடங்களிலும், உணவு விடுதிகளிலும் செல்லும் உரிமை, கோவிலினுள் நுழைந்து வழிபடும் உரிமை, அரசு கல்வி நிலையங்களிலும், அரசுப் பணிகளிலும் தனி ஒதுக்கீடு பெறும் உரிமை முதலிய உரிமைகள் வழங்கப்பட வேண்டுமென ஒப்பந்தம் அறிவித்தது. அந்த ஒப்பந்தத்தின்படி, இந்துக் கோவில்களுக்குள் தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துச் சென்று வழிபாட்டில் ஈடுபடச் செய்யும் உரிமையை காங்கிரஸ் கட்சியினர் நடத்தினர். இக்கோவில் நுழைவுப் போராட்டம் சாதி இந்துக்களால் தடுக்கப்பட்டது. அதை மீறி மதுரை வைத்தியநாத ஐயரும், கக்கனும் கோவில் நுழைவு உரிமைப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்தினர்.
சென்னை மண்டலத்திற்கு 1937-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றது. இராஜாஜி சென்னை மண்டல முதல்வராகப் பதவியேற்றார். இராஜாஜி தாழ்த்தப்பட்டோர் கோவில் நுழைவு இயக்கத்தை ஆதரித்தார். மேலும் ‘கோவில் நுழைவு’ என்பதைச் சட்டமாக்கினார். ‘மலபார் கோவில் நுழைவு சட்ட முன்வரைவு’ என்ற சட்ட முன்வரைவை 1938-ஆம் அண்டு கொண்டுவந்தார். இதற்குத் தடையாக இருந்த இந்து சமய அறநிலையச் சட்டங்களைத் திருத்தினார். தாழ்த்தப்பட்டோர் கோவில் நுழைவு உரிமைக்கு தடையாக நிற்கும் சாத்திர, சம்பிரதாயங்களை முறியடித்து அவர்களுக்கு முழு உரிமையும் அளிக்கும் சட்டத்தை 1938-ஆம் ஆண்டு நிறைவேற்றினார். ஆனால், இச்சட்டம் இந்துமதவாதிகளின் எதிர்ப்பினால் தோல்வியடைந்தது.
ஆனால், மதுரை அரிசன சேவா சங்கத்தின் செயல்வீரரான கக்கன் கோவில் நுழைவு உரிமையை எப்படியும் நிலைநாட்டிட வேண்டுமென உறுதி பூண்டார். அகில இந்திய அரிசன சேவா சங்கத்தின் துணைத் தலைவரான இராஜேஸ்வரி, நேருவை டெல்லியிலிருந்து மதுரைக்கு வரவழைத்தார். கோவில் நுழைவு உரிமை மாநாட்டை மதுரையில் கூட்டி, மதுரை மீனாட்சியம்மன் கோவிலை தாழ்த்தப்பட்ட மக்கள் வழிபட திறந்துவிட வேண்டுமென தீர்மானம் போட்டார். இராஜாஜி, மதுரை மீனாட்சியம்மன் கோவில் அறங்காவலர்களையும், அலுவலர்களையும் சந்தித்து, கோவிலை தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் திறந்துவிடும்படி கூறினார்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கோவிலைத் திறந்துவிட்டால், இந்து சமய அறநிலையச் சட்டங்களின்படி கோவில் அலுவலர்களும், அர்ச்சகர்களும், அறங்காவலர்களும், பிறரும் தண்டிக்கப்படுவார்கள் என்ற அவலநிலை இருந்தது. அதை அறிந்த இராஜாஜி, அன்றைய‌ ஆளுநராக இருந்த எர்ஸ்கின் பிரபுவிடம் எடுத்துக் கூறி 1935-ஆம் ஆண்டின் அரசியல் சட்டத்தின் 88-ஆவது பிரிவின்படி ‘அவசரப் பிரகடனம்’ ஒன்றை வெளியிடச் செய்தார். ஆதன்படி தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலுக்குள் நுழைந்து வழிபட்டால் அதற்காக கோவில் அதிகாரிகள், அறங்காவலர்கள், அர்ச்சகர்கள் முதலியவர்கள் தண்டனைக்குள்ளாக மாட்டார்கள் என்ற நிலை உருவானது. அதற்குப் பிறகு தமிழகமெங்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலில் நுழைந்து வழிபடும் உரிமை நிலைநாட்டப்பட்டது.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் 1939-ஆம் ஆடு ஜூலை 8-ஆம் நாள் ஆ. வைத்தியநாத ஐயர் தலைமையில் எல்.என். கோபாலசாமி, கக்கன், சாமி.முருகானந்தம், முத்து, வி.எஸ்.சின்னையா, வி.ஆர். பூவலிங்கம் முதலிய தாழ்த்தப்பட்டோர் தலைவர்களும், விருதுநகர் எஸ்.எஸ். சண்முக நாடார் என்ற நாடார் பிரமுகரும் கோவிலில் நுழைந்து வழிபட்டனர். கக்கனின் அரசியல் வாழ்வில் இந்த நிகழ்ச்சி வரலாற்றுத் திருப்புமுனையாக அமைந்தது. கக்கன் மக்களிடையே பிரபலமடைந்தார். இந்த கோவில் நுழைவுப் போராட்டத்தை இராஜாஜி ‘இரத்தம் சிந்தாப் புரட்சி’ எனக் கூறி வைத்தியநாத ஐயரையும், கக்கனையும் புகழ்ந்து பாராட்டினார். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நுழைவுப் போராட்டத்தை அடுத்து, மதுரையிலுள்ள கள்ளழகர், கூடல் அழகர் கோவில்களும் திறந்துவிடப்பட்டன. இதைத் தொடர்ந்து தஞ்சை, திருநெல்வேலி, குற்றாலம், தென்காசி முதலிய இடங்களிலும் தாழ்த்தப்பட்ட மக்களின் கோவில் நுழைவு உரிமைப் போராட்டங்கள் வெற்றிகரமாக நடைபெற்றன.
கோவில் நுழைவுச் சட்டம் நடைமுறைக்கு வந்தபின்னும் கூட, கேரளாவின் மலபாரிலும், தமிழகத்திலும் கோவிலில் தாழ்த்தப்பட்ட மக்கள் நுழைந்து வழிபாடு செய்யும் உரிமை முழுதாக வழங்கப்படவில்லை. ஆங்காங்கே இந்துமத சனாதனியர்களும், சாதி ஆதிக்கம் கொண்டவர்களும் எதிர்ப்பாகச் செயல்பட்டனர். அரிசன சேவாத் தொண்டர்கள் தமிழகத்திலிருந்து கேரளாவின் மலபாருக்குச் சென்றனர். கக்கன் தலைமையில் அரிசன சேவாத் தொண்டர்கள் திருவனந்தபுரம் சென்று அங்குள்ள பவண மீனாட்சி கோவிலுக்குள் நுழைந்து உரிமையை நிலைநாட்டினர்.
மகாத்மா காந்தியடிகளின் தீண்டாமை ஒழிப்பு, தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றம் முதலிய நடவடிக்கைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு தொண்டாற்றினார் கக்கன்.
‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தை 1942-ஆம் ஆடு மகாத்மா காந்தியடிகள் மும்பையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் அறிவித்தார். காங்கிரஸ் தொண்டர்களுக்கு ‘செய் அல்லது செத்துமடி’ என்ற போராட்ட அறைகூவலை விடுத்தார். காமராசரின் நேரடிச் சீடராக விளங்கிய கக்கன் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு, தஞ்சைச் சிறைச்சாலையில் ஒன்றரை ஆண்டுகள் அடைக்கப்பட்டார். போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக காவலர்களின் குண்டாந்தடி தாக்குதலுக்கு உள்ளானார். குருதி கொட்டியபோதும், குண்டாந்தடிகள் தாக்கிய போதும் நாட்டு விடுதலையே தமது உயிர் மூச்சாகக் கொண்டு பாடுபட்டார் கக்கன்.
மகாத்மா காந்தியடிகள், காமராஜர் முதலிய தலைவர்களின் மதிப்புக்கும், அன்புக்கும் பாத்திரமாக விளங்கினார் கக்கன். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக, 1955-ஆம் ஆண்டு ஆவடியில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார். கக்கன் தான் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முதல் தாழ்த்தப்பட்டோர் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கக்கன் 1952-ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் மதுரை வடக்குத் தொகுதியிலிருந்து பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றினார்.
தமிழகச் சட்டமன்றத்திற்கு 1957-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மேலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். காமராஜர் தலைமையில் அமைந்த அமைச்சரவையில் அமைச்சராகப் பொறுப்பேற்று, தாழ்த்தப்பட்டோர் நலம், வேளாண்மை, பொதுப்பணி, உணவு முதலிய துறைகளை திறமையாகவும், நேர்மையாகவும் கவனித்தார்.
தமிழக சட்டமன்றத்திற்கு 1962-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சமயநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். எம். பக்தவசலம் அமைச்சரவையில், தாழ்த்தப்பட்டோர் நலம், மதுவிலக்கு, வேளாண்மை, உணவு, நீர்ப்பாசனம், கால்நடைப் பராமரிப்பு முதலிய துறைகளின் அமைச்சராக விளங்கி ஊழல் செய்யாமல் பணியாற்றினார்.
ஏழ்மையிலும், வறுமையிலும் வாடிய கக்கனுக்கு, தமிழக அரசு 1979-ஆம் ஆண்டு இலவச வீடும், இலவச பயணஅட்டையும், இலவச மருத்துவச் சலுகையும், மாதம் ஐநூறு ரூபாய் ஓய்வு ஊதியமும் வழங்கிட உத்திரவிட்டது.
ஏழையாகப் பிறந்து ஏழைமக்களின் வாழ்க்கை முன்னேற பாடுபட்டு, ஏழையாகவே வாழ்ந்த ‘தியாகச் சுடர்’ கக்கன், தமது எழுபத்திரண்டாவது வயதில் நோய்வாய்பட்டு 28.12.1981-ஆம் நாள் மறைந்தார். அவர் மறைந்தாலும், அவரது மேன்மையும், எளிமையும், தொண்டும் என்றும் வரலாற்றில் நிலைத்து நிற்கும்.

தியாகி சங்கரலிங்கனார்

 ஆட்சி பலத்தால், அதிகார ஆணவத்தால் தமிழ்ப் போராளிகளை இகழ்ந்தனர். சட்டமன்றக் கூட்டங்கள் கூடின; கலைந்தன; ஆனால், ‘தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றம் மட்டும் நடைபெறவேயில்லை.

                தியாகி சங்கரலிங்கனார், தென்பாண்டியின் வணிகக்களமான விருதுநகரில் 1895 ஆம் ஆண்டு பெரிய கருப்பசாமி  - வள்ளியம்மை ஆசியோர்க்கு மகனாகப் பிறந்தார். சங்கரலிங்கனார் 1900இல் திருமால் நாடார் ஓலைப்பள்ளிலும், 1901 இல் சுவீடிஷ் மிஷன் ஞானமாணிக்கம் உபதேசியார் பள்ளிலும், 1902 இல் சச்திரிய வித்தியா கல்விச் சாலையிலும் பயின்றார். இவரது கல்வியானது எட்டாம் வகுப்புடன் முடிவடைந்தது. 1908 ஆம் ஆண்டு ஞானாதிநாத நாயனார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்தார். அப்போது பெருந்தலைவர் காமராசர் அதே பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் படித்தார்.
                சங்கரலிங்கனார் இளமையில் நாட்டு விடுதலையில் நாட்டமும், ஈடுபாடும் கொண்டவராக விளங்கினார். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சியின் சுதந்திரப் போராட்ட உரையினைக் கேட்டு விடுதலை உணர்வு பெற்றார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் 1908 ஆம் ஆண்டு முதல் தன்னை இணைத்துக் கொண்டார்.
                விருதுநகரில் ‘பங்கஜ விலாச வித்தயாபிவர்த்திச் சங்கம்’ என்னும் அமைப்பை 1914 ஆம் ஆண்டு ஏற்படுத்தி, பெண் கல்வி மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு சுவாமி திருவாலவாயர் செயல்பட்டார். சங்கரலிங்கனார் அச்சங்கத்தின் செயலாளராகத் தொண்டாற்றினார்.
                சங்கரலிங்கனார் செந்தியம்மாள் என்பவரை 1915 ஆம் ஆண்டு வாழ்க்கைத் துணைவியாக ஏற்றார். தன் முதல் மகளுக்கு பங்கசம் என்று பெயர் சூட்டினார்.
                சங்கரலிங்கனார் ‘மாதர் கடமை’ என்னும் நூலை எழுதி 1920 ஆம் ஆண்டு வெளியிட்டார். நூல் வெளியீட்டைத் தொடர்ந்து சங்கரலிங்னாருக்கு மூதறிஞர் இராஜாஜியின் தொடர்பும் நட்பும் ஏற்பட்டது.
                அதே ஆண்டு திருநெல்வேலியில் நடைபெற்ற சென்னை மாகாண அரசியல் மாநாட்டில் கலந்து கொண்டார். அம்மாநாட்டில் இராஜாஜியை சந்தித்தது உரையாடினார்.
                அவரும் அவரது குடும்பத்தினரும் கதரே உடுத்துவதென 1922 ஆம் ஆண்டு முதல் முடிவு செய்தனர். கதர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு ‘விருதுநகர் கதர் வஸ்திராலயம்’ என்னும் கதர்க் கடையைத் திறந்தார். கதர் விற்பனையை அவர் அதிகமாகச் செய்ததைப் பாராட்டி 26.04.1926 இல் சுதேசமித்திரன் இதழ் ஒரு பாராட்டுச் செய்தி வெளியிட்டது. அப்போது சென்னை மாகாணத்தின் கதர் வாரியத் தலைவராக தந்தை பெரியாரும், செயலாளராக எஸ்.இராமநாதனும் தொண்டாற்றினர்! விருதுநகருக்கு தந்தை பெரியாரை 1924 ஆம் ஆண்டு அழைத்து, த.இரத்தினசாமி நாடார் நினைவு வாசக சாலை சார்பாக பொதுக் கூட்டம் நடத்தினார்.
                காந்தியடிகளை 16.02.1925 பம்பாயில் சந்தித்தார். அன்று முதல் நாள்தோறும் நூல் நூற்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். ‘மகாத்மா காந்தி கதர் வஸ்திராலயா’ என்னும் கதர்க்கடையில் பணியாற்றினார். 1927 ஆம் ஆண்டு காந்தியடிகள் விருதுநகர் வருகை புரிந்த போது சிறப்பான ஏற்பாடுகளை சங்கரலிங்கனார் செய்தார். காந்திஜி தங்கிய கிராமத்திற்கு நகராட்சியின் ஒப்புதல் பெற்று ‘காந்தி தங்கல்’ என்று பெயர் சூட்டினார். காந்திஜி உப்புச் சத்தியாகிரகத்துக்காக 1930 ஆம் ஆண்டு தண்டியாத்திரை தொடங்கியபோது சங்கரலிங்கனார் மூன்று நாட்கள் காந்தியடிகளுடன் பயணம் மேற்கொண்டார்.
                காந்தியடிகளின் தலைமையில் 1930-31 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டக் காலத்தில், சங்கரலிங்கனார் சென்னை, திருச்செங்கோடு, ஈரோடு, காரைக்குடி ஆகிய நகரங்களுக்குச் சென்று தலைவர்களை சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு திரட்டினார். சங்கரலிங்கனார் கரூர், திருச்சி முகாம்களிலிருந்து சத்தியாக்கிரக இயக்கத்தை நடத்தினார்.
                திருச்சி சத்தியாக்கிரகப் போராட்ட வழக்கில் ஆறு மாத‌ங்கள் கடுங்காவல் தண்டனையும், கரூர் வழக்கில் ஆறு மாதங்கள் கடுங்காவல் தண்டனையும், ரூ.50 அபராதமும் விதிக்கப்பட்டது. திருச்சி மத்திய சிறைச்சாலையில் தண்டனையை அனுபவித்தார்.
                அவருக்குச் சொந்தமான இரண்டு வீடுகளையும், அவர் சேமித்து வைத்திருந்த ரூபாய் நான்காயிரத்தையும் விருதுநகர் சத்திரிய மகளிர் உயர்நிலைப்பள்ளிக்கு 1952 ஆம் ஆண்டு நன்கொடையாகக் கொடுத்தார். அந்தத் தொகையிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையைக் கொண்டு, பள்ளியில் பயிலும் ஏழைக் குழந்தைகளுக்கு மதிய உணவாக உப்பில்லாக் கஞ்சி ஊற்ற வேண்டும் என்ற ஒரு திட்டத்தை ஏற்படுத்தினார். பெருந்தலைவர் காமராசர் பின்னர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டத்திற்கு இது முன்னோடியானதாகும்!
                தியாகி சங்கரலிங்கனார் பழம்பெரும் காங்கிரஸ் தியாகி; நாட்டின் சுதந்தரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். நம் தாய்த் தமிழகத்துக்கு 'மதராஸ்' என்னும் பெயர் இருத்தல் கூடாது; ‘தமிழ்நாடு’ என்று பெயர் வைக்க வேண்டும் என உளமார விரும்பினார். தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கையை முன்னிட்டு 27.07.1956 ல் விருதுநகர் தேசபந்து திடலில் “உயிர் பெரிதன்று – மானமே பெரிது” என்ற இலட்சியப் பிடிப்புடன் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து உண்ணா நோன்பை மேற்கொண்டார்.
12 அம்சக் கோரிக்கைகள்:
1. மொழிவழி மாநிலம் அமைத்தல் வேண்டும்
2. சென்னை இராஜ்ஜியம் என்பதை மாற்றி ‘தமிழ்நாடு’ எனப் பெயரிடுதல் வேண்டும்.
3. இரயிலில் ஒரே வகுப்பில் அனைவரும் பயணம் செய்தல் வேண்டும்.
4. வெளிநாட்டு விருந்தினர்களுக்கு நடனம் முதலான ஆடம்பரங்களை விலக்கி, சைவ உணவு அளித்தல் வேண்டும்.
5. அரசுப் பணியில் உள்ளவர்கள் அனைவரும் கதர் அணிதல் வேண்டும்.
6. ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து அரசியல் தலைவர்கள் சாதாரண மக்களைப் போல் வாழ்தல் வேண்டும்.
7. தேர்தல் முறையில் மாறுதல் செய்தல் வேண்டும்.
8. தொழிற் கல்வி அளிக்கப்பட வேண்டும்.
9. இந்தியா முழுவதும் மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும்.
10. விவசாயிகளுக்கு 60 விழுக்காடு வரை விளைச்சலில் வாரம் அளித்தல் வேண்டும்.
11. மத்திய அரசு இந்தியை மட்டும் பயன்படுத்தக் கூடாது.
12. பொது இடங்களில் ஆபாசமாக நடந்து கொள்வதைத் தடுத்தல் வேண்டும். 
                உண்ணா நோன்பிருந்த சங்கரலிங்கனாரை அறிஞர் அண்ணா சந்தித்தார். அண்ணாவைக் கண்டவுடன் சங்கரலிங்கனாரின் உள்ளத்தில் புதுத்தெம்பு பிறந்தது. சங்கரலிங்கனார் அறிஞர் அண்ணா அவர்களிடம் மனம் திறந்து சில கருத்துக்களை வெளியிட்டார். “அண்ணா! நீங்களாவது என்னுடைய கோரிக்கைகளையும் தலையாய கோரிக்கையான ‘தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கையை’ நிறைவேற்றுங்கள்”, என்று கேட்டுக் கொண்டார்.
                அறிஞர் அண்ணா, சிலம்புச் செல்வர்.ம.பொ.சிவஞானம், காங்கிரஸ் தலைவர் கக்கன், கம்யூனிஸ்ட் தலைவர் ப.ஜீவானந்தம் போன்ற தலைவர்கள் உண்ணா நோன்பினைக் கைவிடுமாறு சங்கரலிங்கனாரிடம் கேட்டுக் கொண்டார்கள். ஆனால், இலட்சியப்பிடிப்புடன் சங்கரலிங்கனார் உண்ணா நோன்பைக் கைவிட மறுத்துவிட்டார்.
                உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த சங்கரலிங்கனாரின் உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. 10.10.1956 அன்று, காவல் துறையினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவச் சிகிச்சைக்கு சங்கரலிங்கனார் உடன்படவில்லை; 13.10.1956 அன்று சங்கரலிங்கனாரின் இன்னுயிர் உடலை விட்டுப் பிரிந்தது.
                சங்கரலிங்கனார் இறப்பதற்கு இரு தினங்களுக்கு முன் “நான் ஒரு வேளை இறக்க நேரிட்டால், என் உடலைத் தயவு செய்து காங்கிரஸ்காரர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். எனக்கு உறுதுணையாக இருந்த கம்யூனிஸ்டுகளிடம் ஒப்படையுங்கள்” என பத்திரிக்கை நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
                அவர் கூறியது போலவே இரு தினங்களில் இறந்தார். அவர் வேண்டுகோளின்படியே கம்யூனிஸ்ட் தலைவர்கள் கே.பி.ஜானகியம்மாள், கே.டி.கே தங்கமணி ஆகிய இருவரும் கையொப்பமிட்டு அன்னாரின் உடலைப் பெற்றனர்.
                இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள், கம்யூனிஸ்ட்டு கட்சித் தொண்டர்கள், விருதுநகர் நகரசபைத் தலைவர், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அனைத்துக் கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டு சங்கரலிங்கனாரின் ‘புகழ் உடலுக்கு’ இறுதி மரியாதை செலுத்தினர்.
                தியாகி சங்கரலிங்கனாரின் மறைவுச் செய்தி மாணவர்களை மீளாத் துயரில் ஆழ்த்தியது. சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் உண்ணா நோன்பு இருந்தனர். 76 நிமிடங்கள் கல்லூரி வளாகத்தில் மௌனம் அனுசரித்து அஞ்சலி செலுத்தினர்.
                சென்னை மாநகர அனைத்துக் கல்லூரி மாணவர்கள் 15.10.1956ல் வேலை நிறுத்தம் செய்து தியாகி சங்கரலிங்கனாருக்கு வீரவணக்கம் செலுத்தினர்.
                ஒரு மனிதனுடைய பிறப்பு எவ்வாறு அமைந்தது என்பது முக்கியமல்ல; அவருடைய இறப்பு எவ்வாறு அமைகிறது என்பதே ஒரு மனிதனை அடையாளம் காட்டுகிறது என்பதற்கு ஏற்ப அவருடைய சாவே, தொண்டன் சங்கரலிங்கத்தைத் ‘தியாகி சங்கரலிங்கனார்’ ஆக்கியது. துனிமனித ஒழுக்கமும் கொள்கைப் பிடிப்பும் உடைய எவரும் சாதனை மனிதராகத் திகழ முடியும் என்பதற்கு ஏற்ப அவருடைய சாவே, தொண்டன் சங்கரலிங்கத்தைத் ‘தியாகி சங்கரலிங்கனார்’ ஆக்கியது. தனிமனித ஒழுக்கமும் கொள்கைப் பிடிப்பும் உடைய எவரும் சாதனை மனிதராகத் திகழ முடியும் என்பதற்கு தியாகி சங்கரலிங்கனார் ஒரு சிறந்த எடுத்துக் காட்டாவார்.
                சென்னை மாநில சட்டமன்றத்தில் சென்னை இராஜ்ஜியத்துக்குத் தமிழ்நாடு என்னும் பெயர் மாற்ற மசோதா 24.11.1956 அன்று கொண்டு வரப்பட்டது. மசோதா விவாதத்தின்போது பேசிய நிதியமைச்சர் ஆர்.வெங்கடராமன்,
                “புதிய நாடு (மாநிலம்) அமைப்பது பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்கும்போது விவாதிக்கலாம் என்றும், சென்னை என்ற பெயர் உலகப் பிரசித்தி பெற்றதால், அப்பெயர் நிலைத்திருக்க வேண்டும்” என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுத் தீர்மானம் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் முதல் பாரதி பாடிய கவிதை இலக்கியம் வரை யாவிலும் ‘தமிழ்நாடு’ என்ற சொல் இடம் பெற்றுள்ளது என்பது அன்றைய ஆட்சியாளர்களுக்குத் தெரியவில்லை போலும்.
                ‘தமிழ்நாடு’ – எனப்பெயர் மாற்றுவதற்கு ஆதிக்க சக்திகள் மறுத்தன. அதனைக் கண்டித்து தந்தை பெரியார் விடுதலை இதழில் (10.11.1956) “தமிழ், தமிழ்நாடு என்கிற பெயர் கூட இந்நாட்டுக்கு, சமுதாயத்திற்க இருக்க இடமில்லாதபடி எதிரிகள் சூழ்ச்சி செய்து வெற்றி பெற்று விட்டார்கள் என்கிற நிலைமை ஏற்பட்டு விடுமானால் பிறகு என்னுடைய கழகத்தினுடைய, என்னைப் பின்பற்றும் நண்பர்களுடைய வாழ்வு வேறு எதற்காக இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை……. நமது மொழி எது? என்பதையே மறைத்து விடுவதென்றால், பிறகு தமிழன் எதற்காக உயிர் வாழ வேண்டும் என்பது எனக்குப் புரியவில்லை. ஆகவே இக்கேடு, முளையிலேயே கிள்ளியெறியும்படியான முயற்சியில் ஈடுபடும்படி அனைத்து தமிழர்களையும் உண்மையிலேயே வணங்கி வேண்டிக் கொள்கிறேன்”.
                அறிஞர் அண்ணா பாராளுமன்ற உறுப்பினரானபோது, சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்னும் பெயர் மாற்ற மசோதாவை 16.03.1962 நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தார். மத்திய அரசால் இம்மசோதா தள்ளுபடி செய்யப்பட்டது.
                தமிழ்நாடு பெயர் மாற்றச் சிறப்பு மாநாடு 25.12.1960 அன்று சிலம்புச் செல்வர் தலைமையில் கோகலே மண்டபத்தில் நடைபெற்றது. மாநாட்டில் பெயர் மாற்றப் போராட்டத்திற்கு அறிஞர்கள் முழுமையான ஆதரவை நல்கினார். மாணவர்களும், பொது மக்களும் பல்வேறு வகைப் போராட்டங்களில் கலந்துக் கொண்டு ஆயிரக்கணக்கில் சிறை புகுந்தனர்.
                அறிஞர் அண்ணா தமிழகத்தின் முதல்வரான பின்னர் 14.04.1967 தமிழ்ப் புத்தாண்டன்று, சித்திரை முதல் நாளில் சென்னைக் கோட்டை முகப்பிலே “தமிழக அரசு தலைமைச் செயலகம்” என்னும் ஒளிவீசும் தமிழ்ப் பெயர்ப் பலகையைத் திறந்து வைத்தார்.
                தமிழக சட்டமன்றத்தில் 18.07.1968 அன்று சென்னை மாநிலம் தமிழ்நாடு ஆகும் என்ற அரசியல் தீர்மானத்தை அறிஞர் அண்ணா முன் மொழிந்து பேசினார்.
                'இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இந்த மாநிலத்தின் பெயரைத் தமிழ்நாடு என்ற மாற்றியமைக்க வேண்டும் என்று இந்தியப் பேரரசை உறுதியாக கேட்டுக் கொள்வதுடன் அரசியல் சட்டத்தில் தேவையான திருத்தங்களைச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்த அவை பரிந்துரை செய்கிறது’ –என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
                அறிஞர் அண்ணா, சட்டமன்றத் தலைவர் சி.பா.ஆதித்தனாரின் ஒப்புதல் பெற்று அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் அண்ணாவின் குரலைத் தொடாந்து “தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க!” என மும்முறை முழங்கினர். அறிஞர் அண்ணா “இத்தீர்மானம் ஒப்புக்கொள்ளப்பட்டிருப்பது தமிழர்க்கு – தமிழர் வரலாற்றுக்கு – தமிழ்நாட்டுக்கு -கிடைத்த பெரும் வெற்றியாகும். தமிழ்நாடு பெயர் மாற்றத்துக்காக உயிர் நீத்த தியாகி சங்கரலிங்கனாருக்கு நினைவுச் சின்னம் எழுப்புவது போல் அவர் எண்ணம் ஈடேறிவிட்டது” என்று கூறினார்.
                நாடாளுமன்றத்தில் சென்னை மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றுவதற்கான மசோதா 23.11.1968 அன்று நிறைவேறியது.
                சென்னை மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றும் விழா 01.12.1968 அன்று ‘பாலர் (கலைவாணர்) அரங்கில்’-சிறப்பாக நடைபெற்றது. அதே நாளில் தமிழ்நாடு பெயர் மாற்ற விழா தமிழ்நாடெங்கும் கொண்டாடப்பட்டது.
                சங்கரலிங்கனார் உண்ணா நோன்பின் போது அறிஞர் அண்ணாவிடம் நேரில் கோரியபடி, அறிஞர் அண்ணா தமிழக முதலமைச்சரானவுடன் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் தமிழ்நாட்டுக்குச் சூட்டப்பட்டது.
                ‘தமிழ்நாடு’ – பெயர் மாற்றத்திற்காக, தமிழ் உணர்வுடன் தமிழக அரசு 76 நாட்கள் உண்ணா நோன்பிருந்து இன்னுயிர் ஈந்த தியாகி சங்கரலிங்கனாருக்கு விருதுநகரில் நினைவகம் அமைக்க வேண்டும். இதுவே தமிழக முதல்வருக்கு தமிழ் மக்கள் விடுக்கும் கோரிக்கையாகும்.

கால்டுவெல்லும் இடையன்குடியும்:ஒரு கிராமத்தின் உருவாக்கம்

தமிழ் மண்ணில் சமயப் பணியாற்ற வந்த ஐரோப்பியத் திருத்தொண்டர்களுள் பெரும்பான்மை யோர் தமிழுக்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் குறிப்பிடத் தக்க பங்களிப்புகள் செய்துள்ளனர். அவர்களுள் என்றும் நினைக்கத்தக்கவராக இருப்பவர்களுள் இராபர்ட் கால்டுவெல்லும் ஒருவராவார். இராபர்ட் கால்டுவெல்லின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் தமிழுக்கும் தமிழக அரசியலுக்கும் செய்த பங்களிப்புகளின் காரணமாக அந்த நூல் இன்றளவும் பேசப்படுகின்றது. இந்த நூல் பேசப்பட்ட அளவிற்கு அவரது பிற படைப்புகள் பேசப்படவில்லை. அது போன்றே அவரது சமூகச் சமயப் பணிகளும் பேசப்படவில்லை. தமிழ்ச் சமூகச் சூழலில் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூல் மதிப்பிடற்கரிய பங்களிப்பாக அமைந்ததால் கால்டுவெல்லின் ஏனைய பணிகள் துலங்கவில்லை. அவ்வாறு துலங்காமல் போன ஒர் அரிய பணி, இடையன் குடியின் உருவாக்கமும் அங்கு அவர் எழுப்பிய தேவாலயமுமாகும்.

 caldwell 450


அயர்லாந்து நாட்டைச் சார்ந்த இராபர்ட் கால்டுவெல் முதலில் எல்.எம்.எஸ். நிறுவனத்தின் திருத்தொண்டராகச் சென்னைக்கு 1838 இல் அனுப்பப் பட்டார். மூன்று ஆண்டுக் காலப் பணிக்குப்பின் எல்.எம்.எஸ்-சை விட்டு விலகி எஸ்.பி.ஜி நிறுவனத்தில் கால்டுவெல் இணைந்தார். அதன்பின் 1841 இல் எஸ்.பி.ஜி யின் அதிகாரம் பெற்ற திருத்தொண்டராக இடையன்குடிக்கு வந்தார். கால்டுவெல் இடையன் குடிக்கு வருவதற்கு முன்பே அப்பகுதியில் கெரிக், சத்தியநாதன் ஆகியவர்கள் பணியாற்றிக் கிறித்த வத்தைப் பின்பற்றும் ஒரு சிறு கூட்டம் உருவானது. இவர்களின் வழிபாட்டுக்காக ஒரு சிறிய ஆலயமும் கட்டப்பட்டிருந்தது. ஆனால் இந்தக் கிறித்தவர்களை முறையாக வழிநடத்தும் முழுநேரத் திருத்தொண்டர்கள் இன்மையால் அவர்கள் கிறித்தவத்தில் முழுமையாக நிலைத்திருக்கவில்லை. மேலும் இவர்கள் வறுமையிலும் ஏழ்மையிலும் காணப்பட்டனர். இவர்கள் இடையன் குடியைச் சுற்றியுள்ள இருபது குக்கிராமங்களைச் சார்ந்தவர்களாக இருந்தனர். கால்டுவெல் திருப் பணியைத் தொடங்கும்போது இடையன்குடிக் கிறித்தவர்கள் சிதறடிக்கப்பட்டவர்களாகவும் பெரும் பான்மையினர் கிறித்தவத்தைவிட்டு வெளியேறியவர் களாகவும் காணப்பட்டனர். மேலும் அங்கிருந்த சிறிய ஆலயம் புயலால் பெரிதும் சிதைவுற்றுக் கிடந்தது.
 
இடையன்குடியில் இடையர்கள் மிகுதியாக வாழ்ந்ததால் அப்பெயர் பெற்றதாக வாய்மொழித் தகவல்கள் குறிப்பிடுகின்றன. வறட்சி, பஞ்சம் ஆகிய வற்றின் காரணமாக இடையர்கள் குடிபெயர்ந்ததால் நாடார்கள் இப்பகுதியில் குடியமர்ந்தனர். இடையன்குடி செம்மண் தேரி ஆகும். இதன் சுற்றுவட்டாரங்களில் பனைமரங்கள் மிகுதி. எனவே நாடார்கள் இடையன்குடி வறட்சியான பகுதி என அறிந்தும் அப்பகுதியில் குடியமர்ந்தனர். கால்டுவெல் அங்கு வரும் பொழுது அது ஒரு கிராமம் என்று அழைக்கும் தகுதியைப் பெற்றிருக்கவில்லை. “பிளந்த கள்ளியும் விரிந்த முள்ளியும் நிறைந்த தேரியில் கற்பகத் தருவெனத் தழைத்துச் செழித்து வளரும் பனைகளே அந்நிலத்தில் வாழும் மாந்தர்க்கும் பழுதற்ற செல்வமாகும். காலையும் மாலையும் பனையேறிப் பதநீர் வடித்துப் பண்புறக் காய்ச்சி, கட்டிசெய்து விற்றுக் காலங்கழிக்கும் ஏழை மக்களே அவ்வூர்ப் பழங்குடிகளாவர். கால்டுவெல் ஐயர் அவ்வூரில் வந்த பொழுது கூரை வேய்ந்த குடிசைகள் தாறுமாறாகக் கட்டப்பட்டிருந்தன. மனைகளைச் சூழ்ந்து முள் நிறைந்த கள்ளியே வேலியாக அமைந்தது. நேரிய தெருக்கள் எங்கும் காணப்படவில்லை. ஊர் நடுவேயமைந்த அகன்ற வெளியிடத்தில் ஓங்கி உயர்ந்த புளிய மரங்கள் ஆங்காங்கு நின்று நிழல் விரிந்தன. அவ்வெளியிடத்தில் ஒரு மூலையில் வழிபாட்டுக்குரிய கிருத்தவக் கோயிலும் வேதியர்க்குரிய சிறு வீடும் அமைந்திருந்தன (ரா.பி.சேதுப்பிள்ளை 2013:733).
 
கால்டுவெல்லுக்கு முன்னர் அவ்வூரில் பணி யாற்றிய திருப்பணியாளர்கள் சிறிய ஆலயம் மற்றும் திருப்பணியாளர் இல்லம் ஒன்றும் அமைத்திருந்தனர். இதற்காக அவர்கள் சொற்ப அளவில் நிலமும் சொந்தமாகப் பெற்றிருந்தனர். கால்டுவெல்லுக்கு இடையன்குடி ஊரின் அமைப்பு ஒழுங்கற்றதாகவும் திட்டமிடப்பெற்ற குடியிருப்பதாகவும் தோன்றவில்லை. கால்டுவெல்லின் சமகாலத்திலும் அவருக்கு முன்னரும் திருநெல்வேலி மாவட்டத்தில் தொண்டாற்றிய ஐரோப்பியத் திருத்தொண்டர்கள் உருவாக்கிய பல கிராமங்கள் அவர் மனக்கண்முன் தோன்றின. அக் கிராமங்கள் நேர்த்தியாகவும் ஒழுங்காகவும் திட்டமிடப் பெற்றிருந்தன. மெஞ்ஞானபுரம், சாயர்புரம், சமாதான புரம், நாசரேத், அடைக்கலப்பட்டணம் ஆகிய ஊர்கள் அவருக்கு முன் மாதிரிகளாக அமைந்தன. இவ்வூர்களை உருவாக்கிய ரேணியஸ், ஜி.யு.போப், மர்காசியஸ் போன்றவர்கள் அவருக்கு முன்மாதிரிகளாக அமைந்தனர்.
 
கிறித்தவத்தைத் தழுவியவர்களுக்கு அவர்களது சாதியினராலும் பிறசாதியினராலும் கொடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களும் இடையூறுகளுமே இத்தகைய புதிய கிறித்தவக் கிராமங்களின் உருவாக்கத்திற்குக் காரணமாக அமைந்தன. ஆனால் இடையன்குடியில் கால்டு வெல்லுக்கு அப்படியரு சூழல் இருந்ததாகத் தெரியவில்லை. “எஸ்.பி.சி.கே. சங்கத்தாருடன் மிகத் தோழமை கொண்டிருந்த கிழக்கிந்தியக் கம்பெனி உத்தியோகஸ்தரான ஒரு ஆங்கிலோ இந்தியச் சபையினரான சாயர் என்பவருடைய பெயர் அவருக்கு நன்றியறிதலான, ஞாபகர்த்தமாக இடப்பட்டது. துன்புறுத்தப்பட்ட கிறித்தவர்கட்காக தாமிரபரணி ஆற்றின் வடபுறத்தில் 150 ஏக்கர் நிலம் வாங்கி அந்த அமைதியான சமாதானமான இடத்தில் அவர்களைக் குடியேற்றினர். 1814இல் அந்தக் கிராமமானது சாயர்புரம் என்ற பெயர் பெற்றது (ஹென்ரி பாக்கிய நாதன்,பக்.54). இவ்வாறு புதிதாக நிலத்தை வாங்கி  அங்குக் குடியிருப்புக்களை அமைத்து ஒரு கிராமத்தை உருவாக்கும் செயலைப் பல திருப்பணியாளர்கள் செய்துள்ளனர்.
 
இடையன்குடி கால்டுவெல்லுக்குச் சவாலாக இருந்தது. அங்குக் குடிசைகள், சிறிய ஆலயம் போன்றவை ஏற்கனவே இருந்தன. இந்த அமைப்பை ஒழுங்குபடுத்துவதே கால்டுவெல்லின் நோக்கம். கால்டுவெல் கிறித்துவப் பயிற்சிக்கு முன்னர் டப்ளினில் ஓவியப் படிப்புப் படித்தார். எனவே அவருக்கு அழகுணர்ச்சி இயல்பாகவே அமைந்திருந்தது. இதனால் அழகான இடையன்குடி குறித்த ஓரு ஓவியம் அவர் மனத்தில் இருந்தது. இந்தச் செயல்திட்டத்தை நிறை வேற்றக் கடுமையாகப் போராடினார் அவர். “திருக் கோயிலைச் சுற்றியிருந்த நிலங்களை விலை கொடுத்து வாங்கினார். அந்நிலங்களில் தொன்று தொட்டுக் குடியேற்றுரிமையின் பெயரால் வீடு கட்டுங் காலங் களில் கடமை பெற்று வந்த சில நாடார்களின் உரிமை களைத் தக்க விலை கொடுத்து விலக்கினார். இங்ஙனம் வில்லங்கத்தைத் தீர்த்தொழித்த பின்பு அந்நிலங்களைத் திருத்தத் தொடங்கினார். எம்மருங்கும் பரந்து கிடந்த கள்ளியையும் முள்ளியையும்  களைந்தெறிந்து தெருக் களைத் திருத்தமுற வகுத்து சந்திகளில் கிணறுகளமைத்து நிழல் விரிக்கும் மரங்களை வீதியின் இரு புறமும் நட்டு செவ்விய முறையில் சிறு வீடுகள் கட்டுவித்தார். எண்ணும் எழுத்தும் அறியாதிருந்த அவ்வூர்ச் சிறுவர் சிறுமியர்க்கு எழுதவும் படிக்கவும் கற்பிக்கக் கருதிப் பாடசாலைகள் நிறுவினார் (ரா.பி.சேதுப்பிள்ளை 2013:734). 
 
கால்டுவெல் அவர்கள் இடையன்குடி கிராமத்தை வடிவமைக்க ஒரு வரைபடம் தயாரித்ததாகச் சொல்லப் படுகின்றது. இந்த வரைபடத்தைத் தயாரிப்பதற்காக மரம் ஒன்றின் மீது ஏறி அதன் பரப்பையும் கிடப்பையும் அறிந்தார் என செவிவழிச் செய்திகள் உள்ளன ((D.S.George Muller 1996:3). ஆர்.எஸ். ஜேக்கப் அவர்கள் எழுதிய பனையண்ணன் நாவலில் கால்டுவெல் பனைமரத்தின் மீது ஏறி இடக்கிடப்பை அறிந்தார் எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது (ஆர்.எஸ்.ஜேக்கப் 2009:95). எவ்வாறாயினும் அவர் இடையன்குடி கிராம உருவாக்கத்திற்கு வரைபடம் ஒன்று தயாரித்துச் செயல்படுத்தினார் என அறியமுடிகின்றது. நிலம் வாங்குவதற்கும் நிலத்தைச் சீர் செய்வதற்கும் தனது நண்பர்களிடமிருந்து நன்கொடைகள் பெற்றார். இவ்வேலைகளை அக்கிராமத்து மக்களுக்குச் சம்பளம் கொடுத்துச் செய்வித்தார். அவர்கள் பெற்ற சம்பளத்தைச் சேமிக்கச் செய்து தங்களுக்கு வீடுகள் அமைக்கச் செய்தார். மாதிரிக்காக சில வீடுகளைக் கட்டி அதே மாதிரி வீடுகளைக் கட்டுவித்தார்.
 
1890 இல் கடுமையான பஞ்சம் நிலவியது. அப்போது இடையன்குடியில் 61 வீடுகள் தீக்கிரையாயின. மனத்துயருற்ற கால்டுவெல் உடனடியாக நிவாரண உதவிகள் செய்தார் ((D.S.GeorgeMuller1996:11). இச்செய்தி இடையன்குடியில் கட்டப்பட்ட வீடுகள் பனையோலையால் வேயப்பெற்றவையாக இருக்கலாம் என்பதை உணர்த்துகின்றது.   
 
கால்டுவெல் பணியாற்றிய காலம் எஸ்.பி.ஜி. மற்றும் சி.எம்.எஸ். ஆகிய நற்செய்தி நிறுவனங்களுக் கிடையில் இருந்த வேற்றுமைகள் ஒரளவிற்குத் தணிந் திருந்த காலமாகும். இரு நற்செய்தி நிறுவனங்களும் பரஸ்பரம் நல்லிணக்கத்துடன் செயல்பட்ட காலம். இந்தியாவில் காலனிய ஆட்சி நிலைபெற்று நின்றது. சென்னை மாகாணமும் உருவாக்கப்பட்டிருந்தது. சீகன் பால்கு தரங்கம்பாடியில் உருவாக்கிய அனைத்துப் பிரிவினருக்கும் பொதுவான கல்வி நிலையங்கள் என்னும் கருத்தாக்கம் சென்னை மாகாணம் முழுவதும் பரவியிருந்தது. காலனிய அரசும் பொதுக் கல்விக்காக நிதி ஒதுக்கீடு செய்தது.
 
“இந்தியாவில் இலக்கிய மறு மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் இந்தியக்குடிகளிடையே கல்வியறிவை ஊக்குவிக்கவும் இந்தியாவிலுள்ள பிரிட்டிஷ் பகுதிகளில் வாழும் மக்களிடையே விஞ்ஞான அறிவைப் புகுத்தவும் அரசு வருமானத்தில் ஆண்டு தோறும் ஒரு இலட்சம் ரூபாய்க்குக் குறையாமல் 1813 சாசன சட்டத்தின் 43ஆவது பிரிவு தலைமை ஆளுநருக்கு அதிகாரம் அளித்தது” (து.சதாசிவம் மேற்கோள் திராவிடப்பித்தன் 2009:36). இந்தச் சூழல் கால்டு வெல்லுக்கு இடையன்குடியில் கல்விக்கூடம் அமைப் பதற்கு வசதியாக அமைந்தது. அவர் 9 பள்ளிக்கூடங்கள் நிறுவியதாகக் குறிப்புகள் உள்ளன ((D.S.George Muller 1996:3)பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு நண்பகல் உணவு வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்தார். பெண்கல்விக்கு இடையன்குடியில் கடும் எதிர்ப்பு இருந்தது. ஆனால் கால்டுவெல் ஊர்ப்பெரியவர்களை வாரம் ஒரு முறை சந்தித்துப் பெண்கல்வியின் இன்றியமை யாமையை எடுத்துரைத்து அவர்களைத் தெளிவடையச் செய்தார். அவரது மனைவி எலிசாவின் உதவியுடன் பெண்களுக்குத் தையல் பயிற்சி மற்றும் கல்வி கிடைக்க வாய்ப்பளித்தார். இடையன்குடியில் 1844இல் பெண்களுக்காக உறைவிடப் பள்ளி ஒன்றைக் கால்டு வெல்லின் மனைவி எலிசா தொடங்கினார். பொது மக்களுக்கு ஆரோக்கியமான வாழ்வு ஆகியவை கிடைக்க வழிவகை செய்தார். சென்னை மாகாண கவர்னர் நேப்பியரிடம்  பேசி 1870 இல் இடையன் குடியில் மருத்துவமனை ஒன்று தொடங்க உரிய ஏற்பாடுகள் செய்தார்.  
 
இடையன்குடி நாடார்கள் மூடநம்பிக்கைகள் உடையவர்கள் என்றும் நாகரிகமற்றவர்கள் என்றும் கால்டுவெல் உணர்ந்தார். எனவே மூடநம்பிக்கைகளை அகற்றவும் பண்பட்ட வாழ்வியல் முறையைக் கற்றுக் கொடுக்கவும் தொடர்ந்து போதனை செய்துவந்தார். இடையன்குடியைப் புதியதொரு ஒழுங்கமைப்பில் அகலமான தெருக்களோடு வடிவமைத்த கால்டு வெல்லுக்கு அவ்வூரில் பிரமாண்டமான திரித்துவ ஆலயம் ஒன்று எழுப்ப விரும்பினார். இது தொடர்பாக வரைபடம் பெறுவதற்காக இங்கிலாந்திலிருந்த ஆலய நிர்மாண சங்கத்தாருக்கு வேண்டுதல் விடுத்தார். அவர்கள் திரித்துவ ஆலயத்திற்கான வரைபடம் ஒன்றை அனுப்பி வைத்தனர். வரைபடம் பெற்ற மகிழ்ச்சியில் கால்டுவெல் ஆலயம் எழுப்ப உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் நிதிதிரட்டத் தொடங்கினார். ஆலயத்திற்கான அடிக்கல்லை 1847 இல் நாட்டினார். கால்டுவெல் திட்டமிட்டபடி சில ஆண்டுகளுக்குள் ஆலயத்தைக் கட்ட இயலவில்லை. திருநெல்வேலி மாவட்டத்தில் ஏற்பட்ட பஞ்சம், கொள்ளை நோய் போன்றவற்றின் காரணமாகவும் தமிழ் ஆய்வுகளின் காரணமாகவும் போதிய நிதி கிட்டாமையாலும் ஆலயத்தைக் கட்டிமுடிக்க 33 ஆண்டுகள் ஆகின. அவர் திருநெல்வேலியின் உதவி பிஷப்பாகப் பொறுப்பேற்ற பின் 1880 இல் அவர்கட்டிய திரித்துவ ஆலயம் திருநிலைப்படுத்தப்பட்டது. இந்த ஆலயம் கால்டு வெல்லின் பெயரை நினைக்கச் செய்யும் மற்றொரு நினைவுச் சின்னமாகும். ஆலயத்தின் அமைப்பு, கலை நுட்பங்கள் போன்றவை கலைத்திறன் மிக்கவை.
 
கால்டுவெல்லின் 33 ஆண்டுக்கால உழைப்பில் உருவாகிய திரித்துவ ஆலயமும் இடையன்குடி கிராமமும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன. “அக்கோவிலின் ஒவ்வோரங்கமும் கண்களைக் கவரும் அழகு வாய்ந்து விளங்குகின்றது. ஆயினும் சாலச் சிறந்த அக்கோவில் சாளரங்களைக் கண்டோர் அவற்றின் அழகையும் அமைப்பையும் எந்நாளும் மறவார் என்பது திண்ணம். திருப்பணி நடைபெறும் பொழுது கால்டு வெல் ஐயர் களியினால் சாளரங்கள் செய்து அவற்றில் கோலமார் கோடுகள் வரைந்து காட்டினார் என்றும் அவற்றை மாதிரியாகக் கொண்டு தச்சரும் கொல்லரும் சாளர வேலை செய்து முடித்தாரென்றும் அவ்வூர் முதியோர் கூறுகின்றார்கள். இளமையில் கவின்கலைக் கல்லூரியில் பழகி ஒவியக் கலையில் பரிசு பெற்ற கால்டுவெல் ஐயரின் கைவண்ணம் இடையன்குடிக் கோவில் சாளரங்களில் இயங்கக் காணலாம் (ரா.பி. சேதுப்பிள்ளை 2013:735-736). கால்டுவெல்லுக்கு இருந்த ஓவியக் கலை அறிவை ஆலயத்தை வடிவமைப்பதில் நுட்பமாகப் பயன்படுத்தியுள்ளார். இதற்குப் பலர் உதவியுள்ளனர். “அந்த ஆலயத்தின் இசை ஒலிக்கும் மணிகள், கால்டுவெல் அத்தியட்சரின் குடும்பத்தாரின் நன்கொடையாகும். கிராதி அறையின் சித்திரமயமான ஜன்னல் அக்காலத்தில் சென்னை ராஜ்ய கவர்னராக விருந்த நேப்பியர் பிரபுவின் நன்கொடையாகும்” (ஹென்றி பாக்கியநாதன்,பக்.57). இவ்வாறாக உருவாக்கப் பட்ட இடையன்குடி தூய திரித்துவ ஆலயம் கட்டடக் கலை நுட்பங்களிலும் குறிப்பிடத்தக்க ஒன்றாக அமைந்தது.
 
இடையன்குடி ஆலயம் கோதிக் கட்டடக்கலை மரபைச் ((Gothic Architecture)) சார்ந்து கட்டப்பட்டது. ஜெர்மனியில் கி.பி 11ஆம் நூற்றாண்டில் தோன்றிய இக்கலைமரபு 13ஆம் நூற்றாண்டில் நன்கு வளர்ச்சி பெற்றிருந்தது. கதீட்ரல் ஆலயங்கள், அரண்மனைகள், ஆடம்பர பங்களாக்கள் போன்றவை இக்கலை மரபில் கட்டப்பட்டன. இருப்பினும் கோதிக் கலைமரபு கதீட்ரல் தேவாலயங்களை அடிப்படையாகக் கொண்டே வளர்ந்தன. பிரான்ஸ் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் பரவிய இக்கலை மரபு 13ஆம் நூற்றாண்டிற்குப்பின் புதிய  கோதிக் கலைமரபால் உள்வாங்கப்பட்டது. கோதிக் கலை மரபில் கூர்மையான ஆர்ச், மெல்லிய உயரமான தூண்கள், வெளிப்புறமாகப் புடைத்த கோடுகள், சித்திர வேலைப்பாடுகளுடன் அமைந்த ஜன்னல்கள் ஆகியவை அடிப்படையான பண்புகள் ஆகும். இப்பண்புகளை இடையன்குடி திருத்துவ ஆலயத்தில் காணலாம். கூர்மையான ஆர்ச், வெளிப்புறமாகப் புடைத்த கோடுகளைக் கொண்ட உயரமான தூண்கள், அத்தூண்களில் நாற்புறமாக அமைந்த ஆர்ச்சுகள் கூரையைத் தாங்குவதாக இடையன்குடி ஆலயம் அமைந்துள்ளது. சன்னல்களும் கதவுகளும் கூர்மையான ஆர்ச் வடிவம் பெற்றவை.
 
கால்டுவெல் இடையன்குடியில் செய்த புரட்சி ஆலயத்தின் நுழைவாயிலை நடுவில் அமைக்காமல் ஓரத்தில் அமைத்ததுதான். பொதுவாக கதீட்ரல் ஆலயங்களில் இவ்வாறு அமைவதில்லை. நுழைவாயில் நடுவில் அமைவது தான் மரபு. இம்மரபைக் கால்டுவெல் பின்பற்றவில்லை. ஆலயம் முச்சந்தியை நோக்கி அமைந்துள்ளது. இம்முச்சந்தியில் நாட்டார் தெய்வ வழிபாடுகளின் போது மேளதாளங்களுடன் சாமியாடு வதுண்டு. ஆலயத்தின் தலைவாசல் முச்சந்தியை நோக்கியதாக அமைந்தால் சாமியாட்டம் ஆல்டருக்கு நேராக அமையும் எனக் கருதிய கால்டுவெல் அதனை ஓரத்திற்கு மாற்றியதாகச் சொல்லப்படுகின்றது. ஆலயத்தின் தரை மற்றும் சுவர் கருங்கற்களால் அமைக்கப்பெற்றுள்ளது. வெளிப்புறக் கட்டட அமைப்பு பிரஞ்சுக் கட்டடக்கலை சார்ந்தது. குறிப்பாக வெளிப் புறச் சுவரின் தூண்கள் அமையுமிடங்களிலும் மூலை களிலும் பளுதாங்கிச் சாய்வுச் சுவர்கள் அமைக்கப் பட்டுள்ளன. இது பிரஞ்சு மரபு ஆகும்.
 
ஆலயத்தின் ஆல்டரின் மேற்கூரை ஆல்டரைச் சுற்றியுள்ள சன்னல்கள் அனைத்தும் கோதிக் கலை மரபைப் பின்பற்றிய கதீட்ரல் ஆலய அமைப்பாகும். ஆனால் சித்திரங்கள் கால்டுவெல்லின் கைவண்ணம் எனச் சொல்லப்படுகின்றது. ஆல்டரைச் சுற்றியுள்ள சாளரங்களின் கண்ணாடிகளில் வரையப்பட்டுள்ள வண்ண ஓவியங்கள் ரோமானியம் மற்றும் அரேபியக் கலை மரபுகள் கலந்த கலவையாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. கோயிலின் உட்புறத்தில் கூர்மை யான 5 ஆர்ச்சுகள் உள்ளன. இந்த ஆர்ச்சுகளின் மீது மரத்தால் கூரை வேயப்பட்டுள்ளது. கூரை செங்குத்துச் சாய்வாக அமைந்துள்ளது. பனிப்பிரதேசங்களில் அமையும் கூரை வடிவம் இதுவாகும். கோதிக் கலைமரபைப் பின்பற்றி இடையன்குடி ஆலயம் அமைக்கப்பெற்றிருந்தாலும் கோதிக் மரபின் வளமை இடையன்குடியில் காணப்படவில்லை. இதற்குப் போதுமான நிதி கிடைத்திருக்காது என்பதே காரண மாகலாம்.
 
சென்னை மாகாண கவர்னர் நேப்பியர் இடையன் குடிக்குக் கால்டுவெல்லின் பணிகளைப் பார்வையிட வந்த போது அவருக்கு 1000 பனைமரங்கள் பயிரிடத் தேவையான நன்கொடைகள் வழங்கினார். இங்கிலாந்தி லிருந்த போதகர் «ஐ.எம். வென்டன் என்பவர் வழங்கிய 100 பவுண்டு நன்கொடையைக் கொண்டு அரசு நன் கொடையாக வழங்கிய மலைச்சரிவில் கால்டுவெல் எஸ்டேட் ஒன்றை உருவாக்கினார் (D.S.George Muller1996:9). கால்டுவெல்லுக்குச் சுற்றுச்சூழல் குறித்த உணர்வு இருந்தது என்பதையே இக்குறிப்புகள் உணர்த்துகின்றன. இடையன்குடி ஊரில், ஏராளமான மரங்களை நட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. திருநெல்வேலி மாவட்டத்தின் வறட்சி குறிப்பாக தேரிக்காட்டின் வெப்பம், அவ்வவ்போது ஏற்பட்ட பஞ்சம் ஆகியவற்றை நேரடியாக உணர்ந்த கால்டுவெல் மழைவளம் பெற மரம் வளர்க்க வேண்டும் எனப் போதித்தார். அதைத் தானும் செய்து காட்டினார். வாழிடம் என்பது வெறும் நிலம்  மட்டுமல்ல என்பதில் கால்டுவெல் உறுதியாக இருந்தார்.     
 
ஒரு கிராமத்தை உருவாக்குவது என்பது எளிதான ஒன்று அல்ல. நிலத்தைப் பிரித்து, தெருக்கள், வீட்டு மனைகள், கோயிலுக்கான இடம் எனப் பருப்பொருளாகக் காண்பது எளிது. அதுமட்டுமே ஒரு கிராமமாகிவிடாது. அங்கு மக்கள் குடியமர வேண்டும். வீடுகள் அமைய வேண்டும். அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட வேண்டும். ஆலயம், பள்ளிகள், மருத்துவமனை,  கிணறுகள்,  வேலைவாய்ப்புத் திட்டங்கள் போன்றவை அனைத்தும் ஒருங்கே அமைந்தால்தான் அது வாழிடக் கிராமம் ஆகும். இதனை இடையன் குடியில் கால்டுவெல் வெற்றிகரமாகச் செய்து காட்டியுள்ளார். இடையன்குடி ஒரு மாதிரி கிராமமாக அமைந்துள்ளது. அண்மையில் இந்திய அரசின் சிறந்த திட்டமிடப்பட்ட கிராமம் என்னும் விருதை இக் கிராமம் பெற்றுள்ளது என்பது கால்டுவெல்லின் கிராம உருவாக்கத்திற்குக் கிடைத்த அங்கீகாரம் என்பதில் ஐயமில்லை.

தஞ்சை மாவட்ட களநாயகர்கள் வழியாக சமூக வரலாறு

சமூக சமத்துவத்திற்கான போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பிறப்பால் உயர்வு, தாழ்வு கற்பிக்கும் முறை மிகவும் கொடியது இந்து மதமும், மனுதர்மமும் கூடவே சேர்ந்து இந்தியாவில் சாதி முறையை இறுகப்படுத்தின. இழப்பதற்கு ஏதுமில்லாதவர்களிடம் கூட மூட நம்பிக்கைகளும், சாதிய இழிவுகளும் ஒட்டிக் கிடந்தன.
இக்கொடுமைகளுக்கு எதிராகத் தீர்க்கதரிசிகளாக, ஞானிகளாக நின்று அறிவாயுதம் ஏந்திக் கருத்தியல் போர் புரிந்தனர் பலர். நேரடியாக மக்களிடம் நின்று மக்களைத்திரட்டித் தலைமை தாங்கி சாதியம் மற்றும் வர்க்கச் சுரண்டலுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர் பலர். இவர்களை எல்லாம் பதிவு செய்வது அவசியமானது.
tanjore temple
வரலாறு என்பது மன்னர்களின், போர்களின், வரலாறு மட்டும் அல்ல. மக்களின் வரலாறு கீழிருந்து மேலெழுப்பும் வரலாற்று வரைவுகள் இன்று எழுதப்படுகின்றன. “உழைக்கும் மக்கள் அறிவுத்தாகம் கொண்டு இருக்கிறார்கள்.ஏனெனில் அவர்கள் வெற்றிபெற அது தேவைப்படுகிறது. உழைக்கும் மக்களில் பத்தில் ஒன்பது பேர் அறிவு தான் அவர்களுடைய விடுதலைப் போராட்டத்தில் ஆயுதம் என்பதையும் அவர்களுடைய தோல்விகள் எல்லாம் அவர்களுடைய கல்விக் குறைவால் நேர்ந்தவை என்பதையும் இப்பொழுது உண்மையிலேயே கல்வி ஒவ்வொருவருக்கும் எளிதில் கிடைக்கும்படி செய்வதும் தம் கடமை என்பதையும் உணர்ந்து விட்டார்கள்” என்பார் லெனின்.
இந்த அறிவு குறித்து, கல்வி குறித்து, விழிப்புணர்வின் ஒரு பகுதியாகத்தான் களத்திலே நின்று மக்களுக்காகப் போராடிய நாயகர்களின் வரலாறு களைப் பதிவு செய்வதைப் பார்க்க வேண்டியிருக்கிறது.
கீழத்தஞ்சையின் நிலவுடைமைக் கொடுமைகள் மனித குல நாகரிக வரலாற்றின் மிக மோசமான பக்கங்கள் இன்றைய இளையதலைமுறை நம்ப மறுக்கும் இவை யாவும் இச்சமூகத்தின் மீது நடத்தப் பட்ட வன்கொடுமைகள் ஆகும். பொருளாதார நிலையில் நிலமற்ற நிலம் சார் உழைப்பாளிகளான இம் மக்கள் சாதி அடுக்கு நிலையிலும் ஒதுக்கப் பட்டார்கள். சாதி, நிலம் இரண்டின் பாற்பட்டும் ஒடுக்கப்பட்ட இவர்களுக்காகப் பொதுவுடைமை அமைப்புகள், இயக்கங்கள் கண்டனர். இவ்வியக்கங் களின் முன் நின்ற களப்பேராளிகளின் பங்கும், பணியும் குறிப்பிடத்தக்கவை.
ஆங்கிலேயே ஏகாதிபத்திய அடக்குமுறை இந்தியர்களை நசுக்கியது. இந்தியப் பொருளா தாரத்தைச் சுரண்டியது. கிட்டத்தட்ட இந்தி யாவை இங்கிலாந்தின் சந்தையாக மாற்றியது. அந்த அளவிற்குப் பொருளாதார அடக்குமுறைகள் இருந்தன. ஆங்கிலேயர்களை விரட்ட இந்தியத் தலைவர்கள் பல்வேறு வழிகளைக் கையாண்டு இறுதியில் வெற்றிபெற்றனர். சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியக் காவல்துறை தஞ்சை மாவட்டத்தில் இருந்த பல்வேறு இளம் போராளிகளை அரசாங்கத் துப்பாக்கிக் குண்டுகளால் துளைத்து எடுத்தது. ஏன்? யாருக்காக இளம் போராளிகளைக் கொன்றார்கள்? அப்படி என்னதான் அந்தப் போராளிகள் செய்தார்கள்?
மேற்கண்ட வினாக்களுக்கு விடை காண முற்பட்டால் இந்தக் கொள்ளையர்களைக் காட்டிலும் அந்த வெள்ளையர்களே எவ்வளவோ பரவா யில்லை என்று தோன்றும்.
இந்திய விடுதலைப்போராட்ட தியாகிகளை விட சமூக விடுதலைப் போராட்ட வீரர்களைத் தான் உயர்ந்தவர்களாக இன்று தஞ்சை மண் கொண்டாடி வருகிறது. காரணம் தஞ்சை மாவட்டத்தில் இந்து நிலப்பிரபுத்துவ கோட்டை களை இடித்து, சமூக விடுதலைக்கு வித்திட்ட மாபெரும் தியாகிகள் இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து வருகிறார்கள்.
தஞ்சை மாவட்ட களநாயகர்கள்:
ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கும் மாற்றத்திற்கும் குறிப்பிட்ட சமூக அரசியல் பொருளாதார இயக்கங்களின் பங்களிப்புகள் மிக முக்கியமானவை. அதே வேளை, தனித்துவம் மிக்க தனி மனித ஆளுமை களின் செயலாக்கமும் தனித்து நோக்கவேண்டுவன.
சமூக விளைச்சலில் முன்னத்தி ஏர்களாய் தொழிற்பட்ட சமூகம் சார்ந்து இயங்கிய மக்கள் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள் பல வெளி வந்துள்ளன. பொதுவான மனிதப் பண்பியல் வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்கக் கூடியதும், சமூக முன் மாதிரியாகத்திகழத் தக்கதுமாக வாழ்க்கை வரலாற்று நூல்கள் விளங்குகின்றன.
நாட்டின் விடுதலைக்கு முன்னரும், பின்னரு மான கால கட்ட அரசியல் சமூகப் பண்பாட்டு விழுமியங்களைக் கண்டறியும் நோக்காகவும், நாட்டின் விடுதலைக்கான போராட்டக்களத்தில் தொடங்கிப் பொருளாதாரச் சமத்துவம், பண் பாட்டு மீட்டுருவாக்கம் ஆகிய தளங்களில் விரியும் தன்மை கொண்ட ஆய்வுப் பொருண்மைகளைக் கொண்ட பல நூல்கள் வெளிவந்துள்ளன.
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக மட்டுமின்றி சமூக நிலையிலும், பண்பாட்டு நிலையிலும், முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகத் தஞ்சை வட்டாரம் விளங்குகிறது. இன்றைய தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களை உள்ளடக்கிய ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் சமூக மாற்றத்திற்காகக் களத்தில் நின்ற கீழ்க்கண்ட நாயர்களின் வரலாறு, வாழும் வரலாறாய் வார்த் தெடுத்துக் கீழ்கண்ட நூல்கள் மூலம் வரலாற்றை அறிவிக்கின்றது.
இன்றைய தஞ்சாவூர், திருவாரூர், நாகப் பட்டினம் மாவட்டங்களை உள்ளடக்கிய ஒன்று பட்ட தஞ்சை மாவட்டத்தில் சமூக மாற்றத்திற்காகக் களத்தில் நின்ற கீழ்க்கண்ட நாயகர்களின் வரலாறு வாழும் வரலாறாய் வளர்த்தெடுத்துக் கீழ்க்கண்ட நூல்கள் மூலம் வரலாற்றை அறிவிக்கிறது.
1. பி.சீனிவாசராவ்- தோழனைக்காக்கத் துடித்த தோழன்
2. தியாகி களப்பால் குப்பு
3. மாவீரன் வாட்டக்குடி இரணியன்
4. எனையீன்ற ஆம்பலாப்பட்டு (ஆறுமுகம்)
5. பாதையில் படிந்த அடிகள், தலை நிமிர்ந்த தமிழச்சிகள், மணலூர் மணியம்மை
6. மாவீரன் கணபதி- கயிற்றில் தொங்கிய கணபதி
7. தோழன் வெங்கடேசன்
8. தோழர் பட்டுராசு
9. சாம்பவனோடை சிவராமன்
10. பண்ணை அடிமைத்தனத்திற்கு எதிரான போராட்டத்தில் பி.எஸ். தனுஷ்கோடி
11. ஏ.எம். கோபு
12. மணலி கந்தசாமி-வாழ்வும் போராட்டமும்
13. எஸ்.ஜி. முருகையன் வாழ்வும் பணியும் ஆகியனவாகும்.
போராட்ட வடிவங்கள்:
தனுஷ்கோடியின் தந்தை சாத்தன் விளாத்தூர் கிராமத்தில் சுப்பிரமணிய அய்யர் பண்ணையில் பணி செய்துகொண்டிருந்தபோது நிலப்பிரபு வெங்கட்ராம அய்யர் அடித்ததினால் அடுத்து பாங்கல் கிராமத்திற்குத் தனது வீட்டின் நிலைக் கதவுகளைப் பெயர்த்து எடுத்துக்கொண்டு ஆடு மாடுகளைப் பிடித்துக்கொண்டும் மனைவி, குழந்தைகளுடன் ஓடி அங்குப் பிள்ளை இனப்பண்ணையில் பண்ணையடிமையாகப் பணியில் சேர்ந்து கொண்டார். அய்யர் பண்ணையிலிருந்து வரும் நபர்களைப் பிள்ளை இனத்தவர் காட்டிக்கொடுக்காமல் சேர்த்துக் கொள்வர் என்பது இங்கு முக்கியமான ஒன்றாகும்.
ஆலயநுழைவு:
குருக்களார் மடத்தைச்சேர்ந்த கோவில் கதவுகளைப் போராளி பி. வெங்கடேசன் திறந்து விட்டார். அனைத்து இன மக்களும் கோவிலினுள் சென்று வணங்கினர். ஊரில் உள்ள பசனைக் குழுவில் தாழ்த்தப்பட்ட மக்களையும் அழைத்துச் சென்று திருநீறு கேட்டதும் கோயில் குருக்கள் ஓடிவிட்டனர். பசனையும் நின்று போனது.
தோழர் பட்டுராசு தனது கிராமமான நெம்மேலியில் பள்ளிக்கூடம் ஆரம்பித்து அதில் தன்னுடன் சிங்கப்பூரில் வேலை செய்த தாழ்த்தப்பட்ட ஆசிரியர்களைப் பணியமர்த்தினார். அனைத்து மாணவர்களையும் ஊரில் உள்ள பிள்ளையார் கோவிலுக்கு அழைத்துச்சென்று அதிர்வை ஏற்படுத்தினார்.
வாட்டாக்குடி:
வாட்டாக்குடியில் தாழ்த்தப்பட்ட இனமக்கள் வசிக்கும் பகுதியில் சுற்றி உள்ள இடத்தை ஊர்ப் பண்ணையார் தனது ஆதிக்கத்தில் வைத்திருந்தார். 30 சேரி குடும்பமும் வேறு வாழிடமும் வழியும் இல்லாது இருப்பதைக் கண்ட இரணியன் பண்ணை யாரிடம் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் பேசி அந்தப் புறம்போக்கு இடத்தை மக்கள் பயன்படுத்த வழி செய்தார்.
முள்வேலி:
கழனிவாசல் கிராமத்தில் நிலப்பிரபுக்கள் அங்குள்ள குளத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் நீர் எடுக்கக்கூடாது என மிரட்டுவது பற்றி அறிந்த தனுஷ்கோடி அங்குள்ள விவசாயத் தோழர்களை அழைத்துக் கொண்டு தானே முன்நின்று குளத்தில் இறங்கி நீர் எடுத்துத் திரும்பினார். ஆலத்தூரில் நிலப்பிரபு சாம்பசிவஐயர் ரௌடிகளை அழைத்து வந்து தாழ்த்தப்பட்ட மக்கள் இருந்த தெருவைச் சுற்றி முள்வேலி வைத்தார். தனுஷ்கோடி இக் கொடுமைகளை எதிர்த்துப் போராடி முள் வேலியை நீக்கி விட்டார்.
ஊருக்குள் நுழையத் தடை:
இதனால் மேலும் கோபமடைந்த நிலப் பிரபுக்கள் தாழ்த்தப்பட்டவர்கள் தங்கள் வயலில் நண்டு நத்தை பொறுக்கக்கூடாது எனவும், வரப்பில் நடக்கக்கூடாது எனவும், வலிவலம் தேசிகளுக்கு சொந்தமான நமசிவாயபுரம், காருகுடி, கோயில் பத்து, நெய்விளக்கு, கீழ் வலிவலம், சுந்தர பாண்டிய புரம் மற்றும் அனக்குடி ஆகிய எட்டு பண்ணை களுக்குள்ளும் கம்யூனிஸ்ட் தலைவர்களான கே.ஆர். ஞாபனசம்பந்தம், பி.எஸ். தனுஷ்கோடி, கே.டி. நடராஜன், ஈசனூர் சுப்பையா நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் ஊருக்குள் வரக்கூடாது எனத் தடையுத்தரவு போட்டனர்.
மதுக்கூர் ஜமீன் தனது ஆதிக்கத்தில்உள்ள ஆம்பலாப்பட்டு கிராமத்தில் கரைகாப்பு, ஏரிப் புறம்போக்கு, மேய்ச்சல் தரிசு நிலங்களையும் தனி யாருக்கு விற்றார். இவற்றையெல்லாம் தனி யாருக்கு விற்றால் ஊர் மக்கள் மற்றும் ஆடு, மாடு, மேய்வது, குளிப்பதற்கெல்லாம் எங்கே போவது எனக்கேட்டு ஆறுமுகம் தனது மக்கள் படையுடன் பெரும்போராட்டம் நடத்தினார். தனது மக்கள் படையுடன் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றார்.
கூலி உயர்வு கேட்டதற்காக இராதா நரசிம்ம புரம் இராயர் பண்ணை நிலப்பிரபு இராயர் தாழ்த்தப்பட்ட மக்கள் செல்லும் பாதையை அடைத்தும், தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்தும் கிணற்றில் கள்ளியைப் போட்டும் வைத்தனர். இரணியன் பண்ணையார் இராயர் வீட்டுக்குச் சென்று கார்வாரியை நையப்புடைத்துப் பாதையைத் திறந்துவிட வைத்தார்.
பெண்ணடிமைப்போராட்டம்:
பெண்கள் அடிமைத்தனமாக வாழ்வதையும், கைம்பெண் நோன்பு நோற்பதையும் கடுமையாக எதிர்த்துப் போராடினார். மணியம்மை ஆண்களைப் போல் உடை உடுத்தி புரட்சி செய்தார். தனது உறவுக்காரச்சிறுவர்கள் பொதுஇடத்தில் மண் அள்ளியதைக் கண்டு அடித்த கார்வாரியின் கையை வெட்டினார், பண்ணையே அதிர்ந்தது.
இதுபோன்ற பெண்களுக்கு சைக்கிள் ஓட்டவும், தற்காப்புக் கலைகளையும் தான் கற்றுக்கொண்டு கற்பித்தார். பண்ணையடிமைப் பெண்களை நிலப்பிரபுக்கள் பாலியல் பலாத்காரம் செய்வதை எதிர்த்துப் போராடினார்.
தோழர் பட்டுராசு பெண்ணடிமையை எதிர்த்து தன் மனைவிக்கு மோதிரம் மட்டுமே மாற்றி சுயமரியாதையாகத் திருமணத்தை நடத்தியும், வாழ்ந்து காட்டினார்.
பண்ணையடிமைச்சிறுவர்கள்:
மஞ்சக்கொல்லை பண்ணையார் தனது பண்ணையில் வேலை செய்த சிறுவனை வேலை செய்யச்சொல்லிக் கட்டி வைத்து தாக்கினார். இதைக் கேள்விப்பட்டுச் சிறுவனை அழைத்து வரச் சென்ற தாய் தந்தை உட்பட சிலரைக் கட்டி வைத்து அடித்திருக்கிறார். அடிப்பட்ட சிறுவனுக்குக் காய்ச்சல் கண்டுவிட்டது. அதனால் மறுநாள் மாடு மேய்க்க வர இயலவில்லை எனக் கூறச்சென்ற சிறுவனின் தந்தையை மீண்டும் கட்டி வைத்து அடித்திருக் கிறார். மாடுகள் தானே பண்ணைக்கு முக்கியம், மனிதர்கள் அல்லவே.
இதைக் கேள்விப்பட்ட சிவராமன் தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துக் கொண்டு பண்ணையைத் தாக்கச் சென்றார். பண்ணையார் செய்தியறிந்து ஒளிந்து கொண்டார் போலிஸ் காவலுக்கு நின்றது. மக்கள், வீட்டை முற்றுகையிட்டு போலிஸ்காரர்களுடைய துப் பாக்கியைப் பறித்துக்கொண்டு மக்கள் கோச மிட்டனர். பின்னர் போலிசின் வேண்டுகோளுக் கிணங்க சிவராமன் துப்பாக்கியைத் திருப்பிக் கொடுக்க வைத்தார்.
பாலியல் பலாத்காரம்:
காரைக்கால் சாலையில் நல்லாவூர் மேற்கேயும், கிழக்கேயும் உள்ள இரு ஊர்கள் மகாதேவ ஐயருக்குச் சொந்தமானவை. பண்ணையடிமைகளைச் சாட்டையால் அடிப்பது, சாணிப்பால் கொடுத்துக் கொல்வது அனைத்தும் இங்கு நடக்கும். இங்குத் தாழ்த்தப்பட்ட இளைஞன் ஒருவன் புதிதாகத் திருமணம் செய்தான். மணப்பெண்ணை முதலிரவு அன்றே பாலியல் பாலத்காரம் செய்தான் மகா தேவ ஐயர். இதைக் கேள்விப்பட்ட ஏ.எம். கோபு தனது தோழர்களுடன் மகாதேவ ஐயரைப் பழிதீர்த்து நிலப்பிரபுகளுக்கு எச்சரிக்கை விடும் நிகழ்வாக அமைத்தார்.
சுதந்திரப்போராட்டம்:
1941-இல் உப்பு சத்தியாக்கிரகத்தில் சேர்ந்து கொண்டு பி.சீனிவாசராவ் போராடினார். இரண்டு முறை சிறை சென்றார். 1932-இல் அந்நியத்துணியை எதிர்த்தும் போராடிச் சிறை சென்றார். 1935இல் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் 25ஆம் ஆண்டு பொன் விழாவை இந்தியாவில் கொண்டாடக் கூடாது எனத் துண்டு பிரசுரங்களை அச்சடித்துக் கொடுத் தார். தஞ்சை மாவட்டத்தில் விவசாய சங்கங்கள் ஊர்தோறும் சென்று அமைத்தார்.
மலேசியாவில் தமிழர்களைக்கொலைகாரன், தாழ்ந்தவன் என்ற பொருள்படும்படியாக ஒரங்கிள்ளேவ் என்று அந்நாட்டவர் பேசுவர். கணபதி இதை எதிர்த்துக்கடுமையாகப் போராடினார். மலேசியா தமிழர்களுக்காக அரசிடம் 45 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தி மலேசியா அரசிடம் உரிமைகளும் சலுகைகளும் பெற்றுத்தந்தார்.
1987இல் ராஜாஜி முதல்வராக இருந்தபோது தமிழகத்தில் இந்தித்திணிப்பை எதிர்த்து மலேசியாவில் கணபதி பேரணி நடத்தினார். தேநீர்க் கடை யிலும் கலப்பு மணங்கள் செய்வித்தும் ஜாதிக் கொடுமையை ஒழித்தார். எட்டாம்வகுப்பு மாணவராக இருந்தபோது திருவிடைமருதூர் ஆதின மேல்நிலைப்பள்ளியில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் தொடர்ந்து சுதந்திரம் வேண்டி ஏ.எம். கோவிந்தராசன் போராடிக் கைதாகிச் சிறை சென்றார்.
மடங்களுக்கு எதிரான போராட்டம்:
உத்திராபதி மடத்திற்கு எதிராகவும் பண்ணையடிமைகளுக்காகவும் குப்பு போராடினார். குத்தகை வார விவசாயிகள் மூன்றில் ஒன்று 33 வாரம் கேட்டு போராடினான். தென்பறையில் விவசாயிகளை ஒன்றிணைத்து குப்பு, வெங்கடேசன், இராமானுசன், அமிர்தலிங்கம் உள்ளிட்ட தலைவர்கள் முன்னிற்று சங்கம் அமைத்தனர்.
பண்ணைக்களத்தில் பண்ணைக்கு முழுப் படியும், பண்ணையடிமைகளுக்கு முக்கால்படியும் அளப்பர். இதனை எதிர்த்துக் குப்பு போராடினார், கூலியாட்கள் கடையில் நெல்லைவிற்கும் போது கடைக்காரர் முழுப்படிப்பை முக்கால்படியாகக் குறைத்து அளப்பர். இதனை எதிர்த்துக் குப்பு தனியாகக் கடை வைத்து சரியாக அளந்து எடுத்தார். இதனைக்கண்ட ஆதிக்கத்தார் கடையை எரித்து விட்டனர்.
சாணிப்பால், சவுக்கடிக்கெதிரான போராட்டங்கள்:
குப்புசாமி பண்ணையடிமைகளையும், குத்தகை தாரர்களையும் அழைத்துப் பேசி நிலப்பிரபுக்களின் சாணிப்பால், சவுக்கடிக்கு எதிராகப் போராடினார். இதற்கான பேச்சுவார்த்தைக்கு மாவட்ட காவல் துறை துணை ஆணையர் திரு. மகாதேவன் அவர்கள் அரசு சார்பில் முன்னின்று பேச்சுவார்த்தை நடத்தினார். பண்ணையடிமைகளும், நிலப்பிரபுக் களும் தத்தம் நியாயங்களை எடுத்துக்கூறினர்.
இறுதிப்பேச்சு வார்த்தையில் பெரும் நில உடைமை யாளர் தியாகராசமுதலியார், காடுகொடுத்த நாயக்கர்கள், திருக்களார் மடாதிபதி கிருஷ்ண சாமி போன்றோரும், கே.டி. நடராஜன், களப்பால் குப்பு, சேரங்குளம் அமிர்தலிங்கம், ராமானுஜம் ஆகிய கம்யூனிச தலைவர்களும் கலந்துகொண்டு பேசியதில் சாணிப்பால், சவுக்கடி போன்ற கொடிய தண்டனைகள் விலக்கிக் கொள்வதற்கு ஒப்பந்தம் கையெழுத்தாகியது.
கூலி உயர்வு கேட்டுப் போராட்டங்கள்:
1944-இல் டிசம்பரில் மாவட்ட ஆட்சியர் திரு. இஸ்மாயில்கான் தலைமையில் காவல்துறை கண்காணிப்பாளர் திரு. வரதன் முன்னிலையிலும், கூலி உயர்வுகேட்டுப் போராடியதற்கான ஒப்பந்தக் கூட்டம் நடைபெற்றது. நிலப்பிரபுக்கள் சார்பில் சாம்பசிவ அய்யரும், விவசாய சங்கம் சார்பில் மணலி கந்தசாமி, கலப்பால் குப்புசாமி ஆகியோர் கலந்து கொண்டதன் விளைவாகப் பண்ணையாள் தினக் கூலியானது இரண்டு சின்னப்படிக்குப் பதிலாக மூன்று படி கொடுக்கப்பட வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகள் நிறைவேறின.
கூலி உயர்வுக்காகவும், நிலத்தை விட்டு பண்ணையடிமைகளாகவும் வெளியேற்றக்கூடாது என மணலி கந்தசாமி போன்ற தலைவர்களே பைங்காட்டூரில் போராடினர் 24. 12. 1944இல் பைங்காட்டூர் விவசாயிகளுக்கும், திருக்களார் மடத்திற்கும் இடையில் மாவட்ட ஆட்சித் தலைவர் இஸ்மாயில்கான் தலைமையில் ஒப்பந்தம் ஏற்பட்டது.
1945இல் கோனேரிராஜபுரத்தை மைய மாகக் கொண்டு அதைச்சுற்றிச் சுமார் 32 கிராமங்களிலும் குத்தகை 50ரூ வரக்கோரி களப்பால் குப்பு தலைமையில் போராட்டத்தைத் துவங்கினார். 5 நாள் போராட்டத்திற்குப் பிறகு சமரசம் ஏற்பட்டது.
மணலி கந்தசாமி, அமிர்தலிங்கம், குப்புசாமி பா. வெங்கடேசன் ஆகியோர் மன்னார்குடியில் கூட்டங்கள் நடக்கக்கூடாது என 144 தடை உத்தரவு அரசால் போடப்பட்டது. அவ்வளவு எதிர்ப்புகள், தலைவர்கள் சந்திக்க வேண்டி இருந்தது.
1946இல் குன்னியூரில் பொதுக்கூட்டம் நடந்தது. விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் கஷ்டப் பட்டனர். கண்டு முதலும் குறைவாக இருந்தது. 1946 ஏப்ரலில் தஞ்சை மாவட்ட அமர்வு நீதிப் பகுதியை நடுவராகக் கொண்டு நில உடைமை யாளர்கள், விவசாயிகள் பேச்சுவார்த்தை ஏற் பட்டது. அதன்படி சாகுபடி செய்பவரை நிலத்தை விட்டு வெளியேற்றக்கூடாது என்பது உட்பட பல கோரிக்கைகள் கையெழுத்தாகின.
உத்திராபதி மடத்தில் குத்தகையை ரத்து செய்ய விவசாயிகள் வேண்டினர். மடாதிபதி மறுத்தார் விவசாய சங்கமும் போராட்டத்தில் இறங்கினர் பிறகு கோரிக்கை ஏற்று மடம் இறங்கி வந்தது.
கீழவெண்மணி:
கீழவெண்மணியில் 44 தாழ்த்தப்பட்ட பண்ணையடிமைகளைக் கூலி உயர்வு கேட்டதற்காக உயிரோடு எரித்துக்கொல்லப்பட்டனர். இதையும் விவசாய சங்கத்தோழர்களே எதிர்த்துக் குற்றவாளிகளைக் கைது செய்யப்போராடினர்.
முடிவுரை:
இவ்வாறு தஞ்சை மாவட்டத்தில் மக்கள் விடுதலைக்காகவும், சமத்துவத்திற்காகவும், உரிமைக் காகவும் போராடிய தலைவர்கள் மக்கள் மனதில் வரலாறாய் நின்று வாழ்ந்து வருகின்றனர். இவர்களைப் பற்றிப் பாடல்களாகவும், பழமொழிகளிலும், நாட்டுப்புற வழக்கமாய்ப் பயின்று வரக்காண்பது இன்றும் உண்மையான மக்கள் விடுதலைக்கான தலைவர்கள் என்பது உண்மையாகிறது. இதன் மூலம் தஞ்சை மாவட்டக் களநாயகர்கள் வழியாக சமூக வரலாறு உயர்த்திப்பிடிக்கப்பட்டு வருகிறது.

பழந்தமிழர்களின் தொழில் மேன்மை

“பண்டையத்தமிழ் மக்கள் வணிகத்திலும், தொழில் நுட்பத்திலும் சிறந்து விளங்கினர் என்பதை அண்மைக்காலத் தொல்லியல், கல்வெட்டியல், நாணய இயல் சான்றுகள் உணர்த்துகின்றன. இதனைச் சங்க இலக்கியங்கள் முழுமையாக வெளிப்படுத்தவில்லை” என்கிறார் முனைவர் கா.இராசன் அவர்கள்(தொல்லியல் நோக்கில் சங்ககாலம், பக்: 79). தமிழர்கள் இரோம் நாட்டிற்கும், தாய்லாந்திற்கும் சென்று தங்கி வணிகம் புரிந்ததையோ, அவர்களின் பரவலான கல்வியறிவையோ சங்க இலக்கியம் குறிப்பிட வில்லை என்கிறார் அவர்(பக்: 80) சங்க காலத்தில் “எஃகும், வார்ப்பு இரும்பும் மேலை நாடுகளுக்கு மிகுதியாக ஏற்றுமதி செய்யப்பட்டு அந்நியச் செலவாணி ஈட்டப்பட்டுள்ளது. இரும்புத் தொழிநுட்பத்தில் திறமை மிக்கவர்களாகத் தமிழக மக்கள் திகழ்ந்துள்ளது போல் ஆடை நெய்வதிலும், சங்கு அறுப்பதிலும் நீர்ப்பாசனத்திலும் தமது தொழிநுட்பத்திறனைக் கொண்டிருந்தனரென்பதை எண்ணற்றத் தொல்லியல் சான்றுகள் மெய்ப்பிக்கின்றன” என்கிறார் முனைவர் கா.இராசன் அவர்கள். வார்ப்பு இரும்பு செய்யத் தனி நிபுணத்துவம் வேண்டும். காரணம் 1300 சென்டிகிரேடில் இரும்பை உருக்கி அதே வெப்ப நிலையில் நீண்ட நேரம் வைத்திருக்கவேண்டும். இத்தகைய நிபுணத்துவத்தை தமிழர்கள் பெற்றிருந்தனர் என்கிறார் அவர்(அதே நூல், பக்: 130)
சங்ககாலத் தமிழ் மக்கள் பல்வேறு தொழில்நுட்பங்களில் மேன்மை பெற்றவர்களாக இருந்தனர் எனவும், அதன் மூலம் வளர்ச்சி பெற்று, பன்னாட்டு வணிகத்திலும், ஒட்டுமொத்தப் பொருளாதாரத்திலும் மிக உன்னத நிலையை அடைந்திருந்தனர் எனவும் தொல்லியல் நோக்கில் சங்ககாலம் என்ற தனது நூலின் 52 பக்கங்களில்(பக்: 79 முதல் 130வரை), விரிவாகக்கூறியுள்ளார் முனைவர் கா.இராசன் அவர்கள். அதனைச் சுருக்கமாகக் காண்போம். கி.மு.1000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தின் தென் பகுதி மக்கள் நுண்கற்கருவி பண்பாட்டிலும், வடபகுதி மக்கள் புதிய கற்காலப் பண்பாட்டிலும் வாழ்ந்தனர் எனவும், கி.மு 1000 வாக்கில் இவ்விரு பண்பாடும் இரும்புப் பண்பாட்டோடு இணைந்து, தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய பண்பாட்டுப் புரட்சி ஏற்பட்டதாகவும், அதன் காரணமாகக் கி.மு 1000 வாக்கிலேயே தமிழகம் எல்லாவிதங்களிலும் வளர்ச்சி அடைவதற்கு வித்திடப்பட்டது எனவும் தெரிவிக்கிறார் முனைவர் கா.இராசன் அவர்கள். மேலும் தமிழர்கள் தங்களது கருத்து பரிமாற்றத்திற்கு ஒருவித வரிவடிவத்தை அன்றே பயன்படுத்தினர் என்கிறார் அவர். இந்த மக்கள்தான் தமிழகத்தில் இனக்குழு தோன்றவும், தொழில்நுட்பம் பெருகவும், அதன் மூலம் வெளிநாடுகளுடன் வாணிகத் தொடர்பு கொள்ளவும், தமிழகத்தில் எழுத்தறிவு எழவும், அரசு தோன்றவும், இறுதியாகச் சங்க இலக்கியங்கள் உருவாகவும் வழிவகை செய்தனர் என்கிறார் அவர். தங்களது இறுதிக் காலமான கி.மு.4-5ம் நூற்றாண்டில் சமண, புத்த, வைதீக இந்து மதங்களின் தாக்குதலுக்கு அவர்கள் உள்ளாகினர் என்கிறார் அவர்(பக்: 76).
  மேலைநாட்டுடனான வணிகம், முசிறி-அலெக்சாண்ட்ரியா வணிக ஒப்பந்தம், இலங்கை நாட்டுடனான வணிகம், தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான வணிகம் ஆகிய நான்கு தலைப்புகளில் திரு.இராசன் அவர்கள் தனது நூலில் பக்: 79 முதல் 108 வரை தமிழகத் தொழில்கள், அவைகளின் தொழிநுட்ப மேன்மை, உலகளாவிய வணிகம் முதலியன குறித்து விரிவான ஆதாரங்களோடு எழுதியுள்ளார். தமிழகத்தின் பண்டையத் துறைமுகங்கள், வணிக மையங்கள் முதலியன பல நூற்றாண்டுக் காலம் நிலைத்து நின்று தமது பணியைச் செய்து வந்துள்ளன என்பதை இவ்விடங்களில் மேற்கொண்ட அகழாய்வுகள் புலப்படுத்துகின்றன எனவும், இவை பன்னாட்டளவில் ஒருங்கிணைந்த மையங்களாக இயங்கி உள்ளமையும் தெரிகிறது எனவும், துறைமுகங்கள், தலைநகரங்கள், வணிக மையங்கள் ஆகியவற்றின் நிலவியல் அமைவிடத்தை நோக்கும்பொழுது அக்காலகட்டத்தில் மிகச் சிறந்த வணிகப் பெருவழிகள் உருவாகிவிட்டது புலனாகிறது எனவும் தெரிவிக்கிறார் இராசன் அவர்கள்(பக்: 80, 81).
 இலட்சத் தீவு, கள்ளக் கிணறு, திருப்பூர் ஆகியவற்றில் கிடைத்த இரோமக் குடியரசு நாணயங்கள் மூலம் அகத்தஸ் ஆட்சிக்கு முன்பே இரோமுடன் தமிழகம் வாணிகம் புரிந்துள்ளது. இந்தியாவில் கிடைக்கும் இரோம நாணயங்களில் 90% க்குமேல் பண்டைய சேரர் கொங்குப் பகுதிகளில்தான் கிடைத்துள்ளது. பிளினி சேர வணிகர்களைத் தனியாகக் குறிப்பிடுவதால், அவர் சொல்லும் 100 மில்லியன் செசட்டரஸ் (sesterces) தொகையில் பெரும்பகுதி சேர வணிகர்கள் தான் ஈட்டினர் (பக்.85 – 90). யவனர்கள் இலங்கைக்குச் செல்லாமலேயே அந்நாட்டுப் பொருட்களைப் பெற்றனர் எனப் பெரிப்ளஸ் சொல்வதன் மூலம் அவை தமிழகம் வந்து மேலை நாடுகளுக்கு ஏற்றுமதியாகியுள்ளன. தமிழர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்பே நேரடியாக இரோம் நாடு சென்று வணிகத்தில் ஈடுபட்டனர் (பக்.85). தென் கிழக்கு ஆசிய நாடுகளோடு வணிகம் புரிந்த தமிழர்கள் 10 டிகிரி நீரோட்டம் (10 degree channel) என்ற கடல் நீரோட்டத்தைப் பயன்படுத்தி நேராக மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா, பாலி, வியட்னாம் போன்ற நாடுகளுக்கு வணிகப் பயணம் மேற்கொண்டனர். கீழை நாடுகளுடனான வணிக உறவில் தமிழர்கள் கை ஓங்கியிருந்தது. இவை இராசன் அவர்கள் தெரிவிக்கும் தரவுகளாகும்.
 ஓதம்(TIDE) என்று அழைக்கப்படும் கடல் நீர் மட்டத்தில் ஏற்படும் உயர்வு தாழ்வுகள் முக்கியமானவைகளாகும். ஓதம் ஏற்படும்பொழுது கடல் நீர் ஒரு மைல் அளவிற்கு முன்னோக்கியும், பின்னோக்கியும் நகரும். இதை முன் ஓதம்(HIGH TIDE), பின் ஓதம்(LOW TIDE) என அழைப்பர். இதன் தன்மையை நன்கு அறிந்து, தமிழர்கள் பயன்படுத்திக் கொண்டனர் என நற்றிணையும் (117,335), அகநானூறும்(123, 220, 300) குறிப்பிடுகின்றன. கப்பலைத் துறைமுகத்திற்கு உள்ளே கொண்டுவரவும், வெளியே கொண்டு வரவும் இதன் சக்தியைத் தமிழர்கள் பயன்படுத்தினர் என்கிறார் இராசன் அவர்கள். தமிழகத்தில் அன்று கல் நங்கூரங்கள் பயன்படுத்தப்பட்டன எனவும் நங்கூரத்தின் பயன்பாட்டை மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது(375-379) எனவும் இராசன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
 “முசிறி – அலெக்சாண்டிரியா ஒப்பந்தம்” என்பது முசிறியில் வாழ்ந்த தமிழ் வணிகன் ஒருவனுக்கும், எகிப்து நாட்டின் நைல் நதிக்கரையில் இருந்த அலெக்சாண்ட்ரியா நகரில் வாழ்ந்த கிரேக்க வணிகன் ஒருவனுக்கும் கி.பி.150 வாக்கில் ஏற்படுத்தப்பட்ட வணிக ஒப்பந்தமாகும்(எகிப்து நாடு அன்று இரோமப் பேரரசின் கீழ் இருந்தது). அந்த வணிக ஒப்பந்தப்படி, ஒரு தமிழ் வணிகன் ஒரு கப்பலில் ஒரு தடவை கொண்டு சென்ற வணிகப் பொருட்களின் பண மதிப்பீடு என்பது 2,94,84,000 கிராம் வெள்ளியின் எடைக்கு ஈடானது எனவும் வெள்ளி ஒரு கிராம் ரூ.10 எனக் கணக்கிட்டால் அதன் மதிப்பு சுமார் ரூ.30 கோடி ஆகிறது எனவும் கூறுகிறார் முனைவர் இராசன் அவர்கள்(பக்.89,90). தினமணி நாளிதழ்(20/3/2014) படி வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.48 ஆகும். ஒரு கிராம் வெள்ளியின் விலை சராசரி ரூ.40 எனக் கணக்கிட்டால் கூட அந்த வணிகப் பொருட்களின் இன்றைய மதிப்பு ரூ.120 கோடி ஆகிறது. அதாவது இன்றைய மதிப்புப்படி குறைந்தது சுமார் ரூ.100 கோடிக்கு மேல் ஒரு சங்ககாலத் தமிழ் வணிகன் ஒரு கப்பலில் ஒரு தடவைவணிகம் புரிந்துள்ளான். இச்செய்தி மிகமிக வியப்புக்குரியதாகும். அதனால் தான் நிறைய இரோம் நாணயங்கள் தமிழகத்தில் கிடைத்துள்ளன எனலாம்.
தமிழகத்தில் அன்று மரக்கலங்களின் உரிமையாளர்களும், மரக்கலங்களின் தலைவர்களும், பெரும் வணிகர்களும் இருந்துள்ளனர். சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் தந்தை ஒரு மாநாயகன் ஆவான். அதாவது பல மரக்கலங்களுக்குச் சொந்தமானவன் என்பது அதன் பொருளாகும். அதுபோன்றே கோவலனின் தந்தை மாசாத்துவான் என அழைக்கப்படுகிறான். சாத்து என்பது வணிகக் குழுவைக் குறித்தச் சொல் ஆகும். மாசாத்துவான் என்பது பெருவணிகன் எனப் பொருள்படும். இலங்கையில் சாத்துவன் அல்லது மகாசாத்துவன் எனப் பொறிக்கப்பட்ட நாணயங்கள் கிடைத்துள்ளன. ஆகவே இந்தப் பெரும் வணிகர்கள் சொந்தமாகக் காசுகளை வெளியிடும் அளவு சுய அதிகாரம் பெற்றவர்களாக இருந்துள்ளனர். தமிழகத்தில் மன்னர்களைத் தவிர்த்து மற்றவர்கள் காசுகளை வெளியிடவில்லை. தமிழ் வணிகர்கள் மிகப்பெரும் செல்வந்தர்களாக இருந்துள்ளனர் என்பதை சிலப்பதிகாரம் தெரிவிக்கிறது. பண்டையத் தமிழகத்தின் பொருளுற்பத்தியும், தொழில்நுட்ப மேன்மையும், வணிகத்திறனும், உலகளாவிய வணிகமும் அவர்களைப் பெரும் செல்வந்தர்களாக ஆக்கியுள்ளது எனலாம்.
 கி.மு.5 ஆம் நூற்றாண்டு வாக்கிலேயே நன்கு நெறிப் படுத்தப்பட்ட வணிகக் குழுக் கட்டமைப்புகள் இந்தியாவில் தோன்றிவிட்டன(அன்று இந்தியா என்பது பெரும்பாலும் பண்டைய தமிழகத்தையே குறிக்கும்). கீழை நாட்டு மெலுக்காவில்(Moluccas) விளையும் கிராம்பு (clove), எஜினியா அரோமேடிகா (Eugenia Aromatica) என்பதன் மொட்டுக்கள் முதலியன புகாருக்குக் கொண்டுவரப்பட்டு, பின் முசிறிக்கு எடுத்துச் செல்லப்பட்டு மேலை நாடுகளுக்கு ஏற்றுமதியாகின. ஆதிச்சநல்லூர், கொடுமணல் பகுதிகளில் கிடைக்கும் வெண்கலப் பொருட்கள் தாய்லாந்திலிருந்து இறக்குமதியாகன. தாய்லாந்தில் ‘பெரும்பதன்கல்’ என்ற தமிழ் எழுத்துப் பொறிப்புடன் கூடிய உரைகல் ஒன்றும், சங்ககாலச் சோழர் செப்புக்காசு ஒன்றும் கிடைத்துள்ளது. பண்டைய தமிழகத்தின் தயாரிப்பான அரிய கல்மணிகளும், கண்ணாடி மணிகளும் தாய்லாந்திலும், வியட்நாமிலும், தென் சீனத்திலும் கிடைக்கின்றன. தொழில் நுட்பத்தின் மேன்மை காரணமாகப் பொட்டாசியம் சிலிக்கா கலந்த மணிகள் தயாரிப்பு, தமிழகத் தொழில்நுட்ப வல்லுனர்கள் கையில் நீண்ட காலம் தங்கியிருந்தது என மணி ஆய்வில் புகழ் பெற்ற பிரான்சிஸ் (Francis) என்பவர் கூறுகிறார்.
  மேலை நாடுகளுடனும், கீழை நாடுகளுடனும், இலங்கையுடனும் தமிழகம் மேற்கொண்டிருந்த உறவுகள், பண்பாட்டுப்பரவல் என்பதற்கும் மேலானது என்கிறார் இராசன் அவர்கள். ‘கப்பல் கட்டும் திறன், கடல் நீரோட்டம் பற்றிய அறிவு, பருவக் காற்று என்னும் இயற்கைச் சக்தியை தன் வசப்படுத்திக் கொள்ளுதல், இறக்குமதி நாட்டின் எதிர்பார்ப்புக்குத் தக்கவாறு பொருட்களின் தரத்தினை உயர்த்திக் கொள்ளப் பேணும் தொழில் நுட்பத் திறன், தனித்து இயங்காமல் வணிகக் குழுவாக இயங்குகின்ற தன்மை, பிற நாடுகளின் மொழி பண்பாடு ஆகியவற்றை அறிந்து அவற்றுடன் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டிய சமூக இணக்கம் போன்றவையே தமிழகம் சுமார் 500 ஆண்டுகளுக்கும் மேலாகப் பன்னாட்டுடன் தொடர்ந்து வணிக உறவுகளை நிலைநிறுத்திக் கொள்ள முடிந்தமைக்குக் காரணங்களாகும். இதற்குப் பெரும் துணையாக இருந்த ஒரு மிக முக்கியக் காரணி ‘தொழில் நுட்பத்தின் மேன்மை’ எனலாம்’(பக்.107,108) என்கிறார் இராசன் அவர்கள்.
  இராசன் அவர்கள், எஃகு செய்தல், மணிகள் தயாரித்தல, மரக்கலங்கள் கட்டுதல் ஆகியவற்றில் தமிழர்கள் மிக உயர்ந்த தொழில்நுட்ப மேன்மையைப் பெற்று, சிறப்புற்று விளங்கினர் என்பதை அகழாய்வுச் சான்றுகள் தெரிவிக்கின்றன என்கிறார்(பக்.108). கொடுமணல் பகுதியில் பச்சைக்கல், நீலக்கல், பளிங்கு, சூதுபவளம், சேசுபர், அகேட், குருந்தம், வைடூரியம், மாவுக்கல் முதலிய அரிய கற்களைக் கொண்டு மணிகள் செய்யும் தொழில் சிறப்பாக நடந்து வந்துள்ளது எனவும், மேற்கூறியவற்றில் வைடூரியம், சூதுபவளம், அகேட் போன்றவை மூலப் பொருட்களாக இந்தியாவின் பிற பகுதியிலிருந்து தருவிக்கப்பட்டு இங்கு ஆபரணங்களாக உருவாக்கப் பட்டுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார் அவர்(பக்.122). மயிரிழை அளவு துளைகள் கொண்ட மணிகள் கொடுமணலில் கிடைப்பதால், இதில் தமிழர்கள் தொழில் நிபுணத்துவம் உடையவர்களாக இருந்துள்ளனர் எனவும், இத்தொழில் சங்க காலத்தில் சிறப்புற்று விளங்கியதோடு, அதிக அளவு அந்நியச் செலவாணியை தமிழகத்திற்கு ஈட்டித் தந்துள்ளது எனவும்(பக்.124) கூறுகிறார் முனைவர் இராசன் அவர்கள்.
 பிளினி தமது இயற்கை வரலாறு என்ற நூலில் இரும்புப் பொருட்கள் இரோம் நாட்டிற்குச் சேர நாட்டிலிருந்து வந்தன எனச் சொல்லியுள்ளார் எனவும், இரும்பு, எஃகு, கொல்லன், கருமைக்கொல்லன், உலை, உலைக்கூடம், துருத்தி, விசைவாங்கி, மிதியுலை, குடம், குறடு, குறுக்கு போன்ற இரும்புத் தொழில்நுட்பம் சார்ந்த சொற்கள் சங்க இலக்கியத்தில் வந்திருப்பது, இத்தொழில் சிறப்புற்று இருந்ததைத் தெளிவு படுத்துகின்றது என்கிறார் இராசன் அவர்கள்(பக்.128). இரும்பை உருக்க 1100 டிகிரி சென்டிகிரேடு வெப்பமும், எஃகாக மாற்ற 1300 டிகிரி சென்டிகிரேடு வெப்பமும் தேவை. இதனைக் கொடுமணலில் கிடைத்த உலைக்கலங்கள் அடைந்தன என்பதை இலண்டன் பல்கலைக்கழக உலோகவியல் பகுப்பாய்வும், இந்தியத் தொழில்நுட்பக் கழக பகுப்பாய்வும் உறுதி செய்துள்ளது எனவும், வார்ப்பு இரும்பு செய்ய தனி நிபுணத்துவம் தேவை எனவும், அதனைச் செய்ய 1300 டிகிரி சென்டிகிரேடு வெப்பத்தில் இரும்பை உருக்கி நீண்ட நேரம் வைத்திருக்க வேண்டும் எனவும், தகடூர் பகுதியில் குண்டூர் என்ற இடத்தில் கிடைத்த உலைக்கலங்களின் மீது நடத்திய உலோகவியல் ஆய்வு இதனை உறுதி செய்துள்ளது என்கிறார் அவர்(பக்130). எனவே, எஃகு இரும்பும், வார்ப்பு இரும்பும் அன்றே தமிழகத்தில் மிக அதிக அளவு செய்யப்பட்டு மேற்குலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன என்பதை இவை உறுதி செய்கின்றன என்கிறார் avarஇராசன் அவர்கள்.
 கப்பல் கட்டும் திறன், கடல் நீரோட்டம் பற்றிய அறிவு, பருவக்காற்று என்னும் இயற்கைச் சக்தியைத் தன்வயப்படுத்திக் கொள்ளுதல், இறக்குமதி நாட்டின் எதிர்பார்ப்புக்குத் தக்கவாறு பொருட்களின் தரத்தினை உயர்த்திக் கொள்ளப் பேணும் தொழில்நுட்பத் திறன், தனித்து இயங்காமல் வணிகக் குழுவாக இயங்குகின்ற தன்மை, பிற நாடுகளின் மொழி, பண்பாடு ஆகியவற்றை அறிந்து, அவற்றுடன் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டிய சமூக இணக்கம் போன்றவையே தமிழகம் சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு மேலாகப் பன்னாடுகளுடன் தொடர்ந்து வணிக உறவுகளை நிலைநிறுத்திக் கொள்ளக் காரணங்களாகும். இதற்கு பெருந்துணையாக இருந்த மிக முக்கியக் காரணி பழந்தமிழகத்தின் தொழில்நுட்ப மேன்மை தான் என்கிறார் அவர்.
  பண்டைய தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களில் பெரும்பாலானவை ஆடம்பரப் பொருட்களாகவும், இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களில் பெரும்பாலானவை அத்தியாவசியப் பொருட்களாகவும் இருப்பதைக் காணலாம். ஏற்றுமதி செய்யப்பட்டவைகளில் வாசனைத் திரவியங்களும், மலைபடு பொருட்களும், பருத்தித் துணிகளும், எஃகுப் பொருட்களும், அரிய கல்மணிகளும் முக்கியப் பொருட்களாகும். இதில் பருத்தித் துணிகளும், எஃகுப் பொருட்களும், அரிய கல்மணிகளும் பழந்தமிழர்களின் உயர்தொழில்நுட்பம் கொண்டு உருவானவைகளாகும். பண்டையத் தமிழர்கள் நேரடியாக மேலை நாடுகளுக்கும், கீழை நாடுகளுக்கும் தங்கள் சொந்தக் கப்பல்களில் பயணம் செய்து வணிகம் புரிந்துள்ளனர். அதனால் கப்பல் கட்டும் தொழில், கப்பல் பயணம் மேற்கொள்ளல் ஆகிய உயர்தொழில்நுட்ப விடயங்களிலும் பழந்தமிழர்கள் சிறந்து விளங்கினர் எனலாம்.
ஆதித்த நல்லூர் தொழில்நுட்பம்:
  ஆதித்த நல்லூர் அகழாய்வு பழந்தமிழர்களின் தொழிநுட்ப மேன்மையை வெளிப்படுத்துகிறது எனலாம். அகழாய்வின் போது பழந்தமிழ் மக்கள் பயன்படுத்திய ஆயிரக்கணக்கான பொருட்கள் கிடைத்தன எனலாம். அவைகளில் பொன்நெற்றிப்பட்டங்கள், வெண்கலக்கிண்ணங்கள், வெண்கல ஏனங்கள், மூடிகள், குடுவைகள், கிண்ணங்கள், பூச்சாடிகள், வெண்கலச் சல்லடைகள், வெண்கலச் சட்டிகள், வெண்கல அணிமணிகள், இரும்பு வாள்களும் குத்துவாள்களும், இரும்பு ஈட்டிகள் அம்புகள், இரும்புக் கோடாரிகளும், மண்வெட்டிகளும், பல்வேறுவிதமான மட்பாண்டங்கள் ஆகியன அங்கு கிடைத்த முக்கியமான பொருட்களாகும். ஆதித்த நல்லூரில் கிடைத்த பொன்நெற்றிப் பட்டங்கள் 47 கிராம் வரை இருந்தன, பெரும் பாலானாவை 20கிராம் எடைக்கு மேல் இருந்தன.
கலையழகுமிக்க வெண்கலப்பொருட்கள்:
  அழகுமிக்க வெண்கலக்கிண்ணங்கள் பல இருந்தன. ஒரு வட்டமான அழகுத்தட்டின் மீது நிற்கும் இரண்டு புலிகளின் மேல் உள்ள இரண்டு தண்டுகளின் மீது பூச்சட்டி வைக்கப்படுமாறு ஒரு வெண்கலப் பூச்சட்டி இருந்தது. இன்னொரு பூக்கிண்ணம் வளைந்த கொம்புள்ள நான்கு எருமைச் சிலைகள் மீது அமைக்கப்பட்டிருந்தது. மற்றொரு பூக்கிண்ணம் வளைந்த கொம்புள்ள நான்கு காளைச் சிலைகள் மீது அமைக்கப்பட்டிருந்தது. இவை கலையழகுடன் வடிவமைக்கப்பட்டிருந்தன. கலைஅழகுள்ள வெண்கல மூடிகள்பல கிடைத்துள்ளன.ஒரு மூடியின்மேல் வளைந்த கொம்புள்ள எருமை உள்ளது. இன்னொரு வெண்கலமூடியின் மீது கலையழகுமிக்க சேவல் நின்றுகொண்டுள்ளது. வேறொரு வெண்கலமூடியின் நடுத்தண்டில் நான்கு பறவைகள் நின்று கொண்டுள்ளன. ஒரு மூடியின்மேல் ஒரு விலங்கும் மூடியைச் சுற்றிலும் வளைவுகள், இலைகள், மொட்டுகள் ஆகியனவும் அழகுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இரண்டு மூடிகள் கிடைத்துள்ளன.
மட்பாண்டங்கள்:
 ஆதித்த நல்லூர் அகழாய்வுகளில் கிடைத்த பொருட்களில் மட்பாண்டங்களே மிக அதிக அளவில் இருந்தன. அங்கு கிடைத்த மட்பாண்டச் சில்லு ஒன்றில் ஒரு மரம், ஒருமான், ஒரு முதலை, ஒரு நாரை ஆகியவற்றுடன் ஒரு பெண் நிற்பது போன்ற புடைப்பு உருவங்களைக் கொண்ட மட்பாண்டச்சில்லு குறிப்பிடத்தக்கதாகும். இவை ஆதித்த நல்லூரின் தொழில்நுட்பம் குறித்து அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் அ. இராமசாமி அவர்கள் தெரிவித்துள்ள தரவுகளாகும்(1.அவரது நூல்: தொன்மைத்தமிழர் நாகரிக வரலாறு, டிசம்பர் 2013, பக்: 52-60. 2.ANNUAL REPORT 1902-03, 1903-04, ARCHAEOLOGICAL SURVEY OF INDIA, NEW DELHI, 2002, P. 117- 163)
செம்பு உணர் கொம்புடை வாள்கள்:
 இந்த செம்பு உணர் கொம்புடை வாள்கள்(COPPER ANTENNAE SWORD) தமிழகத்தில் மூன்று இடங்களில் கிடைத்துள்ளன. 1980ஆம் ஆண்டில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் உள்ள சாவினிப்பட்டி என்கிற சிற்றூரில் ஒரு வாள் முதலில் கிடைத்தது. அதன்பின், 2000ஆம் ஆண்டில் வேலூர் மாவட்டம், அப்புக்கல் என்கிற சிற்றூரில் 4000 ஆண்டு பழமை வாய்ந்த எட்டு செம்பு உணர் கொம்புடை வாள்களும், 2001ஆம் ஆண்டில் கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் உள்ள ஆனைமலைப் பகுதியில் 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த 8 செம்பு உணர் கொம்புடை வாள்களும் கிடைத்துள்ளன. இவைகள் முறையே 4000, 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என எம். காந்தி-வேலூர், சி.மகேசுவரன்-சென்னை ஆகிய இரு அருங்காட்சியகக் காப்பாட்சியர்கள் தெரிவித்துள்ளனர். இவை அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் அ. இராமசாமி அவர்கள் தெரிவித்துள்ள தரவுகளாகும்(1.அவரது நூல்: தொன்மைத்தமிழர் நாகரிக வரலாறு, டிசம்பர் 2013, பக்: 63-64; 2.M. GANDHI, COPPER ANTENNAE SWORDS OF APPUKKAL, MUSEUM’S JOURNAL , DECEMBER 2001, CHENNAI PP. 102-103; 3. LETTER FROM DR. C. MAHESWARAN, CURATOR, GOVERNMENT MUSEUM, CHENNAI)
ஆதித்த நல்லூர் புகழ்பெற்ற தொழில்நகரம்:
  ஆதித்த நல்லூரிலும், கிருட்டிணாபுரத்திலும் நடத்திய அறிவியல் ஆய்வுகள்படி, அவை சுரங்கத்தொழில் நகரங்களாக இருந்துள்ளன. அப்பகுதியில் காணப்பட்ட சுட்ட செங்கற்கள், உருக்கிய உலோகக் கசடுகள், உலையிலடப்பட்ட கரிக்கட்டைகள் பயன்படுத்தப்பட்ட தாதுமூலப்பொருட்கள் ஆகியவற்றின் அடிப்படையில், இப்பகுதியில் கிடைத்த தங்கம், இரும்பு, தாமிரம் ஆகிய உலோகங்கள் உள்ளூரிலேயே தோண்டி எடுக்கப்பட்டு உருக்கப்பட்டவைகளாகும். இரும்புத்தாதுப்பொருட்களில் டிட்டானியம், வனடியம், கார்பன் போன்ற பல தனிமங்கள் சேர்ந்திருந்ததால், இரும்பு உருக்கு ஆகிய பொருட்கள் மிகவும் உயர்ந்த தரம் வாய்ந்தவைகளாக இருந்தன. தாமிரப்பொருட்களின் தனிமக் கலவையில் உள்ளீயம் 4 முதல் 6 விழுக்காடு சேர்க்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு விழுக்காடு உள்ளீயமும் தாமிரத்தின் உறுதித்தன்மையை அதிகரிக்கச் செய்யும். அதன் காரணமாகவே அவை சேர்க்கப்பட்டிருந்தன.
  இரும்புப் பொருட்களின் தனிமக் கலவைகளில் டிட்டானியம், கார்பன், ஆக்சைடு, கார்பனேட் முதலியன சேர்க்கப்பட்டிருந்தன. உருக்குக்கலவையில் இருந்த தீதான வேதிப்பொருட்களை நீக்கும் தன்மையுள்ள வெண்ணாகம் உருக்கை உயர் விறைப்புத்தன்மையுடன் இழுக்க உதவும். எளிய கார்பன் உருக்கைவிட எவ்விதத் தீங்குல் இல்லாமல் மிகப்பெருஞ்சூட்டில் உருக்கை உறுதிப்படுத்த வெண்ணாகம் உதவுகிறது. ஆதலால் கிட்டத்தட்ட ஒரு விழுக்காடு அளவு வெண்ணாகம் உருக்குக் கலவையில் சேர்க்கப்பட்டிருந்தது.
  பி.சசிசேகரன், எசு.சுந்தரராசன், தி.வெங்கட்ராவ், பி.இரகுநாதராவ், எசு.பத்ரி நாராயணன், எசு.இராசவேல், தி.சத்தியமூர்த்தி, ஆர்.கே.கார்சியா ஆகிய தொல்லியல் வல்லுநர்களும், அறிவியல் அறிஞர்களும் ஆதித்த நல்லூரிலும், கிருட்டிணாபுரத்திலும் பல்வேறு ஆய்வுகளை நடத்தியபின் இந்த இரண்டு ஊர்களிலும் தொன்மைக்காலத்தில் நிலத்தின் மேற்பகுதியிலேயே நீண்ட தொலைவுக்குச் சுரங்கங்கள் இருந்தன என அறிவித்துள்ளனர். அங்கு நடைபெற்ற சுரங்கத்தொழில் பற்றியும், அந்தச் சுரங்கங்களில் கிடைத்த உலோகங்களின் தன்மைகள் பற்றியும் அவர்களுடைய அறிக்கையில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. ஆதித்த நல்லூரிலும், கிருட்டிணாபுரத்திலும் நடந்த சுரங்கத்தொழில் பற்றிய இவை அனைத்தும் அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் அ. இராமசாமி அவர்கள் தெரிவித்துள்ள தரவுகளாகும்(1.அவரது நூல்: தொன்மைத்தமிழர் நாகரிக வரலாறு, டிசம்பர் 2013, பக்: 88-93. 2.B.SASISEKARAN et al. ADICHANALUR: A PREHISTORIC MINING SITE, INDIAN JOURNAL OF HISTORY OF SCIENCE, 45. 3 (2010) PP. 369- 394 3.D. VENKAT RAO et al., RECENT SCIENTIFIC STUDIES AT ADICHANALLUR: A PRE HISTORIC MINING SITE , IN SANGAM: NUMISMATICS AND CULTURAL HISTORAY, NEW ERA PUBLICATIONS, CHENNAI- 2006, PP. 146-154)
 இவ்விதமாக ஆதித்தநல்லூர் ஒரு தொழில் நகரமாக இருந்தது எனவும் அங்கு உயர் தொழில்நுட்பமிக்க உயர்தரமான இரும்பு எஃகும், பிற உலோகங்களும் தயார் செய்யப்பட்டன எனவும், VEnKALAPPORUTKAlவெண்கலப்பொருட்கள் தயாரிப்பில் அவர்கள் மிக உயர்ந்த தொழில்நுட்ப அறிவைப் பெற்றிருந்தனர் எனவும், அதனால்தான் அவர்களால் கலையழகுமிக்க மிகச் சிறந்த வெண்கலப்பொருட்களை தயாரிக்க முடிந்தது எனவும் கருதலாம். அதனால் பண்டையத் தமிழகம் தொழில்நுட்பம், பொருளுற்பத்தி, வணிகம் முதலிய பல துறைகளில் ஒரு உயர்ந்த இடத்தைப் பெற்றிருந்தது எனவும், ஆனால் இவைபற்றியப் பல செய்திகள் சங்க இலக்கியத்தில் இல்லை எனவும், அகழாய்வுத் தரவுகள் தான் இவைகளை வெளிக் கொணர்ந்துள்ளன எனவும், அந்த அகழாய்வுகளும் மிகமிகக் குறைந்த அளவே (ஒரு விழுக்காட்டிற்கும் குறைவு) நடத்தப் பட்டுள்ளது எனவும் முனைவர் கா.இராசன் அவர்கள் தெரிவிக்கிறார். ஆகவே தொடர்ந்து நடத்தப்படும் அகழாய்வுகள்தான் பண்டைய தமிழகத்தின் வளர்ந்த நாகரிகத்தை வெளிப்படுத்தும் எனலாம்.
செவ்வியல் இலக்கியமும் பன்முக வளர்ச்சியும்:
  ஒரு மொழியின் இலக்கியம் செவ்வியல் தரத்தை எட்டியுள்ளது என்றாலே, அக்காலகட்டத்தில் அம்மொழிக்கான சமூகம், அரசியல், பொருளாதாரம், வணிகம், தொழில், கலை, பண்பாடு, ஆகிய பல துறைகளிலும் ஒரு உயர் வளர்ச்சியை எட்டிய, ஒரு வரலாற்றுப் பொற்கால கட்ட சமூகமாக இருந்துள்ளது என்பதாகிவிடும் எனவும், வேறுவகையில் சொல்லப்போனால், பல துறைகளிலும் ஒரு உயர் வளர்ச்சியடையாத ஒரு மொழிச்சமூகம் செவ்வியல் தரமுடைய ஒரு இலக்கியக் காலகட்டத்தைப் படைக்க முடியாது எனவும் முன்பே குறிப்பிட்டுள்ளோம். அந்த அடிப்படையில், செவ்வியல் தரமுடைய இலக்கியங்களைப் படைத்த சங்ககாலத் தமிழ்ச் சமூகம் பல துறைகளிலும் ஒரு உயர் வளர்ச்சியை எட்டிய சமூகமாக இருந்துள்ளது. அதனை, முனைவர் கா.இராசன், முனைவர் அ. இராமசாமி போன்றவர்கள் தரும் பழந்தமிழர்களின் உயர் தொழில்நுட்ப மேன்மை, பொருளுற்பத்தி, உலகளாவிய வணிகம் பற்றிய தரவுகள் உறுதிப் படுத்துகின்றன எனலாம்.